திரை விமர்சனம்

நிறங்கள் மூன்று – திரை விமர்சனம்

மூன்று மனிதர்களின் முகம் வேறு. செயல் வேறு. அது எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தி வைக்கிறது என்பதை சொல்லியிருக்கும் படம்.

இயக்குனர் ஆக வேண்டும் என்ற வெறியுடன் திரியும் ஒரு உதவி இயக்குனர். சாதாரண புகார் என்றாலும் அதில் காசு பார்க்க துடிக்கும் ஒரு போலீஸ் அதிகாரி. ஒரு பொறுப்பான பள்ளி ஆசிரியரின் மறுபக்கம்…இந்த மூன்று கதாபாத்திரங்களோடு காணாமல் போன காதலியை தேடி அலையும் ஒரு மாணவனும் இணைந்து கொள்ள…போகிற போக்கில் இந்த மூன்று குடும்பங்களும் ஒரே புள்ளியில் எப்படி இணைகிறது என்பது கதை.

உதவி இயக்குனர் கேரக்டரில் கச்சிதமாக பொருந் ந்தியிருக்கிறார் அதர்வா. தனது கதை தன் கண்முன்னே பிரபல இயக்குனர் இயக்கத்தில் படமாவது கண்டு கொதிக்கும் இடங்களில் அந்த கேரக்டருக்கான நடிப்பு நியாயம் செய்து விடுகிறார் அதர்வா. ஆனால் பல இடங்களில் இவரை போதை மருந்து அடிக்டாக காட்டியிருக்க வேண்டுமா என்ற கேள்வியும் எழாமல் இல்லை.

காவல்துறை அதிகாரியாக வரும் சரத்குமார் அந்த எதிர்மறையான கேரக்டரில் தேர்ந்த நடிப்பை வழங்கி இருக்கிறார். மந்திரி மகனை கைது செய்யும் விவகாரத்தில் நான் எங்கே பணம் வாங்கினேன் என்று மந்திரிடமே கேட்கும் இடம் பகீர் ரகம்.
பள்ளியில் நல்லாசிரியர். வீட்டிலோ மனைவியிடம் முரண்பாடு என்ற இரட்டை நிலை மனிதனை நடிப்பில் அப்படியே பிரதிபலித்து இருக்கிறார் ரகுமான். காதல் ஜோடிகளாக துஷ்யந்த்-அம்மு அபிராமி.

டீக்கடை சின்னி ஜெயந்த், டைரக்டர் ஜான் விஜய் பொருத்தமான பாத்திரத்தில் நிலைக்கிறார்கள். சினிமாவில் கதை திருடர்கள், மது போதையில் மனைவிக்கும் மகளுக்கும் வித்தியாசம் தெரியாத மனித மிருகங்கள், கிடைத்த அதிகாரத்தை பணம் சம்பாதிக்கவே பயன்படுத்தும் காக்கி சட்டை இந்த மூன்று கதாபாத்திரங்கள் வாயிலாக தான் நினைத்ததை சொல்லி விடுகிறார் இயக்குனர் கார்த்திக் நரேன்.

ஜேக்ஸ் பியானின் இசையும் டிஜோ மாமின் ஒளிப்பதிவும் இயக்குனருக்கு இதில் பக்க பலம். மனிதனின் மறுபக்கம்.