பிக்பாஸ் புகழ் பாலாஜி முருகதாஸ் நாயகனாக அறிமுகமாகும் படம் ‘வா வரலாம் வா’. மஹானா நாயகியாக நடிக்க தேவா நீண்ட நாட்களுக்குப் பிறகு இசையமைத்துள்ளார்.
பாலாஜி முருகதாஸ் மற்றும் ரெடின் கிங்ஸ்லி ஜெயில் இருந்து விடுதலை ஆகின்றனர். இவர்கள் சிறுவயதிலேயே ஜெயிலுக்கு சென்றவர்கள்.
எனவே இவர்களுக்கு வேலை கொடுக்க நிறுவனங்கள் மறுக்கின்றன. இதனால் திருட்டு வேலைகளில் ஈடுபட முயல்கின்றனர். அப்போது ஒரு பெரிய பேருந்தை கடத்தி காசு பறிக்க முயல்கின்றனர்.
அந்த பேருந்தில் மஹானா மற்றும் அவரது தங்கை காயத்ரி, சிங்கம்புலி, தீபா உள்ளிட்டோருடன் 40 அனாதை குழந்தைகள் உள்ளனர்.
இந்த சூழ்நிலையில் மஹானா & காயத்ரி ஆகிய இருவரும் பாலாஜி & ரெடின் கிங்சிஸியை காதலித்தால் மட்டுமே குழந்தைகளை விட்டுவிடுவதாக மிரட்டுகின்றனர். நாயகிகள் என்ன செய்தார்கள்?
இது ஒரு புறம் இருக்க மற்றொரு புறம்.. மைம் கோபி பெரிய பெரிய திருட்டு வேலைகளில் ஈடுப்படுகிறார். எனவே போலீஸ் இவரை துரத்துகிறது. இவர்களைப் பிடிக்க சரவண சுப்பையா தலைமையில் காவல்துறை ஈடுபட்டு வருகிறது.
இந்த இரண்டு கதைகளுக்கும் ஒரு முடிச்சு போட்டு திரைக்கதை அமைத்திருக்கின்றனர் இயக்குனர்கள் ரவிச்சந்தர் மற்றும் எஸ் பி ஆர்.
அதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
பாலாஜி முருகதாஸ்.. படு ஸ்மார்ட்டாக இருக்கிறார்.. ஆக்ஷன் காட்சிகளில் அடித்து தூள் கிளப்புகிறார்.. ரொமான்டிக்கில் இன்னும் மெச்சூரிட்டி தேவை.
மஹானா அழகும் திறமையும் நிறைந்த நடிகை.. படம் முழுவதும் சுடிதார் அணிந்து ஹோமிலியாக வந்தாலும் சுல்தானா சுல்தானா பாடலுக்கு கவர்ச்சி மழையில் ரசிகர்களை சூடேற்றுகிறார். இவரின் தங்கையாக காயத்ரி.. ஆனால் இவருக்கு ரெடின் என்பதைதான் மனம் ஏற்க மறுக்கிறது.
ரெடின் கிங்ஸ்லி சில காட்சிகளில் மட்டும் சிரிக்க வைக்கிறார். கத்தி கத்தி பேசி எரிச்சல் ஏற்படுத்துகிறார். சிங்கம்புலி தீபா இருவரும் ஓவர் ஆக்டிங்.
இவர்களுடன் வில்லனாக மைம் கோபி.. போலீசாக சரவண சுப்பையா.. சின்ன ரவுடியாக வையாபுரி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இவர்களுடன் வாசு விக்ரம், பயில்வான் ரங்கநாதன், பிரபாகரன், போண்டா மணி, மீசை ராஜேந்திரன், கிரேன் மனோகர், ரஞ்சன், திலீபன், யோகி ராமசாமி, வடிவேல் பீட்டர் மற்றும் 40 குழந்தைகள் நடித்துள்ளனர்.
ஒரே ஒரு பாடலுக்கு ஆட்டம் போட்டுள்ளார் பவ்யா. இவர் சமீபத்து வெளியான ஜோ என்ற படத்தில் நடித்திருந்தார். அந்தப் பாடல் படத்தில் தேவையற்றது.
நீண்ட நாட்களுக்குப் பிறகு தேனிசைத் தென்றல் தேவா இசையமைத்துள்ளார்.. ‘வா வரலாம் வா என்ற பாடலும் சுல்தானா தில்லானா என்ற பாடலும் ஆட்டம் போட வைக்கிறது.
முக்கியமாக குழந்தைகளுக்கான ‘சிங்கம் கதை…’ பாடல் ரசிக்க வைக்கிறது. இது போன்ற பாடல்களை திரையில் பார்த்து பல காலமாகிவிட்டது.
கார்த்திக் ராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தில் ஒளிப்பதிவு படத்தொகுப்பு ரசிக்கும்படியாக உள்ளது. பல காட்சிகளை நாடகத் தன்மை இருப்பதை தவிர்த்து இருக்கலாம்.
முக்கியமாக போலீஸ் தேடிக் கொண்டிருக்கும் தம் கோபி சர்வ சாதாரணமாக பைக்கில் சுற்றி வருகிறார். ஆனால் இவரை கண்டுக்காமல் இருப்பது என்ன நியாயம் இயக்குனரே?
வறுமை நிலையில் இருந்து சிறைக்கு சென்ற ஒருவர் சமூகத்தில் எப்படி பார்க்கப்படுவான்? அவன் சமூகத்தை எப்படி பார்ப்பான்? தாய் தந்தை இல்லாத அவனின் வளர்ப்பு எப்படி இருக்கும் என்பதை காட்சியாக வைத்திருக்கிறார் இயக்குனர் ரவிச்சந்தர் மற்றும் எஸ் பி ஆர்.
ஆக.. வா வரலாம் வா.. நம்பி வரலாம்