ஜெயிலர் பட விமர்சனம்

நேர்மையான போலீஸ் அதிகாரியாக, திகார் ஜெயிலையே ஆட்டிப் படைக்கும் ஜெயிலர் ரஜினி இப்போது பணி ஒய்வு பெற்று வீட்டில் இருக்கிறார். ஒரே மகன் வசந்த் ரவி உதவி கமிஷனராக இருக்கிறார். சர்வதேச அளவில் சிலை கடத்தும் கும்பலை கண்டு பிடிக்க தீவிரம் காட்டும் மகனுக்கு பல்வேறு வகையில் மிரட்டல்கள். காவல்துறையில் இருக்கும் சில கறுப்பு ஆடுகளும் இதற்கு உடந்தை.
இந்நிலையில் வசந்த் ரவி அந்த கும்பலின் இரண்டாம் கட்ட தலைவன் சரவணனை பிடித்து போலீஸ் கஸ்டடியில் பெண்டு நிமிர்த்த, கோடிகளில் பணம் பார்க்கும் சிலை கடத்தல் கும்பல் தலைவன் காதுக்கு இது வர…வசந்த் ரவி கடத்தப்படுகிறார். அவர் கொல்லப்பட்டு விட்டார் என்று காவல் துறை உறுதிப்படுத்த…
இப்போது ஓய்வுக்கால அமைதியை கலைத்து மகனுக்காக ஆயுதம் ஏந்துகிறார், அப்பா. அவரது முன்னாள் நண்பர்கள் உதவியுடன் கடத்தல் தலைவனை நெருங்கும்போது, அவனோ ‘உம் மகனை மீட்க வேண்டுமானால் புராதன கோயில் ஒன்றில் உள்ள வைரத்தாலான மணி முடி வேண்டும்’ என்கிறான். அதோடு ரஜினியின் மகன் தனது நேரடி கண்பார்வையில் உயிருடன் இருப்பதையும் உறுதிப்படுத்துகிறான்.
பல்வேறு பாதுகாப்பு கவசங்களை தாண்டி கடந்து ரஜினி அந்த மணிமுடியை கொண்டு வந்தாரா, மகனை உயிருடன் மீட்டாரா என்பது அதிரடி மசாலாவில் தோய்த்து வார்த்த அக்் மார்க் திரைக்கதை.
ஓய்வு பெற்ற காவல் அதிகாரி டைகர் முத்துவேல் பாண்டியனாக ரஜினி. பணி ஒய்வு பெற்ற நிலையில் பேரன் ரித்விக்கின் பிரிய தாத்தாவாக அவர் காட்டும் அன்பு தனி ரகம். மகனுக்கு ஒன்று என்றதும் அவர் அப்படியே மாறுவது நிஜமான ரஜினியிசம்.
ஒரு வில்லன் தலையை அரிவாளால் சீவி விட்டு இன்னொரு வில்லனிடம் ‘ஆமா என் மருமகளை பத்தி ஏதோ சொன்னியே?’ என்று கேட்கும் இடத்தில் உள்ளூர பொங்கும் அந்த எரிமலை ரஜினியை கொண்டாடத் தோன்றுகிறது.
‘வீட்ல இருக்கிறது என்னவோ அதை சாப்பிடுங்க’ என்று அலட்சியப் படுத்தும் மனைவி ரம்யா கிருஷ்ணனிடம், மூன்று ரவுடிகளை காலி பண்ணிய விஷயம் சொல்லும் இடத்திலும் நடிப்பில் அதிரடி வித்தையே காட்டுகிறார்.
ஆரம்பத்தில் தன்னை கலாய்க்கும் யோகிபாபுவை அப்பாவி கோணத்திலேயே அணுகும் இடங்கள் ரசனை. ஜெயிலராக வரும் அந்த பிளாஷ்பேக் காட்சியில் ‘சிவாஜி’ ரஜினியை பார்க்க முடிகிறது. அந்த வேக நடையும் துள்ளல் நடிப்பும் வேறு லெவல். துள்ளல் நடிப்பில் பிரமிக்க வைக்கிறார்.
வில்லனாக வரும் மலையாள நடிகர் விநாயகன் தோற்றத்தில் தொடங்கி நடிப்பு வரை மிரட்டியிருக்கிறார். ரஜினி குடும்பத்தை கொல்ல வந்த இடத்தில் சூழல் மாறி ரம்யா கிருஷ்ணனிடமே பத்து ரூபாய் பிச்சை கேட்கும் காட்சியில் இவர் நடிப்பை பார்க்கணுமே.
இந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப், கன்னட நடிகர் சிவராஜ் குமார், மலையாள நடிகர் மோகன்லால், தெலுங்கு நடிகர் சுனில் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பது கதைக்கு கூடுதல் பலம் சேர்த்து விடுகிறது. கொஞ்சமே வந்தாலும் சரவணன்
கவனம் பெறுகிறார்.
‘காவாலா’ பாடலில் தமன்னா இளைஞர்கள் தூக்கம் கெடுக்கிறார். சுனில், தமன்னா வரும் படப்பிடிப்பு காட்சிகள் காமெடிக்கு உதவுகின்றன.
சிரிப்புக்கு யோகிபாபுவும், ரெடின் கிங்ஸ்லியும்.
அனிருத் இசையில் ‘காவாலா’ பாட்டு ஆட்டம் போட வைக்கிறது.
குடும்ப பின்னணியில் அதிரடி கதைக்களம் அமைத்து அதை முடிவு வரை எக்ஸ்பிரஸ் வேகத்தில் சொன்னதற்காகவே இயக்கிய நெல்சனை உச்சி முகரலாம். வசந்த் ரவி தொடர்பான அந்த கிளைமாக்ஸ் ட்விஸ்ட் நிஜமாகவே எதிர்பாராதது.

