மெய்யழகன் விமர்சனம்.. உறங்காத உறவுகள் 4.5/5
கதை..
தஞ்சாவூர் மாவட்டத்தில் நீடாமங்கலம் பகுதியில் குடும்பத்தோடு வசித்து வருகிறார் அரவிந்த்சாமி.. சொத்து பிரச்சனை காரணமாக இவரது குடும்பம் தனித்துவிடப்பட பெற்றோருடன் சென்னையில் குடியேறுகிறார்.
திருமணம் ஆகி மனைவி தேவதர்ஷினி மற்றும் மகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் அரவிந்தசாமி ஒரு கட்டத்தில் தன் சித்தி மகள் திருமணத்திற்காக தன் சொந்த ஊருக்கு வர வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.
கிட்டத்தட்ட 22 வருடங்களுக்குப் பிறகு சொந்த ஊருக்கு செல்லும் அரவிந்தசாமி அங்கு கார்த்தியை சந்திக்கிறார்.
சிறு வயது முதலே அரவிந்த்சாமி மீது அதீத பாசம் கொண்ட கார்த்தி விழுந்து விழுந்து கவனிக்கிறார்.. ஆனால் கார்த்தி யார் என்று கூட தெரியாமல் வேறு வழி இல்லாமல் அவருடன் கொஞ்சமாக பேசுகிறார்.. போன் நம்பர் கொடுப்பதை கூட தவிர்க்கிறார்.
இவர் யார்.. இவர் நமக்கு எதற்காக செய்ய வேண்டும்.. அத்தான் அத்தான் என்று சொல்கிறாரே என எவரிடமாவது கேட்க வேண்டும் என நினைக்கிறார். ஆனால் கார்த்தி எப்போதும் இவரை சுற்றிக் கொண்டே இருப்பதால் அரவிந்தசாமி வேறு வழியில்லாமல் அன்றே ஊருக்கு கிளம்ப நினைக்கிறார்.
அப்போது இரவு நேர பஸ்ஸையும் தவற விட்டுவிடுகிறார்.. வேறு வழியில்லாமல் கார்த்தி மற்றும் ஸ்ரீதிவ்யா வீட்டிற்கு செல்கிறார்.. அங்கு அவரது மனைவியும் இவரை பாசமாக கவனிக்கிறார். இவர்கள் யார் இவர்கள் ஏன் நம்மை இப்படி கவனிக்கிறார்கள்.. என குற்ற உணர்ச்சியில் இருக்கிறார்.
இதுவரை நீங்கள் என் பெயரைக் கூட சொல்லிக் கூப்பிடவில்லையே என் பெயரை சொல்லுங்கள் என கார்த்தி கேட்கிறார். காலையில் நீங்கள் கண்டிப்பாக என்னைப் பெயர் சொல்லி அழைக்க வேண்டும் என கார்த்தி கட்டளை இடுகிறார்.
இவரின் பெயர் கூட தெரியாமல் இத்தனை மணி நேரங்கள் இவருடன் உறவாடிக் கொண்டிருந்தோமே என குற்ற உணர்ச்சியில் யாரிடம் சொல்லிக் கொள்ளாமல் புறப்பட்டு விடுகிறார் அரவிந்த் சென்னைக்கு புறப்பட்டு விடுகிறார் அரவிந்தசாமி.
அதன் பிறகு என்ன நடந்தது என்ன? கார்த்தி யார் என்பதை தெரிந்து கொண்டார் அரவிந்த்சாமி? என்பதெல்லாம் படத்தின் மீதி கதை.
நடிகர்கள்…
கார்த்தி எத்தனையோ படங்களில் இது போன்ற பாசக்கார கிராமத்து இளைஞராக வந்து நம்மை கவர்ந்திருக்கிறார். அதற்கெல்லாம் மகுடம் சூட்டும் வகையில் தன் நடிப்பில் அடுத்த பரிமாணத்தை காட்டி இருக்கிறார்.. அத்தான் அத்தான் என்று உருகி காட்டும் அன்பை பார்க்கும் போது இப்படி ஒருவர் நம் மீது அன்பை காட்ட மாட்டாரா என ஏங்க வைக்கிறார்..
