‘குற்றப் பின்னணி’ விமர்சனம் 4/5.. நல்ல காதல் காவலன்
பிரண்ட்ஸ் பிக்சர்ஸ் தயாரித்த ‘குற்றப் பின்னணி’.. இதில் ‘ராட்சசன்’ படத்தில் கிறிஸ்டோபர் மிரட்டிய சரவணன் நாயகனாக நடித்துள்ளார்..
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பால்காரராக வேலை செய்து வசித்து வருகிறார் சரவணன். அதிகாலை 4 மணிக்கு எழுந்து பால் வியாபாரம் செய்து வருகிறார். மற்ற நேரங்களில் வாட்டர் கேன் போட்டும் வருகிறார்.

அதிகாலை 3.30 மணிக்கு ஒரு வீட்டிற்கு சென்று செல்வி என்ற இல்லத்தரசியை தாலியால் கழுத்தை நெறித்து கொலை செய்கிறார்.. ஆனால் அந்த தாலியை மட்டும் எடுத்துச் செல்கிறார்..
எந்த துப்பும் கிடைக்காமல் போலீஸ் திண்டாடி வருகிறது.. மேலும் CCTV camera துணையுடன் தேடி வருகின்றனர்..
சில நாட்களில் அந்தப் பெண்ணின் வட்டிக்காரன் (கள்ளக்காதலனையும்) கொலை செய்கிறார்
சில தினங்களில் வேறொரு வீட்டில் பிள்ளையை சரியாக கவனிக்காத கணவன் மனைவி இருவரையும் கொலை செய்கிறார்.. (இப்படி கூட இருப்பார்களா?)
சரவணன் இப்படி கொடூரமாக கொலை செய்ய என்ன காரணம்? குற்ற பின்னணி என்ன? அவரது பின்னணி என்ன? என்பதுதான் மீதிக்கதை
நடிகர்கள்…
ராட்சசன் படத்தில் நம்மையெல்லாம் கொடூரமாக மிரட்டிய கிறிஸ்டோபர் சரவணன் தான் இந்த படத்தின் கதையின் நாயகன்.
படத்தின் ஆரம்பக் காட்சியிலேயே அவர் தாலியை வைத்து ஓர் இல்லத்தரசியை கொல்லும் அந்த காட்சி கொடூரத்தின் உச்சம்.. ஆகா இந்த படத்திலும் அதே கிறிஸ்டோபர் வந்து விட்டாரா என நாம் நினைக்கையில் அவரின் அப்பாவியான குணத்தைக் காட்டும் போதுதான் அடடா இவ்வளவு வெள்ளந்தியாக இருக்கிறாரே இவருக்கு இந்த நிலைமையா? என்ற எண்ணத் தோன்றுகிறது.
கதை நாயகன் என்றாலும் தனக்கு பாட்டு வேண்டும் என்று அடவாடி செய்யாமல் அடக்கமாக தன் கேரக்டரை செய்திருக்கிறார் சரவணன்.
மேலும் தீபாளி, தாட்சாயிணி. சிவா, ஹனிபா, பாபு, நேரு, லால், கராத்தே ராஜா மற்றும் பலர்..
நாயகிக்கு பெரிதாக வேலை இல்லை என்றாலும் தவறான இல்லத்தரசிகளாக வந்து செல்லும் அனைவருமே மரண காட்சியில் கூட நல்லதொரு நடிப்பை கொடுத்திருக்கின்றனர்.
பல படங்களில் வில்லன் அடியாளாக வில்லனாக வந்து மிரட்டிய கராத்தே ராஜா இந்த படத்தில் பாசிட்டிவ்வான நேர்மையான போலீஸ் ஆக அசத்தியிருக்கிறார்… இன்ஸ்பெக்டர் சப் இன்ஸ்பெக்டர் ஆகிய இருவருமே அதிகாரிகளுக்குள்ள ஈகோ மோதலை அழகாக காட்டி இருக்கின்றனர்.
தயாரிப்பு – ஆயிஷா – அகமல்,
கதை திரைக்கதை இயக்கம் – என்.பி. இஸ்மாயில்.
ஒளிப்பதிவு – சங்கர் செல்வராஜ்,
இசை – ஜித்,
பாடல்கள் – என்.பி.இஸ்மாயில், ஜாபர் சாதிக்,
படத் தொகுப்பு – நாகராஜ்.டி,
சண்டைப் பயிற்சி இயக்கம் – ஆக்ஷன் நூர்,
படத்தின் ஒளிப்பதிவும் இசை பணிகளும் நேர்த்தியாக அமைந்திருக்கிறது.. கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கின்றன.
வாங்க வாங்க’, ‘ஐ.ஆர்.8’ போன்ற படங்களை இயக்கிய என்.பி. இஸ்மாயில் தான் இந்த படத்தை இயக்கியிருக்கிறார்.
காம சுகத்திற்கு ஆசைப்பட்டு தவறான வழிக்கு உடந்தையாக இருக்கும் இல்லத்தரசிகளுக்கு ஓர் எச்சரிக்கை படைப்பாக தந்திருக்கிறார் இயக்குனர் இஸ்மாயில்.
கள்ளக்காதல் உறவால் தான் பெற்ற பிள்ளைகளையே கொல்ல துடிக்கும் கொடூர தாய்களை தோலுரிக்கும் விதமாக அப்பட்டமாக காட்சிகளை அமைத்திருக்கிறார் இயக்குனர்..
எந்த குற்றம் நடைபெற்றாலும் அதற்கு பின்னணியில் ஓர் சம்பவம் இருக்கும். அதனை மையப்படுத்தி குற்றப் பின்னணியை குற்றவாளிகளுக்கு ஒரு குற்ற உணர்ச்சியாக அமைத்திருக்கிறார் இயக்குனர்.
தான் கெட்டது மட்டுமல்லாமல் தன்னுடைய தவறான நடத்தையால் தங்கள் பிள்ளைகளும் பாதிக்கப்படுகிறார்கள்.. இனி எவரும் பாதிக்கப்படக்கூடாது அப்படி ஒரு நிகழ்வு நடந்தால் அதனை திருப்பி கேட்பேன் நான் திருந்தி விட மாட்டேன் என நாயகன் மூலம் தன் நியாயத்தை காட்சிகளை வைத்திருக்கிறார் இயக்குனர் இஸ்மாயில்.
