3 பி எச். கே – திரை விமர்சனம்
ஒரு மிடில் கிளாஸ் ஃபேமிலியின் வீடு வாங்கும் கனவு நனவு ஆனதா என்பதே படம். மனைவி, மகன், மகள் என்று அளவான குடும்பம் வாசுதேவனுடையது. வாடகை வீடு, மகன் மகள் படிப்பு என்று வாங்கும் சம்பளம் போதாத நிலையிலும் சொந்தமாய் ஒரு வீடு வாங்கிவிட வேண்டும் என்பது வாசுதேவனின் லட்சியமாக இருக்கிறது.
அதற்காக சிறுக சிறுக பணம் சேர்க்கிறார். இதற்கிடையே குறைந்தபட்ச மார்க்கில் பாசான மகனை இன்ஜினியரிங் படிப்பில் சேர்க்க பெரும்பகுதி பணம் போகிறது.
மறுபடி கொஞ்சம் பணம் சேர்ந்தபோது மகள் திருமணம் நிச்சயம் ஆகிறது. கணிசமான கையிருப்பை அது காலி செய்கிறது. இதற்கிடையே வாசுதேவனுக்கு மாரடைப்பு வந்து கட்டாய இதய ஆபரேஷன். இப்படி பணம் சேரச் சேர, செலவுகளும் அதற்கேற்ப வந்து சேர்ந்து கொள்ள, மேலும் சோதனையாக இன்ஜினியரிங் படிப்பில் கோட்டை விட்டு வந்து கண்ணீர் சிந்துகிறான் மகன்.
இந்த நிலையிலும் பிரச்சனைகளை கடந்து வாசுதேவன் குடும்பத்தால் சொந்த வீடு வாங்க முடிந்ததா என்பது உருக்கமும் மனதுக்கு நெருக்கமுமான கிளைமாக்ஸ்.
நடுத்தர குடும்பத் தலைவன் வாசுதேவனாக வரும் சரத்குமார், அந்த கேரக்டராகவே வாழ்ந்திருக்கிறார். கேம்பஸ் இன்டர்வியூ வில் தோற்ற மகன் வீட்டில் கால் வைக்கும் போதே வீட்டு புரோக்கரிடம் அந்த வீட்டை இனி எங்களுக்காக வைத்திருக்க வேண்டாம். கேட்பவர்களுக்கு கொடுத்து விடுங்கள் என்று போனில் சொல்லிவிட்டு மொத்த குடும்பத்தையும் ஆழமாக ஒரு பார்வை பார்க்கிற இடத்தில், தன் வீடு கனவு சிதைந்த மிடில் கிளாஸ் அப்பாவை நடிப்பில் கண் முன் நிறுத்துகிறார். பிளஸ் டூவில் ஒரு பாடத்தில் மகன் தோற்று வந்து நிற்க, சூழல் புரியாமல் ‘உங்க மகன் எவ்வளவு மார்க்?’ என்று கேட்டு வந்து நிற்கும் ஹவுஸ் ஓனரிடம் ஆத்திரத்தில் வார்த்தைகளை கொட்டும் அந்த நடுத்தர குடும்ப அப்பா நிச்சயம் விருதுக்கானவர்.
சரத்குமாரின் மகனாக சித்தார்த், குடும்பத்தின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற முடியாத என்ற ஏக்கத்தையும், தொடர் தோல்வியால் துவண்டு போவதையும் தனது நடிப்பில் நேர்த்தியாக வெளிப்படுத்தியிருக்கிறார். தோற்றத்தில் பள்ளி மாணவராக கச்சிதம்.கல்லூரி மாணவருக்கும் பொருத்தமாகிறார். நிச்சயதார்த்தத்துக்கு ஒரு நாள் இருக்கும் நிலையில் ஜவுளி கடையில் தனது முன்னாள் சினேகி தியை பார்த்து தடுமாறும் இடத்தில் ‘நடிகன்யா நீ’ என்று சொல்ல வைக்கிறார்.
சரத்குமாரின் மனைவியாக தேவயானி, அதிகம் பேசாமல் முக பாவனைகள் மூலமே நடிப்பு முத்திரை பதிக்கிறார். சரத்குமாரின் மகளாக மீதா ரகுநாத் அந்தக் கனமான பாத்திரத்தில் இயல்பாக வந்து போகிறார். சித்தார்த்தின் பள்ளிப் பருவ தோழியாக வரும் சைத்ரா, முன்னாள் பள்ளி நண்பனை ஜவுளிக்கடையில் எதிர்பாராமல் சந்திக்கும் இடத்தில் தேர்ந்த நடிகையாக தன்னை பதிவு செய்து கொள்கிறார். சில காட்சிகளே என்றாலும் யோகி பாபு வரும் இடங்களில் சிரிப்புக்கு நிச்சய உத்திரவாதம்.
அம்ரித் ராம்நாத் இசையில் பாடல்கள் காதுகளை குளிர வைக்கிறது.
ஒரு நடுத்தர குடும்பத்தின் வீடு வாங்கும் கனவை நாடி பிடித்து உணர்வு பூர்வமாக தந்த விதத்தில் ஜன ர ஞ்சக ரசிகனுக்கு நெருக்கமாகி விடுகிறார்.
இந்தக் கனவு மெய்ப்படும்.
