கூரன் – திரை விமர்சனம்
மனிதனோ விலங்கோ எல்லோருக்கும் உயிர் ஒன்றுதான் என்பதை ஆணித்தரமாக சொல்லி இருக்கும் படம். விபத்தில் சாகடிக்கப்பட்ட தன் குட்டியின் உயிருக்கு நீதி கேட்டு நீதிமன்ற படியேறிய ஏறிய ஒரு நாயின் அதாவது தாயின் கதை இது.
கொடைக்கானலில் சாலை ஓரமாக தனது தாயுடன் நடந்து செல்லும் நாய்க்குட்டி தாறுமாறாக வந்த கார் மோதி இறந்து விடுகிறது. தனது குட்டியின் மரணத்திற்கு நியாயம் கேட்டு போராடும் தாய் நாயின் உணர்வை புரிந்து கொள்ளும் பிரபல வழக்கறிஞர் எஸ்.ஏ.சந்திரசேகர், நாயின் புகாரை ஆரம்பத்தில் ஆட்சியை படுத்திய காவல்துறையை ஏற்க வைக்கிறார். அந்த வழக்கில் வாதிட்டு தாய் நாய்க்கு நீதி வாங்கிக் கொடுக்க போராடுகிறார். அவரது போராட்டம் வென்றதா…நாய்க்கு
நீதி கிடைத்ததா என்பது கிளைமாக்ஸ்.
படத்தின் நாயகன் அந்த நாய் தான். தனது குட்டி விபத்தில் பலியானதும் காவல் நிலையம் போவது, அங்கே உதாசீனப் படுத்தப் பட்டதும் வழக்கறிஞர் சந்திரசேகரை தேடி போவது என வரும் இடமெல்லாம் அதன் செயல்பாடுகள் உற்று நோக்க வைக்கின்றன. இதுவே படத்தை வெற்றிப்பாதைக்கும் அழைத்துச் சென்று விடுகிறது.
கோர்ட்டில் சாட்சிக் கூண்டில் ஏறி நின்று நீதிபதி கேட்கும் கேள்விகளை உடனடியாக புரிந்து கொண்டு ரியாக்ஷன் கொடுக்கும் இடத்தில் இது நாயா அல்லது ரோபோவா என்ற சந்தேகம் ஒரு கணம் மனதுக்குள் வந்து போகிறது.பாதிக்கப்பட்ட நாய்க்காக நீதி கேட்கும் வழக்கறிஞர் தர்மராஜா வாக எஸ்.ஏ. சந்திரசேகர் அந்த கேரக்டரில் வாழ்ந்திருக் கிறார். கிளைமாக்சில் மதுவுக்கு எதிராக அவர் சுழற்றும் சாட்டைக்கு அரங்கம் அதிர்கிறது, கரகோஷத்தில்.
நீதிபதியாக வரும் ஒய். ஜி. மகேந்திரன் அந்த பாத்திரத்துக்கு நடிப்பால் கனம் சேர்க் கிறார்.விலங்குகள் பேசுவதை கண்டறியும் நிபுணராக சத்யன் அந்த புதிய பாத்திரத்தில் ரசிக்க வைக்கிறார்.போலீஸ் அதிகாரியாக சரவண சுப்பையா, ஐ விட்னஸ் ஆக பார்வையற்றவர் கேரக்டரில் ஜார்ஜ் மரியான், எதிர்த் தரப்பு வழக்கறிஞராக பாலாஜி சக்திவேல், வில்லனின் தந்தையாக கவிதா பாரதி, இன்ஸ்பெக்டராக அருவி மதன். எஸ் ஏ சந்திரசேகரின் உதவியாளராக இந்திரஜா பொருத்தமான பாத்திரத்தேர்வுகள். சித்தார்த் விபின் இசையில் பாடல்கள் மனதை ஆக்கிரமிக்கின்றன
வில்லனாக நடிக்கும் ந நித்தின் வேமுபதியே படத்தை இயக்கவும் செய்திருக்கிறார். நடிப்பில் கோட்டை விட்டாலும் இயக்கத்தில் கோட்டை கட்டி இருக்கிறார். குறிப்பாக கோர்ட் காட்சியில் திருப்பத்துக்கு மேல் திருப்பம் தந்து கிளைமாக்ஸ் வரை படத்தை எதிர்பார்க்க வைத்து விடுகிறார்.
இந்தக் கூரன், கூர்மையான திறனால் பிரமிக்க வைக்கிறான்..