திரைப்படங்கள்

குபேரா – திரை விமர்சனம்

வங்கக் கடலில் கண்டுபிடிக்கப்படும் கச்சா எண்ணெய் மூலம் லட்சம் கோடிகளை தனக்கு சொந்தமாக்கத் துடிக்கும் கோடீஸ்வர தொழிலதிபர் நீரஜ் குப்தா, அதற்காக அந்த துறை மந்திரியை சந்தித்து பேசுகிறார். அரசுக்கு சொந்தமான எண்ணெய் வளத்தை தனியார்க்கு தாரை வார்த்தால் அப்புறமாய் அவர் கோடிகளில் குளிப்பார் என்பது மந்திரிக்கு தெரியாதா என்ன… அதனால் பேரம் பேசுகிறார். ஒரு லட்சம் கோடி பணமாக கை மாறினால் இது சாத்தியம் என்கிறார். அதோடு இந்த பணத்தில் அந்த துறை சம்பந்தப்பட்ட முக்கிய நபர்களுக்கு பத்தாயிரம் கோடி என பிக்ஸ் செய்கிறார்.
இதற்கு மந்திரி போடும் ஒரே கண்டிஷன், தரும் கோடிகள் கருப்பு பணமாக அல்லாமல் வெள்ளையாக தரப்பட வேண்டும்.

இந்த டீலுக்கு சம்மதிக்கும் தொழிலதிபர், செய்யாத குற்றத்திற்காக ஜெயிலில் இருக்கும் முன்னாள் சிபிஐ அதிகாரி தீபக்கை இது விஷயமாய் சந்திக்கிறார். உன் விடுதலைக்கு நானாச்சி என்று உறுதி கொடுப்பவர், தனது செல்வாக்கால் வழக்கை ஒன்றும் இல்லாமல் செய்து அவரை வெளியே கொண்டு வருகிறார்.

கருப்பு பணத்தை வெள்ளையாக்க வேண்டும். உரியவர்களுக்கு முறையாக போய் சேர வேண்டும் என்றால், முகவரியே இல்லாத நான்கு பிச்சைக்காரர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு கோடீஸ்வர அடையாளம் கொடுத்து உரியவர்களுக்கு பணப்பரிமாற்றம் செய்யலாம் என ஆலோசனை சொல்கிறார் முன்னாள் சிபிஐ அதிகாரி. இதற்காக திருப்பதியில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் இளைஞன் தேவா உள்பட நான்கு பேர் அழைத்து வரப்படுகிறார்கள். ஒவ்வொரு பிச்சைக்காரர் மூலமாக கோடிகளில் பண பரிமாற்றம் முடிந்ததும் அவர்களை காலி பண்ணி விட வேண்டும் என்பது கோடீஸ்வரர் விருப்பம்.

அதுவும் நடந்தேறுகிறது. முன்னாள் சிபிஐ அதிகாரியின் பார்வைக்கு போகாமல், பண பரிமாற்றம் முடிந்த அதே நிமிடங்களில் அடுத்தடுத்து இரண்டு பிச்சைக்காரர்கள் கொல்லப்படுகிறார்கள்.

இப்போது எஞ்சி இருப்பது திருப்பதியில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த தேவாவும் இன்னொரு பெண்மணியும். அவள் தற்போது கர்ப்பிணியாகவும் இருக்கிறாள். தன்னோடு அவளையும் காப்பாற்றியாக வேண்டும் என்று முடிவெடுக்கும் தேவா,
அடுத்தடுத்து எடுத்து வைக்கும் ஸ்டெப்கள் தான் கதைக்களம்.

கோவில் வாசலில் பிச்சைக்கார இளைஞர் தேவாவாக அறிமுகமா கும்போதே தோற்றத்திலும் உடல் மொழியிலும் முற்றிலும் புதிய தனுஷை பார்க்க முடிகிறது. தன் மூலம் கோடிகளில் பரிவர்த்தனை நடந்து முடிந்து விட்டால் தனது உயிரும் பறிக்கப்பட்டு விடும் என்பதை உணர்ந்து கொண்ட நேரத்தில் அங்கிருந்து தப்பிப்பதும் அப்போதும் கூட முன்னாள் சிபிஐ அதிகாரியை நல்லவராக நம்புவதுமாய் புதிய வெகுளி மனுஷனை நமக்குள் கடத்தி விடுகிறார். ரஷ்மிகா மந்தனாவை வித்தியாசமான சூழலில் சந்திக்கும் இடத்தில் தொடங்கி அடுத்தடுத்து அவரை சந்திக்க வேண்டிய போதெல்லாம் நடிப்பில் பல பரிமாணங்கள். நாங்க எல்லாம் மனுசங்க இல்லையா சார் என்று கேட்கிற காட்சி தனுஷின் அந்த கேரக்டரை இன்னும் உயர்த்தி பிடிக்கிறது.
குடும்பத்தின் எதிர்காலத்துக்காக வில்லனிடம் மாட்டிக்கொண்டு தடுமாறும் முன்னாள் சிபிஐ அதிகாரி கேரக்டரில் தனது அனுபவ நடிப்பையும் சேர்த்து பரிமாறி இருக்கிறார் நாகா ர்ஜுனா.காதலன் ஏமாற்றிய நிலையில் தன்னிடம் உதவி கேட்டு வரும் தனுஷை நாயகி ராஷ்மிகா மந்தனா விரட்டியடிக்கும் இடங்கள் தொடங்கி குழந்தைக்கு புட்டிப் பால் கொடுக்கும் இடம் வரை அந்த சமீரா கேரக்டராகவே வாழ்ந்திருக்கிறார்.

கோடீஸ்வர வில்லன் நீரஜ் குப்தாவாக ஜிம் சர்ப் நடிப்பில் அந்த கேரக்டர் நிமிர்ந்து நிற்கிறது.நேர்மையான போலீஸ் அதிகாரியாக சில காட்சிகளே வந்து போனாலும் சாயாஜி ஷிண்டே தன் இருப்பை நிரூபிக்கிறார்.

தனுஷின் சீனியர் குருவாக பாக்யராஜ், மந்திரியாக ஹரிஷ் பெராடி, நாகார்ஜுனின் மனைவியாக சுனைனா, பிச்சைக்கார பெண்மணியாக வரும் திவ்யா தங்கள் கேரக்டரை உணர்ந்து திரை வலம் வருகிறார்கள்.

நிகித் பொம்மியின் கேமரா கதையின் பிரமாண்டத்துக்கு ஒளிப்பதிவில் கூடுதல் பிரம்மாண்டம் தருகிறது.தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையில் போய் வா போய் வா பாடல் சுகராகம். இயக்கிய சேகர் கம்முலா எடுத்துக்கொண்ட கதைக் கள த்துக்காகவே கொண்டாடப்பட வேண்டியவர். கோடீஸ்வரனுக்கும் பிச்சைக்காரனுக்குமான இணைப்பை மையமாக வைத்து கதை சொன்னவர், நாம் எல்லாருமே பிச்சைக்காரர்கள் தான் என்று நாயகி மூலம் சொல்ல வைத்திருப்பது கதையின் கனத்தைக் கூட்டுகிறது.
குபேரா,  குபேரன்.