செய்திகள்திரை விமர்சனம்

காடுவெட்டி திரை விமர்சனம்

ஒரு காதல் ஜோடிக்கு நகரத்தில் கிடைக்கும் சந்தோஷம் கிராமத்தில் கிடைக்கும் வேதனை என இரண்டையும் சொல்லி இருக்கிறார் இயக்குனர் சோலை ஆறுமுகம்.

சென்னை போன்ற சிட்டியில் வாழும் காதலர்கள் அவர்களின் பெற்றோர்கள் பொருளாதாரத்தையும் கல்வியறிவையும் வைத்து ஜோடியை சேர்த்து வைக்கின்றனர்.

ஆனால் கிராமத்துக் காதலை பொருத்தவரை இரண்டு குடும்பங்கள் மட்டும் முடிவெடுக்க முடியாது.. அந்த சமூகம் சாதி பிரிவு என அனைத்து தரப்பு மக்களும் இதற்கு சம்மதிக்க வேண்டும்.. இல்லாவிட்டால் காதலர்களுக்கு என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும் என்பதை தான் இயக்குனர் சொல்லி இருக்கிறார்.

இத்துடன் நடுநாட்டான் ஆர் கே சுரேஷ் செய்யும் சமூக சேவைகள் அந்த ஊர் மக்களின் தலைவன் என கொஞ்சம் கமர்சியல் கலந்து இந்த காடுவெட்டியை உருவாக்கி இருக்கிறார்.

கிராமத்துக் காதலர்கள் என்ன செய்தனர்.? அவர்களின் போராட்டம் என்ன? தலைவன் எப்படி உதவினான்.? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

ஆர். கே. சுரேஷ், ஜெயம் எஸ் கே கோபி, சங்கீர்த்தனா விபின், விஷ்மியா, சுப்ரமணிய சிவா, ஆடுகளம் முருகதாஸ், ஆதிரா, சுப்ரமணியன் மற்றும் பலர்..

முரட்டுத்தனமான தேகம்.. அன்பான குணம் அதிரடி நாயகன் என தனது வழக்கமான பாணியை இதிலும் பின்பற்றி இருக்கிறார் ஆர் கே சுரேஷ்..

ஒரு கட்சித் தலைவனுக்கு தளபதியாக இருந்து அவரது கட்டளைகளை நிறைவேற்றி தருபவராக பக்குவப்பட்ட நடிப்பை கொடுத்திருக்கிறார். படத்தின் கதையை மீறி வசனங்கள் நிஜ வாழ்க்கைக்கு எடுத்ததாகவே உள்ளது..

நாயகியாக சங்கீர்த்தனா விபின்.. அழகும் திறமையும் நிறைந்தவராக காணப்படுகிறார்.. இந்த படத்தில் பெரிய வாய்ப்பு இல்லை என்றாலும் இன்னும் கூடுதல் வாய்ப்புகள் அவருக்கு கிடைக்கும்.

இயக்குநரும் நடிகருமான சுப்பிரமணிய சிவா.. சிட்டியில் டாடி கிராமத்தில் அப்பா என இரு மாறுபட்ட நடிப்பை அழகாக கொடுத்திருக்கிறார்.. இரண்டுக்கும் வித்தியாசமான தோற்றங்களையும் அவர் கொடுத்திருப்பது நடிப்பின் அர்ப்பணிப்பை காட்டுகிறது.

இவர்களுடன் காதலர்களாக நடித்த இருவரும் கவனம் பெறுகின்றனர். சிட்டி காதலை விட இவர்களது கிராமத்து காதல் ரசிக்கவும் வைக்கிறது.

இயக்கம் : சோலை ஆறுமுகம்

சாதிக் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகி இருக்கிறார். ஸ்ரீகாந்த் தேவாவுடன் இணைந்து இசையமைத்திருக்கிறார்.. பாடல்களும் பாடல் வரிகளும் ரசிக்க வைக்கிறது.

சில பாடல்கள் சில சாதிய பிரிவினருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும்.. சிட்டி சீன்களாகட்டும் கிராமத்து மண்வாசனை கலந்த சீன்களாகட்டும் அனைத்தையும் அருமையாக படம் பிடித்துள்ளார் ஒளிப்பதிவாளர்..

தயாரிப்பு : மஞ்சள் ஸ்கிரீன்ஸ் சார்பில் த.சுபாஷ் சந்திரபோஸ், கே.மகேந்திரன், என்.மகேந்திரன், சி.பரமசிவம் ஜி.ராமு, சோலை ஆறுமுகம் ஆகியோர் தயாரித்துள்ளனர்.

காடுவெட்டி என்றாலே நினைவுக்கு வருவது காடுவெட்டி குரு தான்.. ஆனால் படத்தின் டைட்டில் கார்டில் எந்த சம்பந்தமும் இல்லை என்றே படத்தை தொடங்குகிறார்.. ஆனால் படம் முழுக்க பாட்டாளி மக்கள் கட்சி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்ந்த காட்சிகள் பல உள்ளன..

நேரடியாக குறிப்பிட விட்டாலும் மறைமுக காட்சிகளாக வைத்து பல வசனங்கள் மியூட் செய்யப்பட்டிருக்கிறது..

சொல்ல வந்த விஷயத்தை நேரடியாக சொல்லாமல் காதல் சாதி காடுவெட்டி கட்சித் தலைவன் என அனைத்தையும் சொல்ல முற்பட்டிருக்கிறார்.

இத்துடன் நாடகக் காதலை வளர்க்கும் ஒரு கட்சி பிரிவினரையும் சாடியிருக்கிறார் இந்த நடுநாட்டான்..

ஆக காடுவெட்டி.. கட்சி பஞ்சாயத்து