கிங் ஆப் கொத்தா பட விமர்சனம்
கேரளாவில் கொத்தா என்ற பகுதியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ரவுடி ஷபீர், அங்கு போதை வியாபாரத்தில் கொடி கட்டிப்பறக்கிறார். அந்த ஊருக்கு வரும் புதிய போலீஸ் அதிகாரி பிரசன்னா, ஷபீரை எச்சரிக்க நேரில் போகிறார். அங்கு ஷபீரால் அவமானப்படுத்தப்படுகிறார். இதனால் ஷபீரின் கொட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முடிவு செய்யும் பிரசன்னாவுக்கு அப்போது, ஷபீருக்கு முன்பு கொத்தாவை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர் துல்கர் சல்மான் என்றும், அவரது நெருங்கிய நண்பர் தான் இந்த ஷபீர் என்றும் தெரிய வருகிறது.
தன் வாழ்க்கையில் நடந்த சில கசப்பான சம்பவங்களால் கொத்தாவை விட்டு துல்கர் சல்மான் வெளியேற, அதன் பிறகே கொத்தாவை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து ஷபீர் அட்டூழியம் செய்வதை தெரிந்து கொள்ளும் பிரசன்னா, ஷபீரை அழிக்க துல்கர் சல்மானை மீண்டும் கொத்தாவுக்கு வரவைக்க முடிவு செய்கிறார். அதன்படி, துல்கர் சல்மான் மீண்டும் கொத்தாவுக்கு வர, பிறகு கொத்தா யாருக்கு சொந்தமானது? என்பதை அடிதடி ரத்தம் என தெறிக்க தந்திருப்பதே இந்த ‘கிங் ஆஃப் கொத்தா’.
கேங்ஸ்டராக நடித்திருக்கும் துல்கர் சல்மான் முதல் பாதியில் கொத்தா ராஜுவாக சில சண்டைக்காட்சிகளில் அசத்தியிருப்பவர், இரண்டாம் பாதியில் ராஜு மதராஸியாக மிரட்டவும் தவறவில்லை. அவரது நண்பராக வந்து எதிரியாக கண்ணன் பாய் வேடத்தில் வேடத்தில் நடித்திருக்கும் ஷபீர், அந்த கேரக்டரில் பிரகாசிக்கிறார். பெரிய டானாக இருந்தாலும், சில சந்தர்ப்பங்களில் தடுமாறுவது, தன்னை விடவும் பெரியவனை அழிக்க முடியாமல் திணறுவது, மனைவிக்கு பயப்படுவது என்று பல இடங்களில் நடிப்பில்அவர்காட்டும் நடிப்பு அசாதரணம்.
செம்பன் வினோத் ஜோஸ், ஆங்கிலம் பேசும் வில்லனாக கலகலப்பு ஊட்டுகிறார்.
காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் பிரசன்னாவின் அறிமுகமும் அந்த வகை தான். இந்த தாதா கதைக்குள் போகப்போக சாதாவாகி விடுகிறது, அவரது கேரக்டர்.
துல்கர் சல்மானின் தந்தையாக முன்னாள் ரவுடியாக வரும் ஷம்மி திலகன், சில காட்சிகளில் வந்தாலும் அசத்திப்போகிறார்.
காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் கோகுல் சுரேஷ், துல்கர் சல்மான் – ஷபீர் இடையிலான நட்பு ரசிக்க வைக்கிறது.
துல்கரின் காதலியாக வரும் ஐஸ்வர்யா லட்சுமி இரட்டைக் காதலில் தடுமாறும் இடம் நடிப்பில் அத்தனை அழகு. அதை துல்கர் மன்னிப்பது இன்னும் அழகு. நைலா உஷா, சாந்தி கிருஷ்ணா, அனிகா சுரேந்தர் பொருத்தமான பாத்திரத் தேர்வில் சிறப்பு சேர்க்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் நிமிஷ் ரவி இரவு நேர காட்சிகளையும், சண்டைக்காட்சிகளையும் ரசிக்கும்படி படமாக்கியிருக்கிறார்.
ஜேக்ஸ் பிஜாய் மற்றும் ஷான் ரஹ்மான் ஆகியோரது இசை படத்திற்கு பலம்.
படத்தில் இடம் பெறும் சிறு சிறு வேடங்களுக்கு கூட பெரிய பில்டப் கொடுத்து திகட்ட வைத்திருக்கிறார், இயக்குநர் அபிலாஷ் ஜோஷி. ஆனாலும் அடிதடி அளவுக்கு சென்டிமென்ட் காட்சியும் வைத்து ரசிக்க வைத்து விடுகிறார்.