திரை விமர்சனம்

வான் மூன்று திரை விமர்சனம்

மனைவியின் உயிரை காப்பாற்ற போதிய பணமில்லாமல் தவிக்கும் கணவர், காதல் தோல்வியால் தற்கொலைக்கு முயற்சி செய்து காப்பாற்றப்பட்ட இளம்பெண், வீட்டின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்த ஒரு ஜோடி என மூன்று வகை கதை மாந்தர்களை வைத்து நெகிழும் விதத்தில் கதை சொல்லியிருக்கிறார்கள்.
வேறு, வேறு நபர்களுடனன காதல் தோல்வியால் தற்கொலைக்கு முயன்று ஒரே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிர் பிழைக்கிறார்கள், ஆதித்யா பாஸ்கரும், அம்மு அபிராமியும்.
வயிற்றில் குழந்தையிருக்கும் நிலையில், தான் ஆசைப்பட்டு காதலித்துத் திருமணம் செய்த அபிராமி வெங்கடாச்சலத்தை மூளைக்கட்டி நோய்க்காக மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார் காதல் கணவரான வினோத் கிஷன்.
40 வருடங்களாக ஒருமித்த தம்பதிகளாக வாழ்ந்து வரும் டெல்லி கணேஷ்-லீலா சாம்சன் தம்பதியினரில், மனைவி இப்போது உயிர்க்கொல்லி நோயின் பிடியில். அதை மனைவியிடம் சொல்லாமல் மருத்துவமனையில் சேர்க்கிறார், டெல்லி.
இந்த மூன்று ஜோடிகளின் இந்தப் பிரச்சினைகள் எப்படி முடிகின்றன..? என்னவாக முடிகின்றன..? என்பது தான் இந்த ‘வான் மூன்று’ படத்தின் திரைக்கதை.
காதல் தோல்வியால் தற்கொலைக்கு முயன்று சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் ஆதித்யா பாஸ்கர், அதே மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட அம்மு அபிராமியின் மூலம் மனம் மாறுவது, தனது கடந்த கால சம்பவங்களை மறந்து விட்டு அம்மு அபிராமி புதிய வாழ்க்கையை தொடங்குவது இரண்டுமே கதை என்பதையும் தாண்டி நிஜமான வாழ்வின் பிரதிபலிப்பு. அதை தேர்ந்த நடிப்பின் மூலம் இதயத்துக்குள் இடப்பெயர்ச்சி செய்து விடுகிறார்கள்.
திருமணமாகி 10 மாதங்கள் ஆன நிலையில் தனது காதல் மனைவியை பிரிய வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படும் வினோத் கிஷன்-அபிராமி வெங்கடாச்சலம் தம்பதியரின்காதல் இன்னொரு வகை நெகிழ்ச்சிப்பிரவாகம்.
டெல்லி கணேஷ் – லீலா சாம்சன் அனுபவ நடிப்பில் தங்களுக்குள்ளான பாசப்பரிமாணத்தை நமக்குள் சுலபத்தில் கடத்தி விடுகிறார்கள்.
முழுப்படமும் மருத்துவமனையில் நடந்தாலும் கேமரா மூலம் காட்சிப்படுத்திய விதத்தில் ரசிக்க வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் சார்லஸ் தாமஸ்
ஆர் 2 பிரதர்ஸின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதையின்ஜீவனுக்குள் ஜீவன்.
காதல் என்பது இளைஞர்களுக்கு மட்டுமானது அல்ல, அது அனைத்து வயதினருக்கும் பொதுவானது என்பதை எளிமையாக, அதேநேரத்தில் அழுத்தமாக சொன்ன விதத்தில் கவர்கிறார், இயக்குனர் ஏ.ஆர்.எம்.முருகேஷ்.

ஆகஸ்ட் 11 ஆம் தேதி ஆஹா தமிழ் ஒடிடி தளத்தில் நேரடியாக வெளியாக உள்ளது இந்த படம்.