விஜய்யின் த.வெ.க. மாநில மாநாடு.. சைக்கிள் பேரணியை தொடங்கிய நடிகர் சௌந்தரராஜா
தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் சௌந்தரராஜா. இவர் சுந்தரபாண்டியன், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜிகர்தண்டா, பூஜை, தெறி, தர்மதுரை, றெக்க, கத்தி சண்டை, பிகில் மற்றும் பல்வேறு படங்களில் நடித்து புகழ் பெற்றவர். பிகில் படத்தில் நடிகர் விஜய்யுடன் நடித்த பிறகு அவருக்கு நெருக்கமான இவர், நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடர்பான அறிவிப்பை வெளியிட்டதில் இருந்து பல்வேறு நடவடிக்கைகளில் சௌந்தரராஜா ஈடுபட்டு வருகிறார்.
அதன்படி நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் பெயர் அறிவிக்கப்பட்டு, கட்சி கொடி அறிமுகம் செய்யப்பட்ட மறுநாளே தமிழக வெற்றிக் கழக கட்சி கொடியுடன் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலுக்கு சென்ற நடிகர் சௌந்தரராஜா கோவில் சன்னதியில் கட்சி கொடியை வைத்து சிறப்பு பூஜைகளை செய்தார். மேலும், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் குறித்து தொலைகாட்சி விவாதங்களிலும் தொடர்ச்சியாக பேசி வருகிறார்.
இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு நாளை (அக்டோபர் 27) விக்கிரவாண்டியை அடுத்த வி சாலையில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது. மாநாட்டை ஒட்டி நடிகர் சௌந்தரராஜா மற்றும் அவரது மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை சார்பில் சைக்கிள் பேரணி சென்னையில் இருந்து விக்கிரவாண்டி நோக்கி புறப்பட்டது.
நடிகர் சௌந்தரராஜா தலைமையில் மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளையை சேர்ந்த நிர்வாகிகள் சென்னையில் இருந்து விக்கிரவாண்டிக்கு மிதிவண்டியிலேயே பயணம் செய்கின்றனர். சென்னையில் இருந்து புறப்பட்டுள்ள சைக்கிள் பேரணியின் போது வழி நெடுகிலும் பல்வேறு இடங்களில் மரக்கன்று நடுவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விக்கிரவாண்டியில் மிதிவண்டி பேரணி நிறைவுபெறுகிறது.
பேரணியை முடித்துக் கொண்டதும் நடிகர் சௌந்தரராஜா தலைமையில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளையை சேர்ந்த 250 பேர் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாட்டில் கலந்து கொள்கின்றனர்.