சப்தம் – திரை விமர்சனம்
குன்னூர் மருத்துவக் கல்லூரி ஒன்றில் மூன்று மாணவர்கள் மர்மமான முறையில் இறக்கிறார்கள். அதனால், அந்தக் கல்லூரியில் அமானுஷ்ய சக்தி இருப்பதாக தகவல் பரவ, மாணவர்கள் மத்தியில் அச்சம். அவர்கள் அச்சத்தை போக்க
கல்லூரி நிர்வாகம், அமானுஷ்யங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளும் நாயகன் ஆதியை மும்பையில் இருந்து வரவழைக்கிறது. அவரது ஆய்வில் 42 அமானுஷ்ய சக்திகள் இருப்பது உறுதியாகிறது. அதோடு அந்தக் கல்லூரியின் பெண் பேராசிரியருக்கும் அமானுஷ்ய சக்தி பாதிப்பு இருப்பதை அவர் கண்டறியும் போது அதிர்ச்சி இன்னும் அதிகரிக் கிறது.அந்த அமானுஷ்ய சக்திகளின் நோக்கம் என்ன? என்பது நெஞ்சுக்குள் ஈரம் சொட்டும் கிளைமாக்ஸ்
நாயகனாக வரும் ஆதி அமானுஷ்ய ஆராய்ச்சியாளர் வேடத்துக்கு கன கச்சிதமாக பொருந்திப் போகிறார்.
லட்சுமி மேனனை ஒரு தீயசக்தி பின் தொடர்வதைக் கண்டுபிடிக்கும் இடத்தில் பதற்றம் இல்லாத அந்த நடிப்பில் அனுபவம் தெரிகிறது.நீண்ட இடைவெளிக்கு பிறகு திரையில் முகம் காட்டும் லட்சுமிமேனன் அந்த பேராசிரியை கேரக்டரில் கச்சிதம். ஆவி நம்பிக்கை இல்லாத அவருக்கே ஆவியின் பாதிப்பு இருப்பது தெரிய வரும்போது நடிப்பில் தான் எத்தனை வித எக்ஸ்பிரஷன்கள்.
காமெடிக்கு ரெடின் கிங்ஸ்லி. வழக்கம்போல கத்திப் பேசி ஆவிக்கு நிகராக நம்மை பயமுறுத்தி வைக்கிறார்.
பிற்பகுதியில் சிம்ரன், லைலா, அபிநயா, விவேக் பிரசன்னா, எம்.எஸ்.பாஸ்கர், ராஜீவ் மேனன்,பாத்திரங்களும் அதை அவர்கள் கையாண்ட விதமும் சூப்பர்ப். குறிப்பாக லைலாவுக்கு கிடைத்த அந்த கேரக்டர் நிஜமாகவே தமிழ் சினிமாவில் அவரை இன்னொரு தளத்துக்கு எடுத்துச் செல்லும் . ஒளிப்பதிவாளர் அருண் பத்மநாபனின் கேமரா திகில் காட்சிகளில் திக் திக் தர,
இசையமைப்பாளர் தமனின் இசையும் சப்த ஸ்வரங்களின் சப் தமாக மிரட்டியது நிஜம்.‘ஈரம்’ படத்தில் தண்ணீரை வைத்து ஆவி பயம் காட்டிய இயக்குநர் அறிவழகன், இதில் ஒலி அலைகளை வைத்து ஆவி பறக்க நம்மை மிரட்டி இருக்கிறார்.
சப்தங்கள் மூலம் ஆன்மாக்களை உணர வைத்துள்ள அந்த புது மை, திகிலோடு ரசிக்க வைக்கிறது
‘சப்தம்’ ஆவி கதை வரிசைகளில் இன்னொரு அத்தியாயம்.