திரை விமர்சனம்

கங்குவா – திரைப்பட விமர்சனம்

2024 இல் நிகழ் காலத்தில் கதை தொடங்குகிறது.போலீசால் கண்டுபிடிக்க முடியாத நபர்களை தனது தீவிர வேட்டையாடல் மூலம் கண்டுபிடித்து கொடுத்து அதற்கான அன்பளிப்பை காவல்துறையில் பெற்றுக்கொள்ளும் பொறுப்பான(!) பணியில் இருக்கிறார், சூர்யா. அதிரடியில் அவருக்கு உதவ யோகி பாபு.

 

இதே வேலையை பிழைப்பாக நாயகி திஷாபதானியும் செய்து வருகிறார். அவருக்கு உதவியாக ரெடின் கிங்ஸ்லி.
இதற்கிடையே ஆய்வுக் கூடம் ஒன்றில் சிறுவர்களின் மூளைத் திறனை அதிகரிப்பதற்கான ஆய்வு நடக்கிறது. இந்த ஆய்வுக் கூடத்தில் இருந்து அதிசய மூளைத் திறன் கொண்ட சிறுவன் ஒருவன் தப்பி விட, ஆய்வுக்கூடம் அனுப்பி வைத்த அடியாட்கள் சிறுவனை வெறியுடன் தேட, அவனுக்கோ சூர்யாவை பார்த்த மாத்திரத்தில் இன்ப அதிர்ச்சி. சூர்யாவும் அவனைப் பார்த்த மாத்திரத்தில் அவனுக்கும் தனக்குமான இனம் புரியாத அன்யோன்யத்தை உணர்கிறார்.

ஆனால் அதற்குள் காரியம் மிஞ்சி விட , அந்த சிறுவனை ஆய்வுக் கூட அடியாட்கள் தூக்கிப் போய்விடுகிறார்கள்.சூர்யா அந்த சிறுவனை மீட்டாரா? அவருக்கும் சிறுவனுக்குமான பிணைப்பு எத்தகையது என்பது பிரமாண்டமும் அதிரடியுமான கதைக்களம்.

 

இந்த பாசப் பிணைப்பை விவரிக்கும் 1070 காலகட்ட பிளாஷ்பேக்காட்சிகள் தான் படத்தின் ஜீவநாடி.நவயுக இளைஞன், ஆதிகாலத்திய கங்குவா என இரு வேறு தோற்றங்களில் நடிகர் சூர்யா படம் முழுக்க கொட்டி இருக்கிறார் அப்படி ஒரு நடிப்பை.

கடலை சுற்றியுள்ள ஐந்து அழகான தீவுகளில் உண்டான பெருமாச்சி தீவின் இளவரசன் கங்குவாவை தோற்றம் உடல் மொழி அதிரடி என சகலத்திலும் அச்சு பிசகா மல் வெளிப்படுத்தி விடுகிறார். போர்க்களத்தில் உயிருக்கு பயப்படாத அந்த கண்கள், அதில் வெளிப்படும் ஆவேசம் நிஜமாகவே சூர்யா ஸ்பெஷல்.

மகனாக தத்து எடுத்துக் கொண்டவன் தன் உயிருக்கே உலை வைக்கப் பார்க்கும் அந்த கணத்தில் கங்குவாவை பார்க்கும் அத்தனை கண்களும் கண்ணீரால் குளம் கட்டிக் கொள்கிறது.

நாயகியாக திஷா பதானி, பக்கத்து தீவு வில்ல அரசனாக பாபி தியோல். கிளைமாக்ஸ் கப்பல் சண்டையின் போது தான் வில்லனின் முகமே நமக்கு தெரிய வருகிறது.கோவா போலீஸ் கமிஷனராக கே.எஸ்.ரவிக்குமார், நம்பிக்கை துரோக நாயகனாக நட்டி, எப்போதாவது எட்டிப் பார்த்து நாலு வார்த்தை பேசிப் போகும் கருணாஸ், போஸ் வெங்கட் போன்ற மிகச் சிலரே படத்தில் நமக்கு தெரிந்த முகங்கள்.

வெற்றி பழனிசாமியின் கேமரா தீவுகளின் அழகை கண் முன் நிறுத்துகிறது. தேவி பிரசாத் இசையில் பல இடங்களில் ஓசையே முன்னிற்கிறது.சுப்ரீம் சுந்தரின் சண்டைக் காட்சிகள் குறிப்பாக போர்க்களக் காட்சிகள் 3d உபயத்தில் அதிகம் மிரட்டுகிறது. கலை இயக்கம் தந்த மிலனின் உழைப்பு மகத்தானது.

எழுதி இயக்கிய சிவா, கதை உருவாக்கத்தில் சற்று கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம். உணர்வு பூர்வ மான சில காட்சிகள் கூட மேலோட்டமாக வந்து போவது பலவீனம். என்றாலும் சூர்யா என்ற ஒற்றை மனிதரின் அர்ப்பணிப்பு நடிப்பு படத்தை காப்பாற்றி விடுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *