திரை விமர்சனம்

ரயில் விமர்சனம் 3.25/5.. விபத்தில்லா பயணம்

வடக்கன் பர்வேஸ் மெஹ்ரூ தமிழ்நாட்டில் தேனி மாவட்டத்தில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவர் நாயகன் குங்குமராஜ் & வைரமாலா வசிக்கும் ஒரே காம்பவுண்டில் மற்றொரு வாடகை வீட்டில் வசிக்கின்றார்..

மும்பையில் வசிக்கும் தன் குடும்பத்திற்காக தமிழ்நாட்டில் உழைத்து ஐந்து லட்சத்திற்கும் அதிகமான பணத்தை சேர்த்து ஒழுக்கமாக நேர்மையாக வாழ்ந்து வருகிறார்.

ஆனால் நாயகன் குங்குமராஜ் ரமேஷ் வைத்தியாவுடன் இணைந்து வேலைக்கு செல்லாமல் சரக்கு அடிப்பதும் ஊர் சுற்றுவதுமாக திரிகிறார்.. இதனால் நாயகனுடன் தாம்பத்திய உறவு கூட கொள்ளாமல் வாழ்ந்து வருகிறார் நாயகி வைரமாலா.

என்னதான் வைரமாலாவும் வடக்கனும் அக்கா தம்பியாக பழகி வந்தாலும் இவர்களுடைய நட்பு நாயகனுக்கு வெறுப்பை உண்டாக்குகிறது. ஒரு கட்டத்தில் குடித்துவிட்டு பிரச்சனை செய்யும்போது வடக்கன் இவரை தள்ளி விடுகிறார்.

இதனால் வடக்கனை போட்டுத்தள்ள தனது பங்காளியுடன் இணைந்து திட்டம் தீட்டுகிறார் நாயகன்.. அடுத்தது என்ன நடந்தது? வடக்கனை தீர்த்து கட்டினார்களா.? என்பதெல்லாம் படத்தின் மீதிக்கதை.

ஹீரோ – குங்குமராஜ்
ஹீரோயின் – வைரமாலா
வடக்கன் – பர்வேஸ் மெஹ்ரூ
வரதன் – ரமேஷ்வைத்யா
ஹீரோயின் அப்பா – செந்தில் கோச்சடை

குங்குமராஜ் ஒரு அசல் குடிகாரனாகவே வாழ்ந்திருக்கிறார்.. பரட்டை தலை நரைத்த முடி அழுக்கு சட்டை லுங்கி என கிராமத்து மனிதராக குடிகாரனை பிரதிபலிக்கிறார்.. கிளைமாக்ஸ் கட்சியில் இவரது நடிப்பு பாராட்டும்படி வகையில் உள்ளது.

வடக்கன் பர்வேஸ் மெஹ்ரூ.. தான் உண்டு தன் வேலை உண்டு தன்னை நம்பி ஒரு குடும்பம் உண்டு என்று நினைப்பில் ஒரு வேலைக்காரன் ஆகவே வாழ்ந்திருக்கிறார்.. ஒரு ஊருக்கு பிழைப்பு தேடி வந்திருக்கும் நாம் எந்த வம்பிலும் மாட்டிக் கொள்ளக் கூடாது என்று அவர் செய்யும் ஒவ்வொரு செயலும் சிறப்பாக அமைந்திருக்கிறது.

குங்குமராஜா உடன் சுற்றும் வரதனாக ரமேஷ் வைத்திய.. முரட்டு தைரியசாலியாகவும் பின்னர் பதுங்கும் கோழையாகவும் மாறுப்பட்ட நடிப்பை கொடுத்திருக்கிறார். சீரியஸான படத்தில் இவரது நடிப்பு கலகலப்பு ஊட்டுகிறது.. இவரே படத்தின் பாடல் ஆசிரியரும் கூட பாடல் வரிகளும் ரசிக்க வைக்கிறது..

ஹீரோயின் வைர மாலா மற்றும் அவரது தந்தை செந்தில் இருவரின் நடிப்புதான் இந்த படத்திற்கு கூடுதல் பலம்.

குடிகார கணவன் பொறுப்பில்லாமல் சுற்றித் திரியும்போது ஒரு குடும்பத்தை தாங்கி நிற்பதற்காக தாம்பத்யம் கூட கொள்ளாமல் குழந்தை பெற்றுக் கொள்ளாமல் இவரின் வைராக்கியம் வைரமாலாவை பாராட்ட வைக்கிறது..

ஒரு குடிகார மருமகனை தன் மகள் தலையில் கட்டி வைத்து விட்டோமோ என உள்ளம் கலங்கும் ஒரு உன்னத தந்தையாக நடித்திருக்கிறார் செந்தில் கோச்சடை.

இவர்களுடன்.. டிம்பிள் – ஷமீரா
வடக்கன் அப்பா – பிண்ட்டூ
வடக்கன் அம்மா – வந்தனா
குழந்தை – பேபி தனிஷா
திருப்புளி – சுபாஷ்
இன்ஸ்பெக்டர் – தங்கமணி பிரபு
மில் மேனேஜர் – ரமேஷ் யந்த்ரா
அக்கவுண்டண்ட் – சாம் டேனியல்
வடக்கன் ஃப்ரெண்ட் – ராஜேஷ்
கான்ஸ்டபிள் – ராமையா.. ஆகியோரின் பங்களிப்பு படத்தின் கதை ஓட்டத்திற்கு உதவியிருக்கிறது.

தயாரிப்பாளர் – வேடியப்பன்
இயக்குநர் – பாஸ்கர் சக்தி
DOP – தேனி ஈஸ்வர்
இசையமைப்பாளர் – S.J. ஜனனி
எடிட்டர் – நாகூரான் இராமச்சந்திரன்
சவுண்ட் – ராஜேஷ் சசீந்திரன்
பாடலாசிரியர் – ரமேஷ் வைத்யா

பெண் இசையமைப்பாளர் ஜனனியின் இசையும் பாடலும் வசீகரம் செய்கிறது.. முக்கியமாக தேவா பாடியுள்ள மெலோடி பாடல் தாளம் போட வைக்கிறது..

தேனீ ஈஸ்வரின் ஒளிப்பதிவு எதார்த்தத்தை அப்படியே படம் பிடித்திருக்கிறது.. எந்த விதமான சினிமா லைட்டிங் வைக்காமல் ஒரு கிராமத்து வீட்டில் இருக்கும் வெளிச்சத்தை வைத்து படத்தை நகர்த்தி இருப்பது சிறப்பு.

பிழைப்புத் தேடி தமிழகத்திற்கு வரும் வடக்கன்களை பற்றிய கதையை சொல்லி இருக்கிறார் இயக்குனர்.. அதே சமயம் இங்கே உள்ள தமிழர்களும் துபாய் சிங்கப்பூர் மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கும் மும்பை கொல்கத்தா உள்ளிட்ட மற்ற மாநிலங்களுக்கும் பிழைப்பு தேடி வருகி சென்று இருக்கின்றனர்.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் பிழைப்பு தேடி செல்கின்றனர்.. அவர்களைக் குறைத்து மதிப்பிடக்கூடாது உழைக்கும் ஒவ்வொருவரும் உயர்ந்தவரே என்பதை மையப்படுத்தி கதையை இயக்கி இருக்கிறார்.. அதற்கு வசனங்களும் பக்கபலமாக அமைந்திருக்கிறது..

யார் தமிழகத்திற்கு வந்தாலும்.. வந்தாரை வாழவைக்கும் தமிழகம்.. அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் வாழ்விலும் இறப்பிலும் இருக்கும் என்பதை அழகாக சித்தரித்து இருக்கிறார் பாஸ்கர் சக்தி.

ஆக.. ரயில்.. விபத்தில்லாத பயணம்