பக்கா பார்க்கிங்.; பார்க்கிங் விமர்சனம் 4/5…

திரை விமர்சனம்

இதெல்லாம் ஒரு விஷயமா? என நாம் சிலவற்றை கடந்து சென்று இருப்போம்.. அடடா இதை வைத்துக் கூட ஒரு படம் செய்ய முடியுமா என்று ‘பார்க்கிங்’ வைத்து ஒரு படத்தை கொடுத்துள்ளனர்.

ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஹரிஸ் கல்யாண் இந்துஜா எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் நடித்துள்ள படம் ‘பார்க்கிங்’

பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டு மாடி வீட்டில் தனிக்குடித்தனம் இருக்கிறார் ஐடி ஊழியர் ஹரிஷ் கல்யாண். இவரின் மனைவி இந்துஜா.

இவர்கள் வீட்டின் கீழ்த்தளத்தில் எம்எஸ் பாஸ்கர் வசிக்கிறார். இவர் ஒரு அரசு ஊழியர். ஒரு கட்டத்தில் புதிய கார் வாங்கிய ஹரிஷ் கல்யாண் வீட்டின் முன் பகுதியில் காரை பார்க்கிங் செய்கிறார்.

இதனால் தன்னுடைய இரு சக்கர வாகனத்தை நிறுத்த முடியாமல் பல பிரச்சனைகளை சந்திக்கிறார் எம் எஸ் பாஸ்கர். இதனால் இருவருக்கும் ஈகோ மோதல் ஏற்பட ஒருவரை ஒருவர் பழிவாங்க நினைக்கின்றனர்.

அதன் பின்னர் என்ன நடந்தது? என்பதுதான் படத்தின் மீதிக்கதை

படத்தின் நாயகர்கள் இரண்டு பேர் என்று சொல்லும் அளவிற்கு ஹரிஷ் கல்யாண் & எம்.எஸ். பாஸ்கர் போட்டி போட்டு நடித்துள்ளனர். இன்றைய இளைஞர்களின் கோபத்தின் வெளிப்பாடாக தன் கேரக்டரை நிறுத்தி இருக்கிறார் ஹரிஷ் கல்யாண்.

அதே சமயம் இளைஞனிடம் மல்லுக்கட்டும் அரசாங்க ஊழியராக வெளுத்து கட்டி இருக்கிறார் எம்.எஸ். பாஸ்கர். இந்த படத்திற்காக எம்.எஸ். பாஸ்கருக்கு விருது கொடுத்தாலும் ஆச்சரியம் இல்லை.

இவர்களுடன் இந்துஜா, ரமா ராஜேந்திரா, ப்ராதனா நாதன், இளங்கோ, இளவரசு உள்ளிட்டோரும் உண்டு. அவரவர்கள் அவர்கள் கொடுத்த கேரக்டரை நிறைவாக செய்திருக்கின்றனர்.

சட்னி அரைக்க மிக்ஸி இல்லை என ரமா சொல்லும்போது ஒரு பக்கம் சிரிப்பு வந்தாலும் நம் வீட்டுப் பெண்களின் நினைவு நிச்சயம் வரும்.

சாம் சி எஸ்ஸின் பின்னணி இசை.. ஜிஜு சன்னியின் ஒளிப்பதிவு இரண்டும் படத்திற்கு பக்க பலமாக இருந்து கதை ஓட்டத்தை எடுத்துச் செல்வதில் முக்கிய பங்காற்றியுள்ளது.

முதல் படத்திலேயே யதார்த்த திரைக்கதை அமைத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன். ஒரு படத்தின் வெற்றி என்பது ஆடியன்ஸுடன் கனெக்சன் ஏற்பட வேண்டும்.. அதாவது ரசிகர்களின் மனநிலையாடு ஒத்துப் போக வேண்டும். இதுவே யதார்த்த சினிமா.. மக்கள் மனதை தொட்டுவிட்டால் எதையும் வென்று விடலாம் என்பதை சரியாக கணித்து திரைக்கதை சொல்லி இருக்கிறார் இயக்குனர்.

ஆனால் கணிக்கக்கூடிய கிளைமாக்ஸ் என்பதால் கொஞ்சம் தொய்வு ஏற்படுகிறது.

ஆக.. படம் பார்க்க வாகனத்தை நிச்சயம் தியேட்டரில் பார்க்கிங் செய்யலாம்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *