ரெட் சாண்டல்வுட் பட விமர்சனம்

ஆந்திராவில் செம்மரம் கடத்தியதாக 20 தமிழர்கள் கொல்லப்பட்ட செய்தி பின்னணியில் உருவான கதைக்கு திரைவடிவம் தந்திருக்கிறார்கள்.
படத்தில் நாயகன் வெற்றி சென்னை வியாசர்பாடியில் வசித்து வருகிறார். அவரது நண்பனின் அப்பாவுக்கு உடல்நிலை மிகவும் மோசமாக, நண்பனைத் தேடி வெற்றி ஆந்திரா செல்கிறார். அங்கே காவல்துறை இவரை செம்மரக் கடத்தல் பேர்வழியாக எண்ணி கைது செய்கிறார்கள். திருப்பதியில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் அடைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்படுகிறார்.
அங்கே அவரைப் போல் பல அப்பாவித் தமிழர்கள் இப்படிச் சிக்கி அடிபடுகிறார்கள்.
ஒரு கட்டத்தில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாக அந்த அப்பாவித் தமிழர்கள் அனைவரையும் சுட்டுத்தள்ள விசாரணை அதிகாரி முயற்சிக்க… இதனை அறிந்த நாயகன் வெற்றி, காவல் நிலையத்தில் இருந்து அந்த அப்பாவித் தமிழர்களுடன் தப்பிக்கிறார். இதற்குக் காரணமான உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்க களம் இறங்குகிறார். அதில் அவர் வெற்றி பெற்றாரா இல்லையா என்பது தான் படத்தின் முடிவு.
செம்மரத்தின் மருத்துவக் குணங்கள் பற்றி விரிவாக அறிமுகம் தந்து, செம்மரக் கடத்தல் கும்பலின் நெட் ஒர்க் எத்தகையது என்பதை காட்டும் இடத்தில் திகில் கலந்த பிரமிப்பு நம்மை வியாபித்துக் கொள்கிறது. குற்றவாளிகளுக்கும் காவல் துறைக்கும் உள்ள நெருக்கம் பற்றிய கதைப்போக்கு படத்தை எதிர்பார்ப்புக்குரியதாக்கி விடுகிறது.
நாயகன் வெற்றி நடிப்பில் இன்னும் ஒருபடி மேலேறியிருக்கிறார். போலீசில் சிக்கிக்கொண்ட நிலையில் அவரது தவிப்பும் துடிப்பும் அத்தனை யதார்த்தம். நடித்தவர்களில் கிராமத்து வெள்ளந்தி மனிதராக வரும் எம்.எஸ்.பாஸ்கர் அந்த கேரக்டரில் வாழ்ந்திருக்கிறார். சுரேஷ் பாலா ஒளிப்பதிவில் திருப்பதி மலை இன்னும் கம்பீரமாய் காட்சி தருகிறது. எம். எஸ். பாஸ்கர் நடிப்பு ஒரு கிராம வெள்ளந்தி மனிதரை கண்முன் நிறுத்துகிறது. படத்தில் ஏனைய பாத்திரங்களில் நடித்தவர்களும் அந்தக் கதாபாத்திரமாகவே மாறி உள்ளார்கள்.
வில்லனாக நடித்திருக்கும் கே.ஜி.எப் ராம், நாயகியாக நடித்திருக்கும் தியா மயூரிக்கா, மாரிமுத்து, கணேஷ் வெங்கட்ராமன், இளவரசு, கபாலி விஷ்வந்த், ரவி வெங்கட்ராமன், மெட்ராஸ் வினோத், வினோத் சாகர், சார்லஸ் வினோத் என படத்தில் நடித்திருக்கும் அனைவரும் கதாபாத்திரத்திற்கு நடிப்பால் சிறப்பு செய்திருக்கிறார்கள்.
கதையோடு இணைந்த ஒளிப்பதிவும் இசையும் இந்த செம்மரத்தை இன்னும் உறுதியாக்கி விடுகின்றன. நாம் பக்தியுடன் பார்க்கும் திருப்பதி மலைக்குப் பின் செம்மரம் என்ற பயங்கரமும் சோகமும் உள்ளதைப் பார்க்கும் போது நிஜமாகவே அதிர்ச்சி. செம்மரக் கடத்தல் பின்னணியில் இருக்கும் வியாபாரம் மற்றும் அரசியலால் அப்பாவி தமிழர்கள் எப்படி பலியாக்கப்படுகிறார்கள் என்பதை மிக தைரியமாக சொல்லியிருப்பதோடு, அதை சுவாரஸ்யமான படமாகவும் கொடுத்ததில் இயக்குநர் குரு ராமானுஜம் தனித்துதெரிகிறார்.
