திரை விமர்சனம்

பறந்து போ – திரை விமர்சனம்

இன்றைய குழந்தைகளின் உலகம் பெரும்பாலான பெற்றோரின் கணிப்புக்கு அப்பாற்பட்டது.குழந்தைகளுக்கான நேரம் ஒதுக்கி அவர்களிடம் நட்பு பாராட்டினால் மட்டுமே அவர்களின் அந்த பருவத்து எண்ணங்களை புரிந்து கொள்ள முடியும். அவர்களுக்குள் இருக்கும் சிக்கல்கள், அவற்றைப் பெற்றோர்கள் அணுகும் முறையிலிருக்கும் சிக்கல்கள் போன்றவற்றை கொஞ்சம் எமோஷனல், அதிக காமெடியுடன் சொல்லியிருப்பதே இந்த பறந்து போ.

மிர்ச்சி சிவா-கிரேஸ் ஆண்டனி தம்பதிகள் தங்கள் ஒரே மகன் விஷயத்தில் பெரிய கனவுடன் இருக்கிறார்கள். இதனால்குடும்பத்தின் அதிகபட்ச தேவைக்காக கணவர் சென்னையிலும் மனைவி கோவையிலுமாக வேலை, தொழில் என்று ஓடிக்கொண்டு இருக்கிறார்கள். மகன் கேட்பதை எல்லாம் வாங்கி கொடுப்பது, அவன் எது செய்தாலும் பாராட்டுவது என்று இருந்தாலும், அந்த பிஞ்சு நெஞ்சின் விருப்பமோ அவர்கள் எதிர்பாராத கோணத்தில் இருக்கிறது. அதை மகனுடனான பைக் டூரில் அறிந்து கொள்ளும் அப்பா அதன் பிறகு என்ன முடிவு எடுக்கிறார் என்பது கதைக்களம்.
இயக்குநர் ராம் படம் என்றாலே மனதுக்குள் மெலிதான சோகம் இழையோடும். இந்த படம் அதற்கு நேர் மாறாக இருக்கிறது. காட்சிக்கு காட்சி காமெடி தூவிக் கொண்டே போகிறார் இயக்குனர்.

ராம் இயக்கத்தில் மிர்ச்சி சிவாவா? என்ற ஆச்சரிய கேள்விக்கு நடிப்பில் அதே ஆச்சரியத்தை நமக்கு பரிசளிக்கிறார் சிவா. மகனின் ஒவ்வொரு சேஷ்டையிலும் மென்மையாக கண்டிக்கும் அந்த அப்பா சிவா, தேவையான இடங்களில் முதிர்ச்சியான நடிப்பையும் வெளிப்படுத்தி நிஜமாகவே ரசிகனை ஆச்சரியத்துக்கு ள்ளாக்குகிறார்.
மூன்றாவது படிக்கும் அந்த குட்டி மகன் தன்னை ஓட வைப்பதும் தவிக்க விடுவதுமாய் சின்ன சின்ன சேட்டைகளை அதிகரித்து கொண்டே போகும் இடங்களிலும் சிவாவின் அந்த அப்பா அணுகுமுறை நிஜமாகவே ஆசம்.

சிவாவின் மகனாக நடித்திருக்கும் மித்துல் ரியான், வயதுக்கு ஏற்ற குறும்புத்தனத்தால் கவர்கிறார். சிவாவின் மனைவியாக நடித்திருக்கும் மலையாள வரவு கிரேஸ் ஆண்டனி, தனது பணம் தொலைந்த நிலையில் வேலை பார்க்கும் பெண்ணை சந்தேகப்படும் இடத்தில் நடிப்பில் வெயிட் தெரிகிறது. வேலை நிமித்தமாக ஆளுக்கு ஒரு ஊரில் இருந்து கொண்டு மகனுக்காக சம்பாதிக்கிறார்கள். அதனாலேயே தம்பதிகளுக்கு ள்ளான அன் யோன்யத்தில் இடைவெளி தெரி கிறது. சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் அஞ்சலி, அவரது கணவராக நடித்திருக்கும் மலையாள நடிகர் அஜு வர்கீஸ் சம்பந்தப்பட்ட காட்சிகள் இயக்குனர் ராமின் படங்களில் வந்து போகும் குளிர் தென்றல்.

விஜய் யேசுதாஸ், சிறுமி ஜெஸ் குக்கு, தியா, ஸ்ரீஜா ரவி, பாலாஜி சக்திவேல், தேஜாஸ்வினி கதையின் ஆணிவேராக அங்கங்கே படத்தை தாங்கி நிற்கிறார்கள். இவர்களில்,’கொட்டுங்கடா இன்னும் நல்லா கொட்டுங்கடா’ என்று பேரனோடு சேர்த்து மகனுக்கும் வார்த்தைகளால் குட்டு வைக்கும் அந்த அப்பா பாலாஜி சக்திவேல் காமெடி பூகம்பமே வீசிப் போகிறது
ஒளிப்பதிவாளர் ஏகாம்பரத்தின் கேமராவில் காடுகள் மேடுகள் அழகு. கண்களில் நின்று போகிறது. இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதியின் இசையில் துண்டு துண்டு பாடல்கள் நகர்த்த உதவுகின்றன. யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை
காட்சிகளை நம்முடன் பிணைக் க்கிறது.

இயக்குநர் ராம் குழந்தைகள் படத்தை பெரியவர்களுக்கும் சேர்த்து தந்திருக்கிறார். மகனின் பள்ளித் தோழி வீட்டில் தெறிக்க தெறிக்க நடனமாடும் சிவாவை காட்டிய விதம் கோடையில் நீரோடை. சிறுவர்கள் பார்வையில் பெரியவர்களை அணுகிய விதம் இன்னும் சிறப்பு. சிறுவனின் அதிகபட்ச சேட்டைகளை கொஞ்சம் குறைத்துக் கொண்டிருக்கலாம்.
-பறந்து போ நெஞ்சுக்குள் பரம சுகம்.