திரை விமர்சனம்

கூச முனுசாமி வீரப்பன் (வெப்சீரிஸ்) விமர்சனம்

ஷரத் ஜோதி இயக்கத்தில் உருவாகியுள்ள ஆவணத் தொடர் ‘கூச முனுசாமி வீரப்பன்’. இதை தீரன் ப்ரொடக்‌ஷன் சார்பாக பிரபாவதி ஆர்.வி. தயாரித்துள்ளார்.

இந்த இணைய தொடர் ஜீ5 ஓடிடி தளத்தில் நான்கு மொழிகளில் வெளியாகியுள்ளது.

சந்தன கடத்தல் வீரப்பன் என இந்திய மக்களால் அறியப்பட்டவர் கூச முனுசாமி வீரப்பன். அவரைப் பற்றி பல படங்கள் வந்திருந்தாலும் இந்த தொடர் என்பது அவரது ஒரிஜினல் வீடியோவாக பதிவாகி அவரது பேச்சுக்களுடன் வெளியாகி உள்ளது.

1990களில் தமிழ்நாடு – கர்நாடக எல்லைகளில் உள்ள காடுகளை ஆட்சி செய்தவன் சந்தனகடத்தல் வீரப்பன்.

இதனால் போலீசுக்கு வீரப்பனுக்கும் பெரும் மோதல்கள் வெடித்தன. ஆனாலும் போலீசுக்கு தண்ணி காட்டிக் கொண்டே அந்தப் பகுதி மக்கள் ஆதரவுடன் வாழ்ந்து காட்டியவர் வீரப்பன்.

1994 – 96-களில் வீரப்பனைப் பேட்டி எடுத்தவர் நக்கீரன் கோபால். அவர் பதிவு செய்த செய்தி மற்றும் வீடியோக்களையும் இந்த தொடர் விவரிக்கிறது.

சதீஷ் ரகுநாதன் பின்னணி இசை தொடருக்கு பக்க பலம். ஒளிப்பதிவாளர் ராஜ்குமார் அடர்ந்த காடுகளைப் படமாக்கிய விதம் அருமை.

இது வெறுமனே ஆவண படமாக இல்லாமல் வீரப்பனின் வாழ்க்கையில் நடந்த சுவாரசியமான நிகழ்வுகளை தொகுப்பாகவும் வந்துள்ளது. முக்கியமாக அவரைப் பேசிய வீடியோக்களும் பதிவாகியுள்ளது இந்த தொடருக்கு சிறப்பு அம்சமாக அமைந்துள்ளது.

வீரப்பன் செய்த கொலைகள்.. அவர் ஏன் செய்தார் ? அவர் மீது போடப்பட்ட வழக்குகள் ஒரு பக்கம் இருந்த போதிலும் காவல்துறையை வீரப்பன் தாக்கியது ஏன்? அவர் செய்த படுகொலைகள் ஏன்? எனவும் இந்த தொடர் பேசியிருக்கிறது.

மேலும் பொதுமக்கள் வதை முகாம்கள், போலீஸ் செய்த சித்ரவதைகள், அந்த பகுதி மக்களின் மனநிலை, வீரப்பனின் அரசியல் என எபிசோடுகள் பலவிதம்.

நாட்டுக்குள் நடக்கும் அரசியல்.. காட்டுக்குள் நடக்கும் அரசியல்.. உள்ளூர் முதல் உலக செய்திகள் வரை அறிந்திருக்கும் வீரப்பனின் அறிவு உள்ளிட்டவைகளும் இந்த தொடருக்கு ஆச்சரியத்தை அளிக்கும் அம்சங்களாக அமைந்துள்ளன.

மலைவாழ் மக்கள் மீது போலீஸ் நிகழ்த்திய கொடூரத் தாக்குதல் கண் கலங்க வைக்கிறது.

வீரப்பன் மீது ஆயிரம் குற்றச்சாட்டுகளை போலீஸ் வைத்தாலும் போலீஸ் செய்த குற்றங்கள் யாருக்கும் தெரியவில்லை..

ஒரு போலீஸ் உயிர் அதிகாரி ஆயிரக்கணக்கில் ஆடுகளை திருடியதை ஒரு காட்டில் குறிப்பிட்டு “காசு கொடுத்து ஆடு திண்ணா நான் எதுக்கு கன்னிவெடி வைக்கிறேன்?” என்கிறார்.

இத்துடன் பத்திரிகையாளர் நக்கீரன் கோபால், வழக்கறிஞர்கள் மோகன், தமயந்தி, நடிகை ரோகினி, காவல்துறை அதிகாரி அலெக்சாண்டர், இந்து பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் என்.ராம், ஊர்கிராமமக்கள் என பலரும் வீரப்பன் குறித்து பேசுகின்றனர்.

இவையில்லாமல்… 1995இல் ஜெயலலிதா ஆட்சி.. ரஜினிக்கும் ஜெயலலிதாவிற்கும் ஏற்பட்ட மோதல்.. ரஜினியின் அரசியல் பிரவேசம்.. உள்ளிட்டவைகளும் ஆராய்ந்துள்ளது.

முழுநீள திரைப்படம் போல நேர்த்தியாக வீரப்பனின் வாழ்க்கையைச் சொல்ல முயற்சித்துள்ளார் இயக்குநர் சரத் ஜோதி.

வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது இரு மாநில அரசுகளும் நடத்திய வேட்டையில் அந்த பகுதி மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர். ஆனால் அவர்களுக்கு எந்த நிவாரணமும் வழங்கப்படவில்லை என்பதையும் இந்த தொடர் சுட்டிக் காட்டியுள்ளது.