இப்படி அன்பை ஒருவர் காட்ட முடியுமா? நம்மீது மட்டுமல்ல இந்த நாட்டு மீதும் மக்களின் மீதும் சமூகத்தின் மீதும் ஏன் விலங்குகள் மீது கூட ஒரு அன்பை காட்ட முடியுமா? ஆகிய உணர்வுகளை என அரவிந்தசாமி தன் நவரச முகபாவனைகளில் காட்டி இருக்கிறார்.
கார்த்தி மனைவியாக ஸ்ரீதிவ்யா, அரவிந்த்சாமியின் மனைவியாக தேவதர்ஷினி, மற்றும் ராஜ்கிரண் ஜெயபிரகாஷ் பூக்கார ரேச்சல் உள்ளிட்ட அனைவரும் நடிப்பும் கவனிக்க வைக்கிறது..
தொழில்நுட்ப கலைஞர்கள்…
கோவிந்த் வசந்தா இசையில் மெல்லிய இசையை ஒவ்வொரு காட்சியிலும் காண முடிகிறது.. பாடல்கள் மட்டுமல்ல பின்னணி இசையும் கவரும் படியாக இருக்கிறது.. முக்கியமாக கமல்ஹாசன் பாடிய பாடல் மனதை உருக்க வைக்கிறது.
இடைவேளைக்கு பிறகு விறுவிறுப்பு குறைவு…. எடிட்டர் கோவிந்தராஜன் ஜல்லிக்கட்டு காட்சிகளை கொஞ்சம் ட்ரிம் செய்திருக்கலாம்..
மகேந்திரன் ஜெயராஜ் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்.. தஞ்சாவூர் கோயில் முதல் பாழடைந்த பங்களா.. ஜல்லிக்கட்டு காளை என ஒவ்வொன்றையும் அழகாகவே தன் கேமராவில் பதிவு செய்திருக்கிறார். நீடாமங்கலம் கோயில் மற்றும் அதன் வயல்வெளி அனைத்தையும் அழகாக கண்களுக்கு விருந்தளித்து இருக்கிறார்.
வன்முறை இல்லாத தமிழ் படங்களை பார்த்து நாட்களாகிவிட்டது.. இதில் துளியும் ரத்த கரை எதுவும் இல்லாமல் அன்பை மட்டுமே வைத்து உணர்வுகளுடன் உணர்வு பூர்வமான கதையை சொல்லி இருக்கிறார் இயக்குனர் பிரேம்குமார்.
வேலைக்காகவும் தொழிலுக்காகவும் சொந்த ஊரை விட்டு வெளிநாடு வெளியூர் சென்று பல இன்னல்களை சந்தித்து வாழும் மனிதர்களுக்கு இந்த படம் சமர்ப்பணம்.. இந்த படத்தை பார்த்த பிறகு நிச்சயம் ஒவ்வொருவரும் தன் சொந்த ஊருக்கு சென்று உறவுகளை சந்திப்பார்கள் என்ற நம்பிக்கை ஏற்படுத்தியிருக்கிறார் இயக்குனர் பிரேம்குமார்..
இணை தயாரிப்பாளர் ராஜசேகரும் ஒரு காட்சியில் வந்து நம்மைக் கவர்கிறார்.. குடும்பத்தினர் அனைவரும் பார்க்கக் கூடிய வகையில் இந்த படத்தை சூர்யா ஜோதிகா தயாரித்து மக்களுக்கு நல்லதொரு படைப்பாக கொடுத்திருப்பது சிறப்பு..
ஆக மெய்யழகன்… உறங்காத உறவுகள்