லக்கி பாஸ்கர் – திரை விமர்சனம்
தீபாவளிக்கு பான் இந்தியா திரைப்படமாக வந்திருக்கிறார் இந்த லக்கி பாஸ்கர்.
கதை 1990 இல் தொடங்குகிறது. அதிகாலை வாக்கிங் முடித்து பால் பாக்கெட் வாங்க வரும் துல்கர் சல்மானை சுத்தி வளைக்கும் சிபிஐ. அப்படியே அவரை வங்கிக்கு அள்ளிக் கொண்டு போகிறது. அவரது வங்கிக் கணக்கை சோதனையிடும் சிபிஐ அதிகாரிகள் அதிர்ந்து போகிறார்கள். வங்கி கணக்கு இருப்பு மட்டும் 100 கோடிக்கு மேல் இருந்தால் அதிர்ச்சி சகஜம் தானே.
ஒரு வங்கி உதவி பொது மேலாளர் கணக்கில் இவ்வளவு பணம் எப்படி என்ற வினாக் குறியுடன் தொடங்கி வியப்புக் குறியுடன் முடிகிறது படம்.
மும்பையில் பல பல வங்கியில் மாதம் ரூ. 6000 சம்பளத்தில் கேசியராக இருக்கும் துல்கர் சல்மானுக்கு கடனாக இருப்பதோ ரூ 16,000. அடுத்து வரவிருக்கும் உதவி மேலாளர் பிரமோஷனில் சம்பளம் டபுள் ஆகும். அதை வைத்து கடனை அடைத்து விடலாம் என்று எண்ணும் சல்மானுக்கு பேரிடியாக அந்த வேலை வேறு ஒருவருக்கு போய் விடுகிறது. நொந்து போகிறார். உடைந்து போகிறது மொத்த குடும்பமும்.
இதன் பிறகு தனது நேர்மை நிலையில் இருந்து மாறுகிறார் நாயகன். வங்கியில் இரண்டு லட்சம் கடன் கேட்டு உரிய ஆவணங்கள் இல்லாததால் மறுக்கப்பட்டு இருந்த நபருக்கு வங்கி பணத்திலிருந்து 2 லட்சம் கொடுத்து உதவுகிறார். அந்த நபர் நேர்மையாக நடந்து கொண்டு லாபத்தில் குறிப்பிட்ட சதவீதம் பங்கு கொடுக்க, இந்த கூட்டணி தந்த லாபத்தில் வங்கி பணத்திலிருந்து 10 லட்சம் வரை கொடுக்கிறார்.
அதுவும் சிக்கலின்றி சீராக, அந்த நபருடன் ரகசிய கூட்டணி போட்டுக் கொள்கிறார் நாயகன். இந்த நேரத்தில் எதிர்பாராமல் உதவி பொது மேலாளர் பதவிக்கு புரமோஷன் ஆகிறார் நம்ம நாயகன். இப்போது தொழிலில் கிடைத்த லட்சங்களை பங்குச்சந்தை பிசினஸ் மூலம் கோடிகளாக்குகிறார்.
இந்த நேரத்தில் பங்குச் சந்தை மார்க்கெட்டில் தனது மேலதிகாரிகளே தன்னை பணயம் வைத்து சூதாடிக் கொண்டிருப்பது நாயகனுக்கு தெரிய வர…
அதேநேரம் சோதனையாக சிபிஐ. யும் கிடக்கிப்பிடி போட…
இந்த சிக்கலில் இருந்து நாயகன் தன்னை விடுவித்துக் கொள்ள நடத்தும் அதிரடி சாமர்த்திய ஆட்டமே இந்த லக்கி ஜாக்பாட்.
பாஸ்கர் ஆக துல்கர் சல்மான். வறுமையின் கொடூர தாண்ட வத்திலும் சரி, கோடீஸ்வரனாக ஆணவத்தை சுமக்கும் இடங்களில் சரி, மனிதர் நடிப்பில் பிரித்து மேய்ந்து இருக்கிறார். வரிய நிலையில் மனைவியிடம் அவர் காட்டும் அன்பும் பணக்கார போதையில் அதே மனைவிடம் காட்டும் கோபமும் இவர் நடிப்பில் ரொம்பவே வித்தியாசமானவை.
இவரது காதல் மனைவியாக வரும் மீனாட்சி சவுத்ரி நடிப்பில் கில்லி அடி த்து இருக்கிறார். அன்பு காதல் கோபம் ஆவேசம் என வெவ்வேறு நிலை இல்லாத நடிப்பும் அம்மணியிடம் இருந்து வெளிப்படும் விதமே தனி அழகு.
தொழில் நண்பராக வரும் ராம்கி, அலுவலக நண்பர், நாயகனின் அப்பா ஜீவனுள்ள கதாபாத்திரங்கள். நடித்தவர்களும் ஜீவன் குறையாமல் அதை கொட்டி கொடுத்திருக்கிறார்கள்.
செய்தி வழியாக ஏற்கனவே நாம் அறிந்த பங்குச் சந்தை ஊழலை மையமாக வைத்து அதில் மையப் புள்ளியாக வங்கி ஊழலை இணைத்து கதையாக தந்த விதத்தில் இயக்குனர் வங்கி அட்லூரி, தனது வாத்தி படத்துக்கு பிறகு கதை சொல்லலில் தேர்ந்த வாத்தியார் ஆகி இருக்கிறார்.