திரை விமர்சனம்

மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி பட விமர்சனம்

ஒரு பெண் திருமணம் செய்யாமல் தனித்து வாழ முடியாதா? என்ற கேள்வி அப்போது முதல் இப்போது வரை சகஜம். ஆனால் இப்போது ஒரு பெண் திருமணம் செய்யாமல் குழந்தை பெற்றுக்கொள்ளக் கூடாதா? என்ற கேள்வியை முன்வைக்கிறது இந்த படம்.
அப்பா – அம்மா பிரிவால் திருமணத்தின் மீது நம்பிக்கை இல்லாமல் இருக்கும் அனுஷ்கா, லண்டனில் பிரபல சமையலகலைஞர். அம்மாவுடன் லண்டனில் வாழும் அம்மாவுக்குப் பிறகு தனக்கும் ஒரு குழந்தை துணையாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார். அதன்படி, திருமணம் செய்து கொள்ளாமல் குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்யும் அனுஷ்கா, செயற்கை கருத்தரிப்பு மையத்தை அணுகுகிறார். ஆனால், அங்கிருக்கும் விந்து கொடையாளிகள் மூலம் குழந்தை உருவாவதை விரும்பாதவர், தன் குழந்தைக்கு ஏற்ற ஒரு விந்து கொடையாளியை தானே கண்டு பிடிக்கிறார். அவரிடம் பழகி உண்மையை சொல்லப்போகும் தருணத்தில் அவரோ அனுஷ்கா மீதான தன் காதலை வெளிப்படுத்த…

அனுஷ்கா காதலை ஏற்றாரா? அல்லது தன் விருப்பத்தை நிறைவேற்ற காதலை தவிர்த்தாரா என்பது திருப்பங்களுடன் கூடிய கதை. கொஞ்சம் தடுமாறினாலும் வேறு மாதிரி சென்று விடக்கூடிய இந்த கதையை தனக்கே உரிய பாணியில் ரசனைக்குரியதாக்கி விடுகிறார், இயக்குனர்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு நாயகியாக வரும் அனுஷ்கா, கதாநாயகனின் கைவிரல் கூட தன் மீது படாத ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். தனது அனுபவம் வாய்ந்த நடிப்பு மூலம் தனது கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார். தன்னை காதலிக்கும் நவீன்பொலிஷெட்டியைக் கையாளும் விதத்திலும் தன் தனித்துவத்தைக் காட்டியிருக்கிறார்.
நாயகனாக நடித்திருக்கும் நவீன் பொலிஷெட்டி, துடிதுடிப்பான இளைஞர் கேரக்டருக்்கு அச்சாக பொருந்துகிறார். அனுஷ்கா மீதான காதலை தனது பெற்றோரிடம் அவர் வெளிப்படுத்தும் இடம் ரசிக்க வைக்கிறது.
நிரவ் ஷாவின் ஒளிப்பதிவும், ரதனின் பின்னணி இசையும் படத்தின் பிளஸ் அம்சங்கள்.
வாழ்க்கையில் ஒருவருக்கு ஒருவர் துணையாக இருக்க வேண்டும். அதே சமயம் அந்த துணை கணவராக மட்டுமே இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்ற கருத்தை வலியுறுத்தம் இந்த கதையை இயக்குநர் மகேஷ் பாபு காமெடி ஜானரில் தந்திருப்பது சிறப்பு.