சீரான சிகிச்சை.. நாடு விமர்சனம் 4/5

சக்ரா & ராஜ் இணைந்து தயாரித்து எம் சரவணன் இயக்கத்தில் தர்ஷன் – மஹிமா நம்பியார் நடித்துள்ள படம் ‘நாடு’.
இவர்களுடன் சிங்கம்புலி, ஆர் எஸ் சிவாஜி, அருள் தாஸ், இன்பா ரவிக்குமார், வசந்தா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
பெரும்பாலும் குக் கிராமம்.. மலைவாழ் மக்கள் வாழும் பகுதிகளில் அடிப்படை வசதிகள் மக்களுக்கு இன்றளவிலும் கிடைக்காத ஒன்றாகவே இருக்கிறது. அதை சார்ந்த திரைப்படம் தான் இந்த நாடு.
எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இல்லாத பகுதி. கொல்லிமலையில் உள்ள தேவநாடு. அங்கு மலைவாழ் கிராம மக்கள் வசிக்கின்றனர்.
அங்கு மருத்துவமனை இருந்தும் எந்த மருத்துவரும் சரியாக பணிபுரியாத காரணத்தினால் நிறைய உயிர் இழப்புகளை மக்கள் சந்திக்கின்றனர்.
இதனால் போராடி ஒரு மருத்துவரை வரவழைக்கின்றனர். அவர்தான் டாக்டர் மகிமா நம்பியார். அவர் பல உயிர்களை காப்பாற்ற அவரை தெய்வமாக மக்கள் கொண்டாட ஆரம்பிக்கின்றனர்.
ஆனால் மகிமாவுக்கு அந்த அடிப்படை வசதிகள் இல்லாத கிராமம் பிடிக்காத காரணத்தினால் டிரான்ஸ்பர் வேறு பணியிட மாற்றத்திற்கு கேட்கிறார்.
இதை அறிந்த பொதுமக்கள் அவரை அந்த ஊரை விட்டு செல்ல விடாமல் சில வேலைகளை செய்கின்றனர். டாக்டர் மகிமா என்ன செய்தார் என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
பிக் பாஸ் தர்ஷன் இந்த படத்தின் நாயகனாகவும் மகிமா நம்பியார் நாயகியாகவும் நடித்துள்ளனர். இருவரும் தங்கள் கேரக்டரை உணர்ந்து சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளது பாராட்டுக்குரியது.
தர்ஷனின் அப்பாவாக ஆர் எஸ் சிவாஜி மற்றும் ஊர் தலைவராக சிங்கம் புலி நடித்துள்ளனர்.. சிவாஜியின் கேரக்டர் நம்மை ஈர்க்கிறது. ஆனால் அவர் மறைந்துவிட்டார் என எண்ணும்போது நம் மனம் நம்ப மறுக்கிறது.
கலெக்டராக நடித்துள்ள அருள் தாஸ் நடிப்பு கவனிக்க வைக்கிறது. முக்கியமாக சிங்கம் புலியின் மகனாக நடித்து இருப்பவரின் காமெடி களை கட்டி உள்ளது. சிரிக்க வைத்து ரசிக்க வைக்கிறார்.
இந்த படத்திற்கு சக்திவேல் ஒளிப்பதிவு செய்ய, சத்யா இசையமைத்துள்ளார். இருவரும் அக்கறை காட்டி பணி செய்திருப்பது பாராட்டுக்குரியது.
ஒரு நாட்டுக்கும் ஒரு கிராமத்திற்கும் மருத்துவமனை எப்படி அவசியமானதோ அதுபோல மருத்துவரும் அவசியம் என்பதை இந்த நாடு வலியுறுத்துகிறது.. இதுபோன்ற சமூகம் சார்ந்த யதார்த்த வாழ்வியலை கொடுத்துள்ள இயக்குனரையும் படகுழுவினரையும் நிச்சயம் பாராட்ட வேண்டும்.
ஹைடெக் என்ற பெயரில் காஸ்ட்லியான ட்ரீட்மென்ட் கொடுக்கும் கார்ப்பரேட் ஹாஸ்பிடல் சிங்கம் புலி கலாய்த்து இருப்பது யோசிக்க வைக்கிறது. அதில் அரசியல் நையாண்டியை கொடுத்திருப்பது இயக்குனரின் புத்திசாலித்தனம்.
‘எங்கேயும் எப்போதும்’ என்ற அழகான படத்தை கொடுத்த எம் சரவணன் இந்த படத்தை இயக்கி கொடுத்திருக்கிறார். அவருக்கும் கை கொடுத்து பாராட்டு தெரிவிக்கலாம்.
ஆக நாடு… சீரான சிகிச்சை
