வீர தீர சூரன் – திரை விமர்சனம்
மதுரையைச் சேர்ந்த செல்வாக்கு மிக்க பெரியவர் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனையில் இருந்து கதை தொடங்குகிறது.அந்த பெரியவர் வீட்டில் வேலை பார்த்த கொண்டிருந்த தன் கணவரை காணோம் என்று ஒரு இளம் பெண் தன் குட்டி மகளுடன் பெரியவர் வீடு தேடி வந்து தகராறு செய்கிறாள். பெரியவரின் மூத்த மகன் அந்தப் பெண்ணை அடித்து துரத்துகிறான்.இதற்கிடையே பெரியவர் வீட்டுக்கு தன்னை தேடிப்போன மனைவியையும் குழந்தையையும் காணவில்லை என்று அவள் கணவன் போலீசில் புகார் தர…ஏற்கனவே பெரியவர் குடும்பத்தின் மீது தீரா பகையிலிருந்த அந்த ஏரியா எஸ்.பி. அருணகிரி, இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ள திட்டமிடுகிறார். பெரியவர் வீட்டுத் தோட்டத்தில் ஒரு பெண்ணின் பிணம் கிடைத்தது போல் போலியாக ஏற்பாடு செய்து பெரியவரையும் அவர் மகனையும் என்கவுண்டரில் போட்டுத்தள்ள ஸ்கெட்ச் போடுகிறார்.
இந்த தகவல் பெரிய வருக்கு தெரிய வர….மகன் ஒரு காரிலும் பெரியவர் இன்னொரு காரிலுமாக தப்பிச் செல்கிறார்கள்.இப்போது பெரியவர் நேராக சென்ற இடம் வெளியூரில் மளிகை கடை நடத்தி வரும் காளியின் இல்லம்.
ஐந்து வருடங்களுக்கு முன்பு அடிதடிக்கு அஞ்சாத காளி இதே பெரியவருக்காக அசால்டாக ஒரு கொலையும் செய்கிறான். அதன் பிறகு இப்போது மனைவி, இரு குழந்தைகள் என்று புதிய மனிதனாக சின்னதாய் ஒரு மளிகை கடை. அதில் கிடைக்கும் குறைந்தபட்ச வருமானம் என்று தன்னளவில் திருப்தியாய் வாழ்ந்து வருகிறான்.
இப்போது மீண்டும் தேடி வந்த இதே பெரியவர் இப்போது கொல்லச் சொல்வது அந்த போலீஸ் எஸ்பி. அருணகிரியை. முதலில் மறக்கும் காளி , பெரியவர் காலில் விழுந்து கேட்டபோது வேறு வழியின்றி சம்மதிக்கிறான் .
பெரியவர் குடும்பத்துக்கும் போலீஸ் எஸ்.பி. அருணகிரிக்கும் இடையே இருக்கும் பகைக்குள் சிக்கிக்கொண்ட காளி இந்த பிரச்சனையை எப்படி கையாள்கிறான்? பெரியவரின் விருப்பப்படி போலீஸ் எஸ்.பி.யை போட்டுத் தள்ளினானா? அல்லது அப்படி செய்யாமல் பெரியவரின் குடும்பத்தின் பகைக்கு ஆளானானா என்பது ஜெட் வேக திரைக்கதை.
அடி தடியை எல்லாம் ஓரம் கட்டி வைத்துவிட்டு மனைவி, பிள்ளைகள் என்று அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கும் காளியாக விக்ரம் அந்த கேரக்டரில் முழுசாக வாழ்ந்திருக்கிறார்.குடும்பத்திற்காக எந்த எல்லைக்கும் செல்லும் போது மனோதிடமிக்க மாவீரனாக மனதில் பதிகிறார்.
ஜட்டியுடன் காவல் நிலையத்திற்குள் நுழைந்து எஸ் பி.யின் கண் முன்னே தன்னை மிரட்டியவரை துப்பாக்கியால் சுட்டுப் பொசுக்குவது, ‘டேய்..’ சொன்ன இன்ஸ்பெக்டரை அந்தக் கணமே போட்டுத் தள்ளுவது என்று படம்
முழுக்க விக்ரம் ஆடி இருப்பது அதிரடி கதகளி.
மனைவியின் வார்த்தைக்கு கட்டுப்படுவது, பெரியவர் மீதான விசுவாசத்தை மீற முடியாமல் தவிப்பது என்ற இந்த இரு வேறு நிலைகளிலும் நடிப்பில் இதுவரை பார்த்திராத இன்னொரு விக்ரம் தெரிகிறார்.
விக்ரமின் மனைவி கலைவாணியாக துஷாரா விஜயன் அந்த கேரக்டரில் படம் முழுக்க தனது நடிப்பால் ஜொலிக்கிறார். கணவன் தன் சொல்லை மீறி மீண்டும் பழைய வாழ்க்கைக்கு போய்விட்டானோ என்ற தவிப்பையும் பதட்டத்தையும் கண்கள் வழியே அவர் கடத்துவது தேர்ந்த நடிப்பு. கிளைமாக்ஸ்சில் குடும்பத்தை காப்பாற்ற அவர் காட்டும் ஆவேசம் வேறு லெவல் .
எஸ் பி.அருணகிரியாக எஸ்.ஜே.சூர்யா, தனது வழக்கமான பாணியில் இருந்து விடுபட்டு நடிப்பில் புதிய முகம் காட்டி இருக்கிறார். இது ரசிக்கத்தக்க முகம். பெரியவர் குடும்பத்தின் மீதான பகையை மனதில் அடைகாக்கும் அந்த வன்மத்தை திரையில் அவர் காட்டுவது தனி அழகு.
மகனை காப்பாற்றுவதற்காக போராடும் மாருதி பிருத்விராஜ், போலீஸ் என்கவுண்டரில் இருந்து தப்பிக்க முயற்சிக்கும் அவர து மகன் சுராஜ் வெஞ்சரமூடு அவர்கள் வீட்டுகுடும்ப பெண்கள் என அனைவரும் தங்கள் நடிப்பால் காட்சிகளுக்கு மெருகேற்றுகிறார்கள்.
ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசையில் பாடல்கள் ஓகே ரகம். பின்னணி இசை மூலம் காட்சிகளில் இருக்கும் பதற்றத்தை அப்படியே நமக்குள் கடத்தி விடுகிறார்.
ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வரின் கேமரா படத்தின் இன்னொரு ஜீவன். சண்டைக் காட்சிகளில் ஸ்டண்ட் மாஸ்டர் பீனிக்ஸ் பிரபு நிஜமாகவே மிரட்டி விடுகிறார்.
எஸ். யு.அருண்குமார் இயக்கி இருக்கிறார்.
ஆக்ஷன் படம் என்றாலும், கதையை அதன் போக்கில் அதே நேரம் விறுவிறுப்பு குறையாமல் தந்த விதத்தில் தேர்ந்த கமர்சியல் இயக்குனராக தடம் பதிக்கிறார். காளியின் பிளாஷ் பேக் தொடர்பான காட்சிகள் கொஞ்சம் என்றாலும், அது படத்தின் மிகச்சிறந்த ரசனைக் களஞ்சியம். ஒரு இரவில் நடக்கும் உயிர் போராட்டங்களை பதற்றமும் பரபரப்புமாய் தந்த இரண்டாம் பாக திரைக்கதை, முதல் பாகத்தையும் இப்போதே எதிர்பார்க்க வைத்து விடுகிறது.
இந்த வீர தீர சூரன் ஆக்சன் பிரியர்களின் அதிரடி கொண்டாட்டத்துக்கு உரியவன்.