திரை விமர்சனம்

சேவகர் – திரை விமர்சனம்

பிரஜின் தனது நண்பர்களுடன் இணைந்து சமூகப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இதனால், ஊர் மக்கள் அவரிடம் பிரியம் காட்டுகிறார்கள். எந்த பிரச்சினை என்றாலும் முன்னின்று சரி செய்வதால் மக்கள் மத்தியில் மரியாதையும் கூடுகிறது.

இது உள்ளூர் அரசியல் வாதிகளுக்கு பிடிக்குமா? மக்களிடம் பிரஜினின் செல்வாக்கு அதிகரிப்பதை கண்டு எரிச்சலாகும் மந்திரியும் எம்எல்.ஏ.வும் காவல்துறையை ஏவி அவருக்கு தொல்லை கொடுக்கிறார்கள். ஆனால் பிரஜினோ காவல்துறையில் இருந்து வந்தவர்களை விரட்டியடிக்கிறார்.

இதனால் இப்போது அவரது குடும்பத்திற்கு தொல்லை கொடுக்கிறார்கள். பிரஜினின் தந்தையை தீவிரவாதி ரேஞ்சுக்கு தூக்கி வந்து அடித்து துவைக்கிறார்கள்.

வெகுண்டெழும் பிரஜின், அவர்களை ஸ்டேஷனுக்கே வந்து புரட்டியெடுக்க, இதில் உதவிஆய்வாளர் அவுட்.

 

இப்போது காவல்துறை தீவிரவாதி என்று அறிவித்து அவரை கொலை வெறியுடன் தேட…

தன்னை நிரபராதி என்று நிரூபிப்பதற்காக அதிரடி பாதையில் பயணிக்க முடிவு செய்யும் பிரஜின், தலைமறைவாக இருந்தபடி அனைத்து உண்மைகளையும் ஆதாரங்களோடு நிரூபிக்க முயற்சி மேற்கொள்கிறார்.

இதற்கிடையே உண்மையான குற்றவாளிகளுக்கு சட்ட ரீதியான தண்டனை பெற்றுத் தரும் முயற்சியில் நேர்மையான காவல்துறை அதிகாரியான போஸ் வெங்கட் ஈடுபடுகிறார். பிரஜினின் நேர்மை வென்றதா?அதற்கு நேர்மையான போலீஸ் அதிகாரியின் பங்களிப்பு என்ன என்பது அதிரடி தடாலடியுடன் கூடிய கிளைமாக்ஸ்.

 

நாயகனாக நடித்திருக்கும் பிரஜின், பொதுமக்களுக்கு நல்லது செய்பவராகவும், அநியாயத்தை தட்டிக் கேட்பவராகவும் அந்த கேரக்டரில் வசீகரிக்கிறார். கொஞ்சம் காதல், நிறைய அடிதடி என்று வரும் அந்த கேரக்டருக்கான எனர்ஜி தான் படத்தின் பெரும்பலமே. அதை சரியாக செய்து இருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் ஷானா ஒரு சில காட்சிகளே படத்தில் வந்தாலும் மனதில் நின்று போகிறார். நாயகன் மீதான அவரது காதல் கண்ணசைவிலேயே வெளிப்படும் இடங்கள் ரசனை. நாயகனின் அம்மாவாக வருபவர் மனப்பிறழ்வில் போலீஸ் அதிகாரி போஸ் வெங்கட்டை மகன் என நினைத்து நேசம் பாராட்டும் இடம் பாசக்கவிதை.

போலீஸ் அதிகாரியாக வரும் போஸ் வெங்கட் நடையும் மிடுக்கு. நடிப்பும் மிடுக்கு. அமைச்சராக வரும் ஆடுகளம் நரேன் வில்லத்தனத்தில் வேங்கையின் சீற்றம்.

இசையில் ஆர். டி.மோகன்புதுசாக தெரிகிறார். ப்ரதீப்பின் கேமரா சண்டைக் காட்சிகளில் திகில் தருகிறது.

மக்கள் நலனே தன்னலம் என்று வாழ்கிற நாயகனுக்கு நேரும் போராட்டங்களை சலிப்பின்றி சொன்ன விதத்தில் இயக்கிய சந்தோஷ் பிரதாப் கமர்ஷியல் இயக்குனர் வரிசையில் சேர்ந்து விடுகிறார்.