‘கேப்டன் மில்லர்’ திரைப்பட விமர்சனம் 4/5

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு… 1930 களில் இந்த படம் நடப்பதாக திரைக்கதை அமைத்திருக்கிறார் அருண் மாதேஸ்வரன்.
அதற்கு தன்னுடைய முழு ஒத்துழைப்பை கொடுத்து வித்தியாசமான தோற்றங்களில் வந்து ரசிகர்களை மகிழ்வித்து இருக்கிறார் தனுஷ்.
கேப்டன் என்ற பெயரில் பல திரைப்படங்கள் தமிழில் வெளியானாலும் கேப்டன் பிரபாகரன் என்ற விஜயகாந்த் நடித்த படத்திற்கு எப்பொழுதும் தனி பெயரும் புகழும் உண்டு. அந்த வரிசையில் இந்த கேப்டன் மில்லர் படம் இணையும் என நிச்சயம் கூறலாம்.
அருண் மாதேஸ்வரன் – தனுஷ் கூட்டணியில் உருவான படம் ‘கேப்டன் மில்லர்’ எப்படி இருக்கிறது என்று பார்ப்போம்…
சிவராஜ்குமார் மற்றும் தனுஷ் இருவரும் அண்ணன் தம்பி.
இதில் சிவராஜ்குமார் ஆங்கிலேயரை எதிர்த்து போராடும் புரட்சியாளர். ஆனால் இவரது தம்பி தனுஷ் எதிர்த்து போராடி பயனில்லை… என்னதான் நாம் ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடினாலும் இங்கு உள்ள ராஜாக்கள் அவர்களுக்கு அடிமையானவர்களே..
எனவே அவர்களை எதிர்த்து போராடுவதில் பயனில்லை. நம்மை அவர்கள் கீழ் சாதி பிரிவினராக பார்க்கிறார்கள். எனவே ஆங்கிலேய பட்டாளத்தில் சேர ஆசைப்படுகிறேன் என்கிறார்.
ஒரு கட்டத்தில் ஆங்கிலேய ராணுவ பயிற்சி பெற்று பட்டாளத்தில் முக்கிய உறுப்பினராகிறார்.
இந்தியர்களுக்கும் ஆங்கிலேயருக்கும் நடைபெறும் போராட்ட களத்தில் இந்தியர்களைக் கொன்று குவிக்க வேண்டும் என கட்டளை இடுகிறான் ஆங்கிலயேன்.
வேறு வழியில்லாமல் கட்டளையை மீறாத தனுஷ் இந்தியர்களை கொன்று குவிக்கிறார். ஆனால் இதற்காக பின்பு வருந்துகிறார். எனவே தனக்கு கட்டளை இட்ட வீரணையும் கொன்று விடுகிறார்.
இதனால் ஒட்டுமொத்த ஆங்கிலேயர்களும் தனுஷை எதிர்க்கின்றனர். அங்கிருந்து தலைமறைவாகும் தனுஷ் என்ன செய்தார்? ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடினாரா?இந்தியர்களுக்காக என்ன செய்தார்? என்பதுதான் இந்த கேப்டன் மில்லர்.
தனுஷ்… தனுஷ் என்கிற அளவில் படம் முழுவதையும் தாங்கி இருக்கிறார் தனுஷ். ஆக்சன் ஆகட்டும்.. எதிர்த்து போராடும் குணமாகட்டும்… புரட்சியாகட்டும் என ஒவ்வொரு பிரேமிலும் ஈடுபடுத்தி உள்ளார். நீண்ட தலை முடி தாடி என வித்தியாசமாக வரும் தனுஷ் ஒரு கட்டத்தில் ராணுவ வீரனை போல மீசையை முறுக்கிக் கொண்டு கிளீன் ஷேவ் செய்து மிரட்டல் ஆகவும் வந்து நிற்கிறார்.
பிரியங்கா மோகன், நிவேதிதா சதீஷ், இளங்கோ குமரவேல், அதிதி பாலன், ஜெயபிரகாஷ், ஜான் கொக்கேன், ஸ்வாதி, ஐஸ்வர்யா ஆகியோர் கதைக்கு பக்க பலமாக இருந்து தங்கள் பங்களிப்பை சரியாக கொடுத்திருக்கின்றனர்.
வில்லனாக Edward Sonnenblick என்பவர் நடித்திருக்கிறார். கதைக்கு ஏற்ற கம்பீரத்தை கொடுத்து இருக்கிறார்.
முக்கியமாக கிளைமாக்ஸ் காட்சியில் சிவராஜ்குமார் & சந்தீப் கிஷன் இருவரின் பர்பாமன்ஸ் வேற லெவல்..
ஒளிப்பதிவாளர் சித்தார்த்தா நுனி.. இவரது பெயர் இனி அடிக்கடி தமிழ் சினிமா டைட்டில் கார்டில் இடம் பெறும். அந்த அளவிற்கு ஒளிப்பதிவில் பிரம்மாண்டத்தை கொடுத்திருக்கிறார்.
கலை இயக்குனர் ராமலிங்கத்தை பாராட்டாமல் இந்த விமர்சனத்தை முடிக்க முடியாது. 1930 களில் மக்கள் பயன்படுத்திய பொருட்கள் ஆடைகள் என அனைத்தையும் காண்பித்து தன்னுடைய கலை நுட்பத்தை நிரூபித்து இருக்கிறார்.
தனுஷ் படங்களுக்கு ஜிவி பிரகாஷ் அதிக கவனம் எடுத்துக் கொள்கிறாரோ என்ற சந்தேகம் எழுகிறது. இந்தப் படத்திலும் தன்னுடைய இசை ஆசுரன் பட்டத்திற்கு பொருத்தமாக பின்னணி இசை கொடுத்திருக்கிறார்.
பாடல்களிலும் சிறந்த அர்ப்பணிப்பை கொடுத்து இருக்கிறார் ஜிவி பிரகாஷ்.
ராக்கி & சாணிக்காயிதம் ஆகிய படங்களை இயக்கியவர் அருண் மாதேஸ்வரன். இந்த இரு படங்களிலும் அவரது மேக்கிங் ஸ்டைல் பாராட்டப்பட்டது.. ஆனால் ஒரே ஒரு குறையாக ரத்தம் தெறிக்க தெறிக்க கதையை அமைத்திருந்தார். அதை இந்த படத்திலும் செய்து இருக்கிறார் டைரக்டர்.
ஆக்சன் படம் என்றால் ரத்தம் இருக்காதா என்ன? அதுவும் ஆங்கிலேயனை எதிர்த்து போராடும் இந்தியனுக்கு இரத்தவெறி இருக்க தானே செய்யும் என்பதால் அவர் ரத்த வெறியை ஏற்றுக்கொள்ளலாம்.
திரைக்கதையை 5 அத்தியாயமாக பிரித்து வடிவமைத்து இருக்கிறார் இயக்குனர். எனவே கதைகயை எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது.
ஆக ஆக்ஷன் ரசிகர்களுக்கும் தனுஷ் ரசிகர்களுக்கும் அருண் மாதேஸ்வரன் கொடுத்த பொங்கல் விருந்து தான் இந்த கேப்டன் மில்லர்.
