கள்வன் – திரை விமர்சனம்

சிறு சிறு திருட்டு வேலைகள் செய்யும் ஒரு வாலிபன் வாழ்க்கையில் காதலும் அரவணைப்பும் கிடைத்தால் ஏற்படும் மாற்றம் தான் கள்வன்.
டில்லி பாபு தயாரிப்பில் பி.வி.ஷங்கர் இயக்கத்தில் வந்த “கள்வன்” படத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார், பாரதிராஜா, இவானா, தீணா, ஜி.ஞானசம்பந்தம், வினோத் முன்னா முக்கிய நட்சத்திரங்கள்.
வனப்பகுதியை ஒட்டியுள்ள, யானைகள் அடிக்கடி வந்து போகும் ஆபத்துமிக்க கிராமத்தில் வசித்து வரும் நாயகன் ஜி.வி.பிரகாஷ் குமார், தனது நண்பர் தீனாவுடன் சேர்ந்து திருடுவது,மது அருந்துவது என்று ஜாலியாக சுற்றித் திரிகிறார்.

இதற்கிடையே நாயகி இவானாவை சந்திக்கிறார். காதல் வருகிறது. காதலை சொல்லப்போனால் நிராகரிப்பு தான் பதிலாக கிடைக்கிறது.
இந்த நேரத்தில் ஆதரவற்ற முதியவர் இல்லத்தில் இருக்கும் பாரதிராஜாவை தத்தெடுக்கிறார்.
காதலுக்காக தான் ஆதரவற்ற முதியவரை ஜி.வி.பிரகாஷ் குமார் தத்தெடுத்தார், என்று அவரது நண்பர் தீனா நினைக்கும் போது. தத்தெடுப்புக்கு பின்னணியில் ஜி.வி.பிரகாஷ் குமாரின் வேறு ஒரு திட்டம் பின்னிற்கிறது.

அந்த திட்டம் என்ன? , அவரது திட்டமும், காதலும் நிறைவேறியதா? என்பது தான் படத்தின் மீதிக் கதை.
காதல்,காமெடி, துரோகம்,சென்டிமென்ட் என அனைத்தும் கலந்த கலவையில் கதை காட்டுத்தனமாக மனதில் புகுந்து கொள்கிறது.
கெம்பன் என்ற அந்த கதாபாத்திரமாக ரசிகர்கள் மனதை நடிப்பால் வசீகரிக்கிறார், நாயகன் ஜி.வி.பிரகாஷ். காதல் நிராகரிப்படும் போது கலங்கும் காட்சிகளில் நடிப்பில் ஜொலிப்பவர், பாராதிராஜாவை வைத்து போடும் திட்டத்தில் வில்ல முகத்தையும் வெளிக்காட்டி மிரட்டுகிறார்
நாயகி இவானாவுக்கு ‘லவ் டுடே’ படத்துக்குப் பிறகு கனமான பாத்திரம். அதை கனம் சேர்க்கிற நடிப்பால் பெருமைப்படுத்துகிறார்.

ஜி.வி.பிரகாஷ் தாத்தாவாக தனிமையின் தவிப்பு பற்றி கலங்கும் பாரதிராஜா, நம்மையும் கலங்க வைத்து விடுகிறார்.
நாயகனின் நண்பனாக வரும் தீனா அவ்வப்போது சிரிக்க வைக்கிறார்.
ஜி.வி.பிரகாஷ் இசையில் பாடல்கள் சிறப்பு.
ரேவாவின் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம்.
வனப்பகுதி,காடு, யானை மற்றும் இயற்கை சூழ்ந்த இடங்களை அழகாக படம் பிடித்துள்ளது பி.வி.சங்கரின் கேமரா. இயக்கமும் இவரே என்றளவில் டபுள் புரமோஷன்இவருக்கு.
இந்த கள்வன் கதைச்சிறப்பில் உள்ளங்கவர் கள்வனாகி விட்டான்.
