ஜென்டில் வுமன்- திரை விமர்சனம்
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த லிஜோமோல் ஜோஸை திருமணம் செய்து, தான் பணிபுரியும் சென்னைக்கு அழைத்து வருகிறார் ஹரி கிருஷ்ணன்.
எல் ஐ சி நிறுவனத்தில் பணி புரிந்து வரும் அவர் சென்னையில் ஒரு பிளாட்டில் தனது மனைவி லிஜோ மோலுடன் இனிதான இல்லறம் நடத்துகிறார். மனைவியை தங்கமாக தாங்குகிறார்.
இனிதான இல்லறம் மூன்று மாதங்களை கடந்த நிலையில் லிஜாவின் தோழியின் தங்கை ஒரு இன்டர்வியூவிற்காக சென்னை வர, கணவரின் அனுமதி பெற்று தனது இல்லத்தில் தங்க வைக்கிறார். இந்நிலையில் லிஜோமோல் கோவிலுக்குச் செல்ல, வீட்டில் தனியாக இருக்கும் இளம் பெண்ணிடம் குடிக்க வென்னீர் கேட்கிறார் ஹரிகிருஷ்ணன். அப்போது அந்தப் பெண்ணை தொடர்ந்து ஹரிகிருஷ்ணன் உடன் போகிறார். வென்னீர் போடுவதில் மும்முர மாக இருந்த அந்த பெண்ணுக்கே தெரியாமல் போய் அவள் பின்னால் நிற்கிறார்.
அப்போது எதிர்பாராமல் ஹரி கிருஷ்ணன் மேல் கொதிக்கும் வெந்நீர் கொட்டி விட… கீழே விழுந்து தலையில் அடிபட்டு மயக்க நிலைக்கு போய் விடுகிறார்.கோவிலில் இருந்து வீடு வந்த லிஜாவுக்கு , தனது கணவன் பெண் பித்தன் என்று தெரிய வர, இப்படிப்பட்ட கணவனே தேவை இல்லை என்று முடிவு செய்யும் நாயகி அவனைக் கொன்று பிரிட்ஜில் வைத்து விடுகிறாள்.
இதற்குப் பிறகு ஹரி கிருஷ்ணனை தேடி அவரது முன்னாள் காதலி வீட்டுக்கு வந்து விடுகிறாள். ஆபீஸ் விஷயமாக வெளியூருக்கு போயிருக்கிறார் என்ற லிஜாவின் பதிலில் திருப்தி இல்லாத லாஸ் லியா, ஒரு கட்டத்தில் போலீஸ் வரை போகிறார். போலீஸ் வந்து லிஜாவிடம் விசாரணை செய்தும் எந்த தகவலும் கிடைக்காமல் போக… ஒரு கட்டத்தில் தன் முன்னாள் காதலன் உயிரோடு இல்லை என்பது லாஸ்
லியாவுக்கு தெரிய வர…
அப்புறம் என்ன ஆகிறது என்பது பரபரப்புடன் கூடிய விறுவிறுப்பு கிளைமாக்ஸ்.
நாயகியாக லிஜா அந்த கேரக்டருக்குள் அப்படி பொருந்திப் போகிறார். கணவன் பெண் பித்தன் என்று தெரிய வந்த பிறகு அவன் உயிரை எடுக்கும் அளவுக்கு போனவர், அதன்பின் எதுவுமே நடக்காதது போல் இயல்பாக இருக்கும் காட்சிகள் அவரது நடிப்பில் புதுசாக இருக்கிறது. முன்னாள் காதலி லாஸ்லியாவிடம் அவர் வார்த்தைகளுக்கு வலிக்காமல் சுளுக்கு எடுக்கும் போது அந்த கேரக்டர் அவரைநடிப்பின் சிகரத்தில் தூக்கி நிறுத்துகிறது.
முன்னாள் காதலன் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டான் என்று தெரிந்த பிறகும் கண்மூடித்தனமாக அவனை விரும்பும் கேரக்டரில் லாஸ்லியா தன் பங்குக்கு நடிப்பில் சதம் அடிக்கிறார். ஹரி கிருஷ்ணனும் தனது பங்களிப்பில் தன் திரை இருப்பை நிரூபிக்கிறார். அந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் லிஜாவிடம் விசாரணை செய்யும் போது ‘நம்ம ஊரு பொண்ணு நீங்க’ என்று அடிக்கடி சொல்லும்போது கரகோஷத்தில் திரையரங்கு அதிர்கிறது.
கொலை சம்பவத்துக்கு பிறகு வரும் அடுத்தடுத்த காட்சிகள் இப்படித்தான் இருக்கும் என்று யோசிக்க முடியாத அளவுக்கு ட்விஸ்ட்க்கு மேல் ட்விஸ்ட் வைத்து ரசிகனை சீட் நுனிக்கே கொண்டு வந்ததில் இயக்குனர் ஜோஸ்வா சேதுராமன் நேர்ந்த இயக்குனராக பரிமளிக்கிறார். கோவிந்த் வசந்தாவின் இசை படத்தின் இன்னொரு பிளஸ்.
கொலை செய்துவிட்டு எப்படி இவ்வளவு ஈசியாக ஒரு பெண் கடந்து செல்ல முடியும்? என்ற கேள்விக்கு கிளைமாக்சில் குக்கர் மூலம் பதில் சொல்லி இருப்பது இயக்குனர் டச்.