திரை விமர்சனம்

DNA – திரை விமர்சனம்

காதல் தோல்வியால் மனமுடைந்து மதுவு க்கு அடிமையான அதர்வாவுக்கும், சூது வாது அறியாத அதேநேரம் அதிக பிரசங்கித்தனமாக நடந்து கொள்ளும் நிமிஷா சஜயனுக்கும் திருமணம் நடக்கிறது. அவர்களுக்கு ஒரு குழந்தையும் பிறக்கிறது. ஆஸ்பத்திரியில் குழந்தை பிறந்ததும் கடத்தப்பட்டு, வேறு ஒரு குழந்தை அவர்கள் வசம் தரப்படுகிறது. இது என் குழந்தை அல்ல என்கிறாள் தாய். இதுவே தான் உன் குழந்தை என்கிறது, மருத்துவமனை நிர்வாகம். முதலில் மனைவி சொன்னதை நம்பாத கணவன் அதர்வா அதன் பிறகு நம்பி போலீஸிடம் போகிறார். போலீஸ் உதவியுடன் கடத்தப்பட்ட குழந்தையை தேடும் படலம் தொடர்கிறது. குழந்தை கிடைத்ததா? குழந்தை கடத்தல் பின்னணியில் உள்ள நபர்கள் யார் என்பது திருப்பங்களுடன் கூடிய திரைக்கதை.

மதுவுக்கு அடிமையான இளைஞர், பொறுப்பான கணவர், கடத்தப்பட்ட குழந்தையை தேடி அலையும் அப்பா என ஒவ்வொரு கோணத்திலும் நடிப்பில் நமக்கு நெருக்கமாகி விடுகிறார் அதர்வா. மனைவியை பைத்தியம் என்று சொன்ன நண்பன் ரமேஷ் திலக்கை ஆத்திர வார்த்தைகளால் சுளுக்கு எடுக்கும் ஒரு இடம் போதும் இவருக்கு.

நாயகியாக நிமிஷா சஜயன். தனது திருமணம் ஒவ்வொரு முறை தள்ளிப் போகும் போதும் இவர் வெளிப்படுத்தும் ரியாக்ஷன்கள் தனி ரகம். தாயாகி இன்னொரு குழந்தையை தன் குழந்தையாக வளர்க்கும் சூழல் வரும்போது அந்த குழந்தை மீதான இவரது அன்பு கண்களில் நீர் வரவழைத்து விடுகிறது. கோவிலில் தன் குழந்தை என்று தெரியாமல் அதை வாங்கும் இடத்தில் பெற்றெடுத்த தாயின் ஒட்டுமொத்த உணர்வுகளும் தன்னை அலைக்கழிக்கும் நேரத்தில் அந்த நடிப்பும் உடல் மொழியும் நிச்சயமாக வேறு லெவல்.
பொறுப்புள்ள போலீஸ் அதிகாரியாக நடிப்பிலும் வசன உச்சரிப்பிலும் நிஜமாகவே ஆச்சரியப்படுத்துகிறார் பாலாஜி சக்திவேல்.

நாயகனின் நண்பனாக ரமேஷ் திலக், அப்பாவாக சேத்தன், மருத்துவராக ரித்விகா, வில்லனாக சுப்பிரமணிய சிவா பொருத்தமான பாத்திரத்தேர்வில் பளபளக்கிறார்கள். தொலைத்த குழந்தை கிடை த்த நேரத்தில் பரவசமாகும் தாயாக, ஐஸ்வர்யா நடிப்பு அற்புதம்யா அந்த குழந்தை கடத்தும் பாட்டியின் நடிப்புக்கு தனி சபாஷ்.

பார்த்திபனின் ஒளிப்பதிவும், ஜிப்ரானின் பின்னணி இசையும் நன்று. ஐந்து இசையமைப்பாளர்களின் இசையில் ஒலிக்கும் பாடல்கள் ஒவ்வொன்றும் தனி ரகம். கனி ரசம். எழுதி இயக்கியிருக்கிறார் நெல்சன் வெங்கடேசன். கதாநாயகன் கதாநாயகி ஆகியோரின் பாத்திரப்படைப்பை வேறுபடுத்திக் காட்டி, அதை மையக்கதையோடு அழகாக இணைக்கும் இடத்தில் சபாஷ் பெறுகிறார்.

குழந்தைகள் விசயத்தில் நாட்டில் நடக்கும் நிகழ்வுகளைக் காட்சிப்படுத்தி விழிப்புணர்வைய ஏற்படுத்தியிருக்கிறார். அந்தக் கோயில் கிளைமாக்சில் தாய் தன் குழந்தையை கண்டுபிடிப்பாளா என்ற கணநேர பதற்றம் நமக்குள் வந்து போகும் இடத்தில் மனதுக்குள் நிலையாக நின்று போகிறார் இயக்குனர்.
-வாய்மையின் வழியில் ஒரு தாய்மையின் கம்பீரம்.