ஸ்மைல் மேன் – திரை விமர்சனம்
கிரைம் திரில்லர் பட ரசிகர்களுக்கான ஸ்பெஷல் படையல் இது.
நடிகர் சரத்குமார் நடிப்பில் இது 150 வது படம் என்பதும், இந்தப் படமும் அவர் பெயர் சொல்லும் என்பதும் இன்னொரு சிறப்பு.
தலையில் அடிபட்டு சிகிச்சைக்குப் பின் தேறி வந்த சரத்குமாருக்கு ஓராண்டுக்குள் படிப்படியாக பழைய நினைவுகள் மறந்து போகும் என்று டாக்டர் பயமுறுத்த…
இந்த நேரத்தில் சில மாதங்களுக்கு முன்பு கோயம்புத்தூரை அதிர்ச்சியில் வைத்திருந்த ஸ்மைல் மேன் கொலை மீண்டும் தொடர்கிறது. மனிதர்களை கடத்திச் சென்று கொலை செய்வதோடு, பிணத்தின் வாயை கிழித்து பற்கள் தெரிய சிரிப்பது போல் பொது இடத்தில் வைப்பது கொலையாளி ஸ்டைல். இந்த வழக்கை சி.பி.சி. ஐ.டி. ஸ்ரீகுமார் விசாரிக்கிறார். இந்த விசாரணையில் அவரோடு சரத்குமாரும் இணைந்து கொள்கிறார்.
முன்னதாக இந்த வழக்கால் தான் தன் வாழ்க்கையே திசை மாறியது என்பதை உணர்ந்து இந்த கொலையில் குற்றவாளியை கண்டுபிடிக்க தீவிர முனைப்புடன் செயல்படுகிறார் சரத்குமார். யார் அந்த ஸ்மைல் மேன்கில்லர்? அவனது தொடர் கொலைகளின் நோக்கம் என்ன என்பது எதிர்பாராத கிளைமாக்ஸ்.
இந்த துப்பறியும் கதையில் சரத்குமார் அளவாக அழகாக பொருந்தி விடுகிறார். விபத்துக்கு முன்னும் விபத்துக்கு பின்னு மான அவரது விசாரணை நடவடிக்கைகளில் ஏற்படும் மாற்றத்தை தனது அனுபவ நடிப்பின் மூலம், உடல் மொழி மூலம் நமக்குள் சுலபமாய் கடத்தி விடுகிறார்.
ஸ்ரீஜா ரோஸ், இனியா, ஸ்ரீகுமார், ராஜ்குமார் கேரக்டருக்கேற்ற நடிப்பு மூலம் நியாயப்படுத்துகிறார்கள்.படத்தின் பிரதான பலம் இசை. இசையமைத்த கவாஸ்கர் அவிநாஷ் இனி இம்மாதிரி படங்களின் கட்டாயத் தேவை ஆகி விடுவார். கொலையாளி ஏன் ஸ்மைல்மேன் கொலையாளியாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார் என்கிற பிளாஷ்பேக் காட்சிகள் இன்னும் கூட அழுத்தமாக இருந்திருக்கலாம். கலையரசன், இனியா, அந்த சிறுமி சம்பந்தப்பட்ட பிளாஷ் பேக்கில் இனியாவின் அடுத்த கட்ட வாழ்க்கை பற்றி அவரது குட்டி மகளே தீர்மானிக்கும் காட்சிகள் பலவீனம்.இது விஷயத்தில் இனியா வின் மனநிலை என்ன என்பதை உணர்த்த தவறி விடுகிறார் இயக்குனர்கள் ஷியாம்-பிரவீன் கூட்டணி.
எனினும் இந்த ஸ்மைல் மேனை நடிப்பில் மாறுபட்ட சரத்குமாரை தந்ததற்காக வரவேற்கலாம்.