திரை விமர்சனம்

சொர்க்கவாசல் – திரை விமர்சனம்

சிறைச்சாலையில் பெரிய ரவுடியாக இருக்கும் சிகாமணி (செல்வராகவன்)திருந்தி வாழ ஆசைப்படுகிறார். தன் ஆதரவாளர்களிடம் சிறைக்குள் எந்த பிரச்சினையும் செய்யக்கூடாது என்று வழிநடத்தவும் செய்கிறார்.இந்த சூழலில் செய்யாத கொலைக்காக ஜெயிலுக்கு வருகிறார் பார்த்திபன்.( ஆர்.ஜே. பாலாஜி )சிறைச்சாலையின் கடும் உக்கிரம் பார்த்திபனை ரொம்பவே பாதிக்கிறது.இந்த சமயத்தில் புதிதாக பணிக்கு வரும் துணை ஜெயிலர் சுனில் குமாருக்கு (ஷரா புதீன் ) மொத்த சிறையையும் அடக்கியாளும் சிகாமணி மீது ஆத்திரம் ஏற்படுகிறது. சிகாமணியின் சிறை ஆளுமை அவரது அதிகாரத்தையே சீண்டி பறப்பதாக எண்ணுகிறார்.

இந்நிலையில், தான் குற்றமற்றவன் என்பதை நிரூபித்து ஜெயிலில் இருந்து வெளியேற துடித்துக் கொண்டிருக்கும் பார்த்திபனை தனது வலைக்குள் இழுக்கிறார் துணை ஜெயிலர். சிகாமணிக்கு பேதி மாத்திரை கலந்த உணவை கொடுத்தால் பார்த்திபன் விடுதலைக்கு தான் கேரண்டி என்கிறார். பேதி மாத்திரை கை மாறுகிறது. சாப்பிட்ட கொஞ்ச நேரத்தில் வயிற்று வலியால் துடி துடிக்கும் சிகாமணி இறந்து போகிறார். இதன் பிறகு ஜெயிலே தீப்பிடித்த மாதிரி அப்படி ஒரு கலவரம். சிகா மணியை காவல்துறை திட்டமிட்டு கொன்று விட்டது என்று கைதிகள் நம்ப, கலவரம் கட்டுக்கடங்காததாகி விடுகிறது. சிறையில் இருந்த 2000-க்கும் மேற்பட்ட கைதிகளின் இந்த கலவரத்தில் துணை ஜெயிலர் சுனில் குமார்கொல்லப்பட, தொடர்ந்து நடந்த துப்பாக்கி சூட்டில் 100க்கும் மேற்பட்ட கைதிகள் பலியாக, கைதிகள் தாக்கியதில் பத்துக்கும் மேற்பட்ட போலீசார் உயிரை விட, கலவரங்களுக்கு மத்தியில் செய்யாத குற்றத்துக்கு ஜெயிலுக்கு வந்த பார்த்திபனின் கனவு விடுதலை ஆகிவீட்டிற்கு போகத் துடித்த அவனது கனவு எப்படி சிதைந்து போகிறது என்பது மீதி கதை.

 

1999இல் சென்னை மத்திய சிறைச்சாலையில் கைதிகளால் ஏற்பட்ட கலவரத்தில் ஜெயலலிதா ஜெயக்குமார் உயிரோடு எரித்து கொல்லப்பட்டார். கலவரத்துக்கான முழு காரணம் பாக்சர் வடிவேலுவின் கொடூர மரணம்.நடந்த சம்பவத்தை சிற்சில நகாசு வேலைகளுடன் காட்சிப்படுத்தி இருப்பது இந்த சொர்க்கவாசலின் சிறப்பு.

படத்துக்கு படம் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வரும் ஆர் ஜே பாலாஜிக்கு இதிலும் அந்த வித்தியாசம் வாய்த்திருக்கிறது. பார்த்திபன் என்ற அப்பாவி இளைஞர் கேரக்டரில் செய்யாத கோயிலுக்கு ஜெயில் வாசம் என்றதும் தடுமாறி, பின்பு அதே ஜெயிலுக்குள் நடக்கும் சதி வழக்கில் சிக்கி அதிலிருந்து மீள துடிக்கும் காட்சிகள் வரை ஒரு அப்பாவி இளைஞனின் விஸ்வரூபத்தை கண்முன் நிறுத்துகிறார். தாய்க்கும் அவருக்குமான அன்னியோன்யம், காதலி மீதான கனிவு, ஜெயிலில் தன்னை வழி நடத்திய குக்கர் மரணத்தை ஜீரணிக்க முடியாமல் கதறுவது வரை நடிப்பில் திரை மொழி ஆட்சியே நடத்தி இருக்கிறார். சிகாமணி என்ற அந்த ரவுடி கதாபாத்திரத்தில் செல்வராகவன் பொருந்தி போகிறார்.

துணை ஜெயிலர் சுனில் குமார் கேரக்டரில் ஷராபுதீன் அதிகார மையத்தின் ஆணிவேராக செயல்படும் அத்தனை இடங்களிலும் நடிப்பு சிறப்பால் வசீகரிக்கிறார். துணை அதிகாரியாக கருணாஸ், விசாரணை அதிகாரியாக நட்டி, டைகர் மணியாக ஹக் கிம் ஷா,குக்கராக பாலாஜி சக்திவேல், செல்வராகவனுக்கு ஞானஸ்தானம் கொடுக்கும் பாதராக சாமுவேல் ராபின்சன், நடிகை ரோஜா ரசிகராக வந்து கதையின் திருப்புமுனைக்கு உதவும் கேரக்டரில் ரவி ராகவேந்திரா பொருத்தமான பாத்திரங்களில் பளிச் டுகிறார்கள்.

சிறைக் கலவரத்தை காட்சிப்படுத்திய விதத்தில் ஒளிப்பதிவாளர் பிரின்ஸ் ஆண்டர்சனின் கேமரா செய்திருப்பது நிஜமாகவே மாயாஜாலம். பின்னணி இசை படத்தின் இன்னொரு பலம்.

இயக்குனர் சித்தார்த் விஸ்வநாத் 25 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சிறைக் கலவரத்தை கதைக்களமாக எடுத்துக் கொண்டு அதை பதட்டத்துக்கு பஞ்சம் இல்லாமல் சொன்ன விதத்தில் இயக்குனராக ஜெயித்திருக்கிறார்.

சொர்க்கவாசல் வித்தியாசமான கதைகளை விரும்புவர்களுக்கான சிறப்பு திரை வாசல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *