திரை விமர்சனம்

எப்போதும் ராஜா பட விமர்சனம்

பத்திரிக்கையாளர் – பிஆர்ஓ எனப் பன்முகம் கொண்ட விஜய் ‘எப்போது ராஜா’ படத்தின் மூலம் இயக்குனராக நடிகராக அறிமுகம் ஆகிறார். அவரை வாழ்த்தி இந்த பட விமர்சனத்தை தொடங்குவோம்…

நாயகன் விஜய் இரட்டை குழந்தைகள். இருவரும் தங்கள் தாய் மற்றும் தங்கையுடன் வசித்து வருகின்றனர்.

இதில் அண்ணன் போலீஸ் இன்ஸ்பெக்டர்.. தம்பி ஒரு மிகச்சிறந்த வாலிபால் பிளேயர். அண்ணனை தேசிங்கு ராஜா என்றும் தம்பியை வாலிபால் ராஜா என்றும்  அப்பகுதி மக்கள் அழைக்கின்றனர்..

பெட்டிக்கடையில் சிகரெட் வாங்கினால் கூட பணம் கொடுத்து வாங்கும் நேர்மையான போலீஸ் அதிகாரி இதனால் இவருக்கு பல பிரச்சனைகள் வருகிறது.

மற்றொருபுறம் தம்பி நாட்டுக்காக வாலிபால் விளையாடி அதில் சாதனை படைக்க வேண்டும் என விரும்புகிறார். இதனால் இவரை விளையாட விடாமல் வில்லன் கும்பல் தடுக்கிறது.

அண்ணன் தம்பி இருவரும் வாழ்க்கையில் அதன் பிறகு எப்படி முன்னேறினார்கள்? தடைகளை எப்படி உடைத்தார்கள்? என்பதுதான் படத்தின் மீதி கதை.

நடிகர்கள்…

அண்ணன் தம்பியாக விண்ஸ்டார் விஜய் முதல் படத்திலேயே யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ஆறு பாடல் காட்சிகள், ஆறு சண்டை காட்சிகள் என மக்களின் ரசனையை நம்பி களத்தில் இறங்கி இருக்கிறார்.

அண்ணனின் காதல் ஒரு பக்கம் தம்பியின் காதல் மறுபுறம் என இருவரும் போட்டி போட்டு கொண்டு டூயட் பாடி இருக்கிறார்கள். லோ பட்ஜெட் படம் என்பதால் அதற்கான தரமே உள்ளது.

விண்ஸ்டார் விஜய்யுடன் ஜோ மல்லூரி, பி.சோம சுந்தரம், லயன்குமார், பிரியா, டெப்ளினா, கும்தாஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இதில் நாயகிகள் பிரியா, டெப்ளினா, கும்தாஜ் ஆகியோர் போட்டி போட்டுக் கொண்டு கொஞ்சம் தூக்கலாகவே கவர்ச்சி மழை பொழிந்துள்ளனர்.

அதிலும் நாயகியின் இடையில் வைத்து இடைவேளை விடுகிறார் விஜய்.

இவர்களுடன் 5+ மேற்பட்ட பத்திரிக்கையாளர் நண்பர்களும் இணைந்து நடித்திருக்கின்றனர். அவர்கள் இந்த படத்தின் கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கின்றனர்.

ஓரிரு மெலோடி பாடல்கள் கவனம் ஈர்க்கின்றன… விரும்புகிறேன் பாடல் காதலர்களுக்கு பிடித்த பாடலாக இருக்கும்.

ஒளிப்பதிவில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம். தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, கோவா மற்றும் பாண்டிச்சேரியில் படமாக்கப்பட்டுள்ளது.

ஏகப்பட்ட வசனங்கள் நிச்சயம் உங்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும்..

ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த ஒருவன் தன்னை நம்பினால் எந்த சாதனையும்  படைக்கலாம் என்ற கருத்தை வலியுறுத்தி இருக்கிறார் எப்போதும் ராஜா.

வாலிபால் விளையாட்டுப் போட்டி காட்சிகள் படத்திற்கு கூடுதல் சுவாரசியத்தை கொடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *