மனிதர்கள் – சினிமா விமர்சனம்
மதுப் பிரியர்களான ஆறு நண்பர்கள்
காரில் பயணிக்கிறார்கள். இரவானதும் ஒரு இடத்தில் டேரா போட்டு கையோடு எடுத்து வந்திருந்த மது பாட்டில்களை காலி செய்கிறார்கள். போதையின் உச்சத்தில் அவர்களுக்கிடையே மோதல் ஏற்படுகிறது. அதில் ஒருவர் ஆயுத தாக்குதலில் பேச்சு மூச்சு இல்லாமல் போக, அவரது உடலை யாருக்கும் தெரியாமல் புதைத்து விட்டு பிரச்சனையில் இருந்து தப்பிக்க மற்றவர்கள் முடிவு செய்கிறார்கள்.
அவர்களது அந்த முடிவு அவர்களை எங்கே கொண்டு போய் விடுகிறது என்பது கிளைமாக்ஸ்.
கதையின் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் எல்லோருமே புதுமுகம். கபில் வேலவன், தக்ஷா, அர்ஜுன் தேவ் சரவணன், குணவந்தன், சாம்பசிவம் ஆகியோர் தங்கள் மிதமிஞ்சிய போதை ஒரு உயிரை காவு வாங்கி விட்டதே என்று துடித்து துவளும் காட்சிகளில் உணர்ச்சியை கொட்டி
நடித்திருக்கிறார்கள்.
நண்பர்களில் ஓரிருவர் இந்த சம்பவம் தங்களை எங்கு கொண்டு போய் விடுமோ என்ற பதட்டத்திலும், சிலர் அப்படி ஒரு சம்பவமே நடக்காத மாதிரி பத ட்டத்தை மறைப்பதிலும் காட்டும் நடிப்பு உண்மைக்கு நெருக்கமாக இருக்கிறது.
படத்தில் கொண்டாடப்பட வேண்டிய ஒருவர் ஒளிப்பதிவாளர் அஜய் ஆபிரகாம் ஜார்ஜ்.
கார் பயணத்தில் கிராமத்து திருவிழா, வழிப்பறி கொள்ளையர்கள்
என்று போய்க் கொண்டே இருக்கும் கதையின் ஒவ்வொரு காட்சியிலுமே தெரிபவர் ஒளிப்பதிவாளர் மட்டுமே. காட்சிகளை அவர் படமாக்கிய விதம் அவரைதேசிய விருது வரை கொண்டு போய் விட்டாலும் ஆச்சரியமில்லை.
இசையமைப்பாளர் அனிலேஷ் எல்.மேத்யூ இசையில் நண்பர்களின் சோகம் இன்னும் கூடித் தெரிகிறது.
எழுதி இயக்கியிருக்கும் ராம் இந்திரா, எடுத்துக்கொண்ட கதையை அங்கே இங்கே விலகாமல் நேர்கோட்டில் சொல்லி இருக்கிறார். மது அந்த ஆறு பேரையும் அவர்கள் எதிர்காலத்தையும்
என்னவாக்குகிறது என்ற அந்தக் கிளைமாக்ஸ் ஒரு மதுப்பிரியரையா வது திருத்தும் என்றால் அதுதான் இந்த படத்தின் வெற்றி.
