திரை விமர்சனம்

உன் உணவு உன் உரிமை.. – அன்னபூரணி விமர்சனம் 3.75/5

நயன்தாராவின் தந்தை பட்டதாரி என்றாலும் கடவுள் பெருமாள் மீதுள்ள பக்தியாலும் சமையல் கலை மீது உள்ள ஆர்வத்தாலும் ஸ்ரீரங்கம் கோயிலில் கடவுளுக்கு சேவை செய்து சமையல் செய்து வருகிறார்.

இதனை பார்த்து வளரும் சிறுமி பூரணிக்கும் (நயன்தாரா) சமையல் கலைமீது ஆர்வம் ஏற்படுகிறது.

தந்தையின் தொழிலை கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக் கொண்டு ருசியாக சமைக்கவும் கற்றுக் கொள்கிறாள். நயன்தாராவின் சமையல் சுவை அறியும் சக மாணவர்கள் அவளை சமையல்காரி என கிண்டல் செய்கின்றனர்.

அப்போது ஸ்டார் ஹோட்டல்களில் சமையல் செய்பவர்களை அழைக்கிறார்கள் சமையல்காரி என அழைக்க மாட்டார்கள். அவர்களை CHEF என்பார்கள்.. எனவே நீயும் இந்தியாவில் பெரிய சமையல் கலைஞரான CHEF சத்யராஜ் போல ஆகிவிடு என்கின்றனர்.

இதனால் நயன்தாராவும் அந்த ஊரில் மிகச்சிறந்த சமையல் கலைஞரான கேஸ் ரவிக்குமாரிடம் சமையல் நுட்பங்களை கேட்டு அறிந்து சமைத்து வருகிறார்.

ஆனால் நயன்தாரா பெரியவளான பிறகு ஸ்ரீரங்கம் கோயிலில் கடவுளுக்கு சேவை செய்பவன் நான்.. நீ ஒரு செஃப் ஆனால் மாமிசங்களை சமைக்க வேண்டும்.. அது நம் குடும்பத்திற்கு ஒத்து வராது என தந்தை தடை விதிக்கிறார்.

அதன் பிறகு நயன்தாரா என்ன செய்தார்? தந்தை சொல்படி நடந்தாரா? தன்னுடைய லட்சிய கனவுப்படி நடந்து கொண்டாரா?என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

அன்னபூரணி என்ற கேரக்டரை போலவே படத்தையும் முழுவதுமாக தாங்கி நிற்கிறார் நயன்தாரா.. ஆசையாய் தன் லட்சிய கனவை நெருங்கும்போது தந்தை தடை விதிக்கும் போது உடைந்து போகிறார் நயன்தாரா.

அதுபோல தந்தைக்கு தெரியாமல் செப்பாக மாற நினைப்பது நயன்தாராவுக்கு மட்டுமல்ல அனைத்து பெண்களுக்கும் ஒரு ரோல் மாடல் போல தன் கேரக்டரை பிரகாசிக்க செய்கிறார்.

முக்கியமாக ஒரு விபத்தில் சுவை அறியும் திறனை இழந்த நயன்தாரா படும் கஷ்டங்கள் நம்மை கதையுடன் மேலும் ஒன்ற வைக்கிறது. அடுத்து என்ன நடக்கும்? என்று ஆர்வத்தை ஏற்படுத்துகிறது.

முக்கியமாக நோ பாயில் நோ ஆயில் என்ற சமையல் போட்டி ரசிக்க வைக்கிறது. விளையாட்டுப் போட்டிகளைப் போல இந்திய அளவில் சமையல் போட்டிகள் நடைபெறுவதும் அதற்காக சாப்பாட்டு பிரியர்களும் சமையல் கலைஞர்களும் காத்திருப்பதும் ஒரு புது அனுபவத்தை ஏற்படுத்துகிறது.

