மேக்ஸ்- திரை விமர்சனம்
போலீஸ் இன்ஸ்பெக்டர் கிச்சா சுதீப் நேர்மையானவர். தப்பு செய்பவர்களுக்கு அவர் கொடுக்கும் ட்ரீட்மென்ட்டே தனி. இதில் அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்டிருந்தால் கூட அஞ்சாமல் நடவடிக்கை எடுப்பவர். அரசியல்வாதிகள் தரப்பில் இருந்து உயர் போலீஸ் அதிகாரிகளிடம் இரு ந்து பிரஷர் வந்தாலும் அதையெல்லாம் சட்டை செய்யாமல் சட்டப்படி நடவடிக்கை எடுப்பவர். இதனால் இந்த நேர்மைக்கான பரிசாக அடிக்கடி சஸ்பெண்டும் உண்டு.
இந்நிலையில் சஸ்பெண்ட் முடிந்து புதிய ஊருக்கு மாற்றலாகி வருகிறார். நாளை பொறுப்பேற்க வேண்டிய நிலையில் இன்று பெண் காவலரிடம் அநாகரிகமாக நடந்து கொண்ட இரண்டு மந்திரிகளின் மகன்களை ஸ்டேஷனில் ஒப்படைக்கிறார். அவர்கள் மீது எஃப் ஐ ஆர் போடச் சொல்பவர், மறுநாள் சார்ஜ் எடுத்ததும் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளதாக கூறி செல்கிறார்.
மறுநாள் காலை அதிர்ச்சி பொழுதாக விடிகிறது. லாக்கப்பில் இருந்த அந்த இரண்டு இளைஞர்களும் உயிரிழந்த நிலையில் காணப்பட, அடுத்த வினாடியே போலீஸ் நிலையம் முழுக்க பரபரப்பு பற்றிக் கொள்கிறது. அதோடு இறந்து போன இளைஞர்களின் மந்திரி தந்தைகள் ஒரு மாநில அரசையே ஆட்டிப்படைக்கும் அளவுக்கு சர்வ சக்தி படைத்தவர்கள் என்பது தெரிய வர, மகன்கள் காவல் நிலையத்தில் உயிரை விட்டது தெரிந்தால் அந்த மந்திரிகள் ரவுடிகளை ஆள் அனுப்பி போலீஸ் நிலையத்தை துவம்சம் செய்து விடுவார்கள் என்பதும், ஒரு போலீசும் உயிரோடு இருக்க முடியாது என்பதும் புதிய இன்ஸ்பெக்டருக்கு சொல்லப் பட, விபரீதம் தவிர்க்க உடல்களை அப்புறப்படுத்த திட்டமிடுகிறார்.
ஆனால் அதற்குள் மந்திரிகளின் மகன்கள் போலீஸ் லாக்கப்பில் இருப்பதாக தெரிந்து கொண்ட அடியாட்கள் குழு போலீஸ் நிலையத்தை தாக்க பெரும் கூட்டமாய் வர, அவர்களை எப்படி சமாளித்து போலீஸ்காரர்களை காப்பாற்றுகிறார் என்பது விறுவிறு திகுதிகு திரைக்கதை. தொடக்க முதல் முடிவு வரை எந்த இடத்திலும் காட்சிகளில் சிறு தேக்கம் கூட இல்லாத திரைக்கதை தான் படத்தின் முதல் நாயகன்.
கன்னட சூப்பர் ஸ்டார் கிச்சா சுதீப் அதிரடி போலீஸ் இன்ஸ்பெக்டராக அறிமுகமாகும் முதல் காட்சியிலேயே கதை தொடங்கி விடுவதால் கூடவே விறுவிறுப்பும் இணைந்து கொள்கிறது. அதிரடி காவல்துறை அதிகாரியாக நடிப்பில் அதகளம் செய்து இருக்கிறார் கிச்சா சுதீப். குறிப்பாக சண்டைக் காட்சிகளில் அனல் பறக்கிறது. அவர் லாக்கப்பில் இருந்து பிணங்களை அப்புறப்படுத்த எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் ரசிகனை இருக்கையின் நுனிக்கே கொண்டு வந்து விடுகிறது. போலீஸ்காரர்களை மந்திரி அனுப்பும் அடியாட்களிடம் இருந்து காப்பாற்ற அவர் மேற்கொள்ளும் ஒவ்வொரு நடவடிக்கையும் அரங்கில் கைத்தட்டலை பெற்று தருகிறது. மந்திரி மகன்களால் பாதிப்புக்கு உள்ளான சிறுமியிடம் அவர்களை என்ன செய்யலாம் என கேட்கும் இடத்தில் சிறுமியின் விருப்பம் நிறைவேறி விட்டதாக ஒரு புன்னகை செய்கிறாரே, அந்த அடியாழ நடிப்புக்கு ஒரு ராயல் சல்யூட்.
குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரியாக வரும் வரலட்சுமி அடியாட்களின் ஆலோசகராவே மாறி போகும் இடங்கள் ரசனை மிக்கவை. துப்பறிவதில் வல்லவர் என்று அவருக்கு ஆரம்பத்தில் கொடுக்கப்பட்ட பில்டப் கொஞ்சம் அதிகமோ என்று தோன்றுகிறது.
பிரதான வில்லன்களாக சுனில், வம்சி கிருஷ்ணா, மந்திரிகளாக ஆடுகளம் நரேன், சரத் லோகி தஸ்வா, பெண் காவலர்களாக சம்யுக்தா ஹார்னெட், சுக்ருதா வாக்லே தங்கள் கேரக்டர்களில் கதையோடு நம்மை இணைக்கும் வேலையை கச்சிதமாக செய்து விடுகிறார்கள். படத்தின் தொடக்கம் முதல் முடிவு வரை ஆச்சரியப்படுத்தும் இன்னொருவர் நடிகர் இளவரசு. கதையின் திருப்பு முனைக்கும் இவரது கேரக்டரே காரணம் என்பதால் நடிக்கும் காட்சிகள் தனி மகத்துவம் பெற்று விடுகின்றன. குறிப்பாக போலீஸ் நிலையம் வந்த தன் மனைவியை பார்த்து அதிரும் அந்த ஒரு இடம் போதும், இளவரசுக்கு.
ஒளிப்பதிவாளர் சேகர் சந்திராவின் கேமரா நள்ளிரவு தொடங்கி விடியும் வரை காட்சிகளை நம் கண் முன் துல்லியமாக நிறுத்துகிறது. இசை அமைப்பாளர் பி. அஜனீஷ் லோக்நாத்தின் பின்னணி இசை நாயகன் வரும்போதெல்லாம் உயர்த்தி பிடிக்கிற வேலையை செய்து விடுகிறது.
எழுதி இயக்கி இருக்கிறார் புதியவர் விஜய் கார்த்திகேயா. ஓர் இரவுக்குள் நடக்கிற கதையை பரபரப்புடன் கொண்டு செல்லும் உத்தி, அதற்கேற்ற புத்திசாலித்தன திரைக்கதை இரண்டிலும் திரைக்களத்தில் புதிய அத்தியாயம் படைத்திருக்கிறார். கமர்சியல் கதைக்குள் ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரியின் சாதுரிய போராட்டம் எப்படி வெற்றி பெறப் போகிறது என்கிற பதட்டத்தை கிளைமாக்ஸ் வரை நீடிக்க செய்ததில் கடைசி ரசிகன் வரை கொண்டாடப்படுவார்.
மேக்ஸ், வெற்றியின் மேக்சிமம்.