ஹர்கரா பட விமர்சனம்

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மலை கிராமத்தில் உள்ள அஞ்சல் அலுவலகத்தில் காளி வெங்கட் பணியாற்றுகிறார். அந்த ஊர் மக்களின் வெகுளித்தனமான செயல்களை தொல்லையாக நினைக்கும் காளி வெங்கட், அந்த கிராமத்தை விட்டு வெளியேறும் எண்ணத்தில் அங்கிருக்கும் அஞ்சல் அலுவலகத்தை நிரந்தரமாக மூடுவதற்கு திட்டம் போடுகிறார். அதற்கான வேலைகளில் ஈடுபடுகிறார்.
இந்நிலையில் கடிதம் கொடுக்க மலை மீது நெடுந்தூரம் பயணிக்கும் காளி வெங்கட், கிராம மக்கள் தெய்வமாக வணங்கும் மாதேஸ்வரனின் வாழ்க்கை பற்றி தெரிந்து கலங்கி போகிறார். தனது தவறை உணர்ந்து முடிவை மாற்றினாரா? காளி வெங்கட்டின் மனதை மாற்றிய அந்த மாதேஸ்வரன் யார்?, அவர் அந்த மக்களுக்காக செய்த தியாகம் என்ன? என்பதே ‘ஹர்காரா’.
தபால்காரராக நடித்திருக்கும் காளி வெங்கட் தனது இயல்பான நடிப்பு மூலம் கதாபாத்திரத்திற்கு கவுரவம் சேர்க்கிறார். 30 வயதை தாண்டியும் திருமணம் ஆகாத தனது குமுறலை வெளிப்படுத்தும் போதும், கிராம மக்களின் அன்புத்தொல்லையில் சிக்கி அவதிப்படும்போதும் நடிப்பில் குணச்சித்ரம் கொடி கட்டுகிறது.
மாதேஸ்வரன் வேடத்தில் நடித்திருக்கும் இயக்குநர் ராம் அருண் காஸ்ட்ரோ, அந்த கேரக்டரில் கச்சிதமாக பொருந்துகிறார். 150 வருடங்களுக்கு முந்தைய தபால்காரர்கள் எப்படி இருப்பார்கள்? அவர்களுடைய பணி எத்தகையது என்பதை தனது நடிப்பின் ஒவ்வொரு மீட்டரிலும் கச்சிதமாக வெளிப்படுத்தி விடுகிறார்.
நாயகியாக வரும் கவுதமி செளத்ரியின் வேடம் சிறியது என்றாலும் கனமானது.
பிலிப் ஆர்.சுந்தர் மற்றும் லோகேஷ் இளங்கோவன் இருவரின் கேமராக்களும் கதைக்கு வலு சேர்க்கும் வகையில் மலைப்பகுதிகளை அழகுற காட்டுகிறது.
ராம் சங்கரின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் படத்தின் கூடுதல் பலம்.
ஹர்காரா என்று அழைக்கப்பட்ட தபால்காரர்களை பற்றிய விசயங்களை சுவாரஸ்யமாக சொல்லியிருக்கும் விதத்தில் சிறப்பு கவனம் பெறுகிறார், இயக்குனர் ராம் அருண் காஸ்ட்ரோ.