நயனின் சின்ன வயது கேரக்டரில் நடித்த சிறுமி அசல் அக்ரஹாரத்து பெண்ணாக ஜொலிக்கிறார்.. அவரது க்யூட் எக்ஸ்பிரஷன்ஸ் நம்மை கவர்கிறது.

கமர்சியல் படங்களில் ஊறுகாய் போல நாயகி வருவார். இதில் உல்டாவாக இருக்கிறது. நாயகன் ஜெய் தான் ஊறுகாய். அவரின் கேரக்டர் வீணடிக்கப்பட்டுள்ளது.

நடிகர்கள் சத்யராஜ், கே.எஸ்.ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி, அச்யுத் குமார், ரேணுகா, சுரேஷ் சக்கரவர்த்தி, குமாரி சச்சு, நயனின் நண்பராக குண்டு பையன் திடியன் என பலர் நடித்துள்ளனர்.

பாட்டி சச்சு கேரக்டர் திடீரென மாறுவது ரசிக்க வைக்கிறது. பெண்களின் விருப்பம் இல்லாமல் தான் எல்லா குடும்பத்திலும் நடக்கிறது என்பதை ஒரே காட்சியில் சொல்லி பெண்களின் சுதந்திரத்தை குறிப்பிட்டு இருக்கிறார்.

நயனின் தந்தையாக அச்யுத் குமார். இவருக்கு ஜெயப்பிரகாஷ் குரல் கொடுத்தாரா? சில இடங்களில் ஒட்டாமல் செல்கிறது. தன் சாதிக்காக சமூகத்திற்காக இவர் மாற்றிக் கொள்ளும் வழிமுறைகள் தந்தையின் கலக்கத்தை சொல்கிறது.

சத்யராஜ் கேரக்டரை இன்னும் கொஞ்சம் மெருகேற்றி இருக்கலாம். கொஞ்ச நேரம் என்றாலும் அவரது கேரக்டர் கவனிக்க வைக்கிறது.

கிட்டத்தட்ட வில்லன் கேரக்டரில் கார்த்திக் நடித்துள்ளார். இவருக்கும் தந்தைக்கும் உள்ள உறவு நம்பும் படியாக இல்லை.

தமன் இசையமைக்க சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய பிரவீன் ஆண்டனி படத்தொகுப்பை செய்து இருக்கிறார்.

இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கியுள்ளார். படம் முழுவதும் சமையல் சமையல் சமையல்.. எனவே சில நேரங்களில் சீரியல் / விளம்பர படங்களை பார்ப்பது போன்ற ஒரு உணர்வு ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.

பாடல்கள் பெரிதாக மனதில் நிற்கவில்லை. ஒளிப்பதிவில் எந்த குறையும் இல்லை..

அருள் சக்தி முருகனின் எழுத்துக்களில் வசனங்கள் பளிச்சிடுகின்றன.. முக்கியமாக உன் உணவு உன் உரிமை.. பிரியாணிக்கு ஏது ஜாதி மதம்? என்னுடைய சாப்பாட்டை அடுத்தவர் முடிவு செய்ய கூடாது.. என்ற வசனங்கள் கைதட்ட வைக்கின்றன.

கலை இயக்குநர் துரைராஜின் கைவண்ணம் கலக்கல்.. அக்ரஹாரத்து வீட்டை நகல் எடுத்து காட்டியிருக்கிறார். அதுபோல ஹைடெக் சமையல் போட்டியும் ரசிக்க வைக்கிறது.

வீட்டில் அருமையாக சமைக்கும் பெண்கள் பெரிய அளவில் விருந்துகளுக்கு சமைப்பதில்லை பெரிய பெரிய ஹோட்டல்களில் சமைப்பதில்லை.. அந்த முறையை மாற்றி அமைக்கும் வகையில் சமையல் துறையில் சிறந்து விளங்க தன்னம்பிக்கை ஊட்டும் படமாக இது அமைந்திருக்கிறது.

ஆக அன்னபூரணி.. உன் உணவு உன் உரிமை..