திரை விமர்சனம்

ஒத்த ஓட்டு முத்தையா – திரை விமர்சனம்

ஒத்த ஓட்டு முத்தையா எப்படி மொத்த ஓட்டு முத்தையாவாக மாறுகிறார் என்பதை காமெடி கலந்து சொல்லி இருக்கும்படம். நீண்ட இடைவெளிக்கு பிறகு கவுண்டமணி நாயகன் அவதாரம் எடுத்திருக்கும் படமும் கூட.

அரசியலில் தீவிர ஈடுபாடு காட்டும் முத்தையாவுக்கு திருமண வயதில் மூன்று தங்கைகள். மூன்று தங்கைகளுக்கும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 அண்ணன் தம்பிகளுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார். அது தொடர்பாக விளம்பரமும் செய்கிறார்.
ஆனால் அவரது மூன்று தங்கைகளும் வெவ்வேறு குடும்பத்தை சேர்ந்த 3 இளைஞர்களை காதலிக்கிறார்கள். அதனால் அப்பா தங்கள் காதலுக்கு நிச்சயம் ஓகே சொல்ல மாட்டார் என்பதால் மூன்று இளைஞர்களும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதை நம்ப வைக்க போலி பெற்றோரை செட்டப் செய்கிறார்கள்.

இதே நேரம் மனைவியுடன் சிறையில் இருந்து ரிலீஸ் ஆகும் சிங்கமுத்து ஏற்கனவே சிறையில் இருந்து ரிலீஸ் ஆன மூன்று மகன்களுடன் கவுண்டமணி வீட்டுக்கு பெண் பார்க்கப் போகிறார்.

ஒன்று செட்டப் குடும்பம். இன்னொன்று போர்ஜரி குடும்பம். இந்த இரண்டில் கவுண்டமணி எந்த குடும்பத்தை தேர்வு செய்கிறார்? இதற்கிடையே மீண்டும் தேர்தல் வருகிறது. இந்த முறை எப்படியாவது வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராகி விட வேண்டும் என்ற முயற்சியில் இறங்கும் கவுண்டமணிக்கு கட்சி சீட் கொடுக்காமல் அவரது மாஜி கார் டிரைவர் யோகி பாபுக்கு சீட் கொடுத்து விடுகிறது.
அதனால் கட்சியில் இருந்து வெளியேறி சுயேட்சையாக போட்டியிடும் கவுண்டமணி
தேர்தலில் ஜெயித்தாரா? தங்கைகள் திருமணம் தடையின்றி நடந்ததா என்பது கலகலப்புடன் கூடிய கிளைமாக்ஸ்.

நாயகனாக வரும் கவுண்டமணிக்கு நடிப்பை விடவும் வசனங்கள் அதிகம். வாயை திறந்தாலே சிரிப்பு சிக்ஸர் ஆக பறக்கின்றன. ஓ.ஏ.கே. சுந்தரிடம் மோதும் இடத்தில் வார்த்தைகளில் அனல் பறக்கிறது. அதற்காக கவுண்டரை ஆக்சன் ஹீரோவாக காட்டுவதெல்லாம் ரொம்ப ஓவர் சாரே.கவுண்டருக்கு கார் டிரைவராக வரும் யோகி பாபுவும் அவ்வப்போது கிச்சுகிச்சு மூட்டுகிறார்.

அன்பு மயில்சாமி, வாசன் கார்த்திக்,கஜேஷ் நாகேஷ், ஓ.ஏ.கே. சுந்தர், மொட்டை ராஜேந்திரன், சிங்கமுத்து, ரவி மரியா, சித்ரா லக்ஷ்மன், வையாபுரி, முத்துக்காளை, கூல் சுரேஷ், சென்ராயன் என்ன நட்சத்திர பட்டியல் ரொம்பவே நீளம்.விபின் சித்தார்த் இசையில் பாடல்கள் இனிமை.

எழுதி இயக்கி இருக்கிறார் சாய் ராஜகோபால். கவுண்டமணியை முன்னிலைப்படுத்தி தமிழக அரசியலை ஒரு பிடி பிடித்து இருக்கிறார். திரைக்கதை அமைப்பில் முழுமை இல்லாத குறையை இந்த அரசியல் காமெடிகள் தான் காப்பாற்றுகின்றன.