Latest:
திரை விமர்சனம்

சில நொடிகளில்… திரைப்பட விமர்சனம்

வினய் பரத்வாஜ் இயக்கத்தில் ரிச்சர்ட் ரிஷி, புன்னகை பூ கீதா, யாஷிகா ஆனந்த் உட்பட பலர் நடித்துள்ள படம், ‘சில நொடிகளில்’. வரும் 24-ம் தேதி வெளியாகவுள்ளது.

ரிச்சர்ட் ரிஷி இவர் ஒரு டாக்டர்.. இவரது மனைவி புன்னகை பூ கீதா ஒரு பிசினஸ் வுமன். இவர்களுக்கு குழந்தை இல்லை.

இந்த நிலையில் மாடல் அழகி யாஷிகாவுடன் நெருக்கம் ஆகிறார் ரிச்சர்ட். ஒரு கட்டத்தில் மனைவி வீட்டில் இல்லாத நேரத்தில் ரிச்சர்டும் யாஷிகாவும் அதிக போதை உட்கொள்கின்றனர்.

ரிச்சர்ட் வேண்டாம் என்ற சொன்ன போதிலும் யாஷிகா கேட்காமல் அதீத போதையில் மிதக்கிறார்.

ஒரு கட்டத்தில் போதை தலைக்கேறி யாஷிகா மரணம் அடைகிறார். இந்த நேரத்தில் திடீரென வீட்டிற்கு வருகிறார் ரிச்சர்ட் மனைவி கீதா.

அதன் பிறகு என்ன நடந்தது.? மனைவியிடம் மாட்டிக் கொண்டாரா ரிச்சர்ட்.? காதலியின் பிணத்தை என்ன செய்தார்? போலீஸிடம் சிக்கிக்கொண்டாரா? விபத்து கொலையாக மாறியதா?என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

முழுக்க முழுக்க லண்டன் நாட்டில் சில நொடிகளில் படமாக்கப்பட்டுள்ளது. வினய் பரத்வாஜ் என்பவர் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். இவர் சிங்கப்பூரில் வசித்தவர் என்பதால் ஆங்கிலம் கலந்த தமிழே விளையாடி இருக்கிறது.

பல படங்களில் ரிச்சர்டை ஒரு ஆக்சன் நாயகனாகவே பார்த்திருக்கிறோம். இதில் கொஞ்சம் ரொமான்டிக் கொஞ்சம் யதார்த்தம் கலந்து கொடுத்திருக்கிறார். ரிச்சர்ட் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு ரொமான்ஸ் காட்சிகளை கவனம் செலுத்தி இருக்கலாம்.

கண்களாலும் உதடுகளாலும் நிறையவே பேசி ரசிக்க வைக்கிறார் புன்னகை பூ கீதா. ஒரு மனைவியாக கணவனின் நடவடிக்கை தெரிந்த பின் இவர் பொங்குவதும் அதன் பின்னர் இவரது நடவடிக்கையில் ஏற்படும் மாற்றங்களை அழகாக சித்தரித்து இருக்கிறார்.

யாஷிகா கொஞ்ச நேரமே வந்தாலும் அவரின் நடிப்பு கவனிக்க வைக்கிறது. அவர் பேசும் நுனி நாக்கு ஆங்கிலமும் அசத்தல்.

படத்தில் நான்கு பாடல்கள் இருந்தாலும் படத்திற்கு தேவையில்லாத இடத்தில் வருவதாகவே தோன்றுகிறது. பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்தியவர்கள் பாடலிலும் கவனம் செலுத்தி இருக்கலாம்.

படம் ஒரு மணி நேரத்துக்குள் இருப்பதால் பாடல்கள் தேவையற்றதாகவே தோன்றுகிறது. கணவன் மனைவி காதலி இந்த மூவருக்குள் நடக்கும் சின்ன சின்ன சம்பவங்கள் சில நொடிகளில் வாழ்க்கையை மாற்றி விடுகிறது என்பதை சொல்லி இருக்கிறார் இயக்குனர்.

அதே சமயம் இடைவேளைக்குப் பிறகு எதிர்பாராத பல திறப்பு முறை காட்சிகளை கொடுத்து சுவாரசியப்படுத்தி இருக்கிறார்.

படத்தின் ஒளிப்பதிவும் படத்தொகுப்பும் நேர்த்தியாக உள்ளது.

வெளிநாட்டில் வசிக்கும் தமிழர்கள் கள்ளக்காதல்.. திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவது உள்ளிட்ட பலவற்றையும் காண்பித்து இருக்கிறார் இயக்குனர் வினய்.