திரை விமர்சனம்

தண்டேல் – திரை விமர்சனம்

கடலளவு காதல் கொண்ட காதல் ஜோடியில் காதலன் மீன் பிடிக்கப் போய் அந்நிய எல்லையில் மாட்டிக் கொண்டால்…
அந்த ஊரின் பாரம்பரிய தொழிலே மீன் பிடித்தல் தான். அதன்படி நாயகனும் தந்தை வழியில் மீன் பிடி தொழிலை தொடர்கிறான். வருஷத்தில் ஒன்பது மாதம் கடல் மூன்று மாதம் வீடு என்றிருக்கும் அவன் வாழ்க்கையின் ஒரே சந்தோஷம் அவனது உயிர்க் காதலி தான். தரையில் இருக்கும் மூன்று மாத காலமும் மீதி ஒன்பது மாதத்துக்கான காதலையும் சேர்த்து கொட்டுகிறார்கள் இந்த காதலர்கள்.

இதில் சோதனையாக நாயகியின் உறவுக்காரர் மீன் பிடிக்கப் போய் கடும் புயலில் படகு கவிழ்ந்து உயிரை விட…இதனால் பயந்து போகும் காதலி இனி மீன் பிடிக்க போக வேண்டாம் என்று காதலனுக்கு அன்பு கட்டளை இடுகிறாள். அப்போதைக்கு சரி என்று தலையாட்டி விட்டு காதலியிடம் சொல்லாமலே அடுத்த கடல் பயணத்துக்கு தயாராகிறான் நாயகன்.

இம்முறை கப்பல் கடும் புயலில் சிக்கி தடுமாறி அப்படியே தடம் மாறி பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று விட..
அந்த மீன் பிடி பயணத்தில் நாயகனுடன் சேர்த்து 22 பேர் சிறைப்படு கிறார்கள். இதன் பின்பு நாயகனையும் அவனுடன் சென்ற மற்றவர்களையும் மீட்கும் படலத்தை தொடங்குகிறாள் நாயகி. இதில் அவளுக்கு வெற்றி கிடைத்ததா, என்பது உணர்வும்உலைக்களமுமான திகு திகு திரைக்கதை. நாயகன்- நாயகியாக நாக சைதன்யா- சாய் பல்லவி. காதல் ஜோடியாகவே வாழ்ந்திருக்கிறார்கள். ஏற்கனவே லவ் ஸ்டோரி படத்தில் இணைந்த இந்த ஜோடி இதில் இன்னும் மனதுக்கு நெருக்கமாகிறார்கள். நாயகனாக நாக சைதன்யா. காதலி புறக்கணித்தஆற்றாமையை கடல் பயணத்தின் போது அந்த மனநிலையை உடல் மொழியில் அழகாக வெளிப்படுத்துகிறார் நாக சைதன்யா. காதலன் தன் சொல்லை மீறி மறுபடியும் மீன் பிடிக்க சென்றதால் ஏற்பட்ட கோபத்தை பிடிவாதமாக கடக்கும் இடங்களில் நாயகி சாய் பல்லவி நடிப்பில் கொடி கட்டுகிறார். தங்கள் மக்களின் சம்பளத்தை தர மறுக்கும் சேட்டிடம் மௌனப் புரட்சி நடத்தி பணத்தை வாங்கி வரும் இடம் அவர் நடிப்பில் கொண்டாடப்பட வேண்டிய இன்னொரு இடம்.

சாய் பல்லவியின் நிச்சயதார்த்த மாப்பிள்ளையாக வந்து அவரது மீனவர் மீட்பு போராட்டத்தில் உறுதுணையாக நிற்கும் வேடம் கருணாகரனுக்கு. மீட்டர் தாண்டாத அந்த நடிப்புக்கு நிச்சயம் ஒரு சபாஷ் சொல்ல வேண்டும்.

சாய் பல்லவியின் அப்பாவாக பப்லு, மீனவ நண்பராக ஆடுகளம் நரேன், அவரது கூட்டணி, பாகிஸ்தான் ஜெயில ராக பிரகாஷ் பெலவாடி என பாத்திரங்களுக்கு பொருத்தமான தேர்வு படத்தை மேலும் தூக்கி நிறுத்துகிறது.
படத்தின் இன்னொரு பலமாக அமைந்திருப்பது தேவி ஸ்ரீபிரசாத்தின் இசை. குறிப்பாக காதல் பாடல்களில் பொங்கி வழிகிறது இசை.
ஷாம்தத்தின் கேமராவில் அந்தக் கடற்கரை, கடல் பயண காட்சிகள் அத்தனையும் அத்துணை அழகு.சந்து மோண்டட்டி இயக்கி இருக்கிறார். கடலோர கிராமத்து காதலை அழகுற சொன்னவர், பாகிஸ்தான்ஜெயில் அதிகாரிகளின் மனிதநேயத்தைகாட்சிப்படுத்தும்இடத்திலும் சிறப்பான இயக்கம். பாகிஸ்தான் கலவரத்தில் இந்திய கைதிகள் 22 பேரும் சிறு காயம் கூட படாமல் ஜெயிலுக்கு திரும்பி வரும் இடத்தில் இதை எப்படி நம்புவது என்று மனசு கேட்கிறது. அது மாதிரி காதலன் மீதுள்ள கோபத்தில் வேறு மாப்பிள்ளைக்கு கழுத்தை நீட்ட நாயகி முடிவு செய்வதெல்லாம் போங்கு சாரே… போங்கு.

இப்படி சிற்சில குறைகளை தவிர்த்து பார்த்தால் இந்தத் தண்டேல் ரசிக்கத்தக்கவனே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *