திரை விமர்சனம்

இராக்கதன் பட விமர்சனம்

மாடலிங் துறையில் சாதிக்க வேண்டும் என்று துடிக்கும் விக்னேஷ் பாஸ்கர், அந்த வாய்ப்பு கிடைத்த சில நாட்களில் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் கொலை செய்யப்பட்டு கிடக்கிறார். அவரது அருகில், அந்த ஓட்டலின் உரிமையாளரான ரியாஸ்கானும் கொலை செய்யப்பட்ட நிலையில்.

இந்த வழக்கை விசாரிக்கும் காவல்துறை அதிகாரி வம்சி கிருஷ்ணா, கொலைக்கான பின்னணியை கண்டறியும் போது அதிர்ச்சி கிளைமாக்ஸ்.
போலீஸ் அதிகாரியாக வரும் வம்சி கிருஷ்ணா காக்கி உடை அணியாமலே கம்பீரம் காட்டுகிறார்.
அலெக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் நாயகனின் நண்பனாக வரும் தினேஷ் கலைச்செல்வன் தான் படத்தின் இயக்குனரும் கூட. மாடல் ஆன நண்பனுக்கு உதவத் துடிக்கும் இடங்களில் இருந்து நடிகராக முத்திரை பதிப்பவர், இயக்குனராக ஒரு சமூக அவலத்துக்கு தன்னால் முடிந்த பங்களிப்பை தந்ததிலும் அடையாளம் பெறுகிறார்.
நாயகனாக நடித்திருக்கும் விக்னேஷ் பாஸ்கர், மாடலிங் துறை மீது ஆசைப்பட்டு அழிவை நோக்கி பயணிக்கும் இளைஞர்களின் வாழ்க்கையை நடிப்பில் கண் முன் நிறுத்துகிறார்.
இவரது காதலியாக வரும் காயத்ரி ரெமா, அழகான நாயகி.
நட்சத்திர ஓட்டலின் அதிபராக நடித்திருக்கும் ரியாஸ்கான், தனது மேனரிசங்களில் கவர்கிறார்.
நிழல்கள் ரவி, சாம்ஸ், சஞ்சனா சிங் என அவரவர் பங்கில் நிறைவு தருகிறார்கள். குறிப்பாக காமெடி இல்லாத சாம்ஸ் சீரியஸ் நடிப்பில் ஆச்சரியப்படுத்துகிறார்.
எழுதி இயக்கியிருக்கும் தினேஷ் கலைச்செல்வன், ஆண் மாடலிங் பற்றி இதுவரை சொல்லாத பல அதிர்ச்சி தகவல்களை தந்து சமூகத்துக்கு எச்சரிக்கை மணி அடித்திருக்கிறார். கதைக்களம் புதிது. அதை பட்ஜெட்டுக்குள் சொல்ல முயன்றதற்காக ஸ்பெஷல் பாராட்டு.

இராக்கதன், ஸ்பெஷல் மாடல்.