திரை விமர்சனம்

எக்கோ திரை விமர்சனம்

நட்ட நடு ராத்திரியில் ஊரே உறங்க, நாயகன் ஸ்ரீகாந்த் காதுக்குள் மட்டும் ‘கிர்’ ஒசை, அதுவும் இடைவிடாமல் கேட்டுக் கொண்டே இருக்கிறது. எழுந்து பார்த்தால் திரைச்சீலை அசைகிறது. ஜன்னல் படபடவென அடிக்கிறது.
ஐடி நிறுவனத்தில் பணியாற்றும் ஸ்ரீகாந்த் கோடீசுவர மனைவி பூஜா ஜாவேரியுடன் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வரும் போது தான் ஸ்ரீகாந்த் காதுக்குள் அப்படியொரு பேரோசை. கூடவே சில அமானுஷ்ய சம்பவங்களும் அவரை தூங்கவிடாமல் படுத்துகிறது. கணவரின் பயத்தை எரிச்சலாக எடுத்துக் கொள்ளும் பூஜா ஜாவேரி, இந்த பதட்டத்தில இருந்து சரியான பிறகு என்னை அழையுங்கள் என்று ‘பை…பை’ சொல்லி வீட்டை விட்டு போய் விட…
தனக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பில் இருந்து விடுபட அமானுஷ்ய சக்திகளை கட்டுப்படுத்தும் அறிவியல் நிபுணர் ஆசிஷ் வித்யார்த்தியை போய் பார்க்கிறார், ஸ்ரீகாந்த். தனக்கு தற்போது நடப்பவை அனைத்தும் தனது முதல் மனைவிக்கு ஏற்கனவே நடந்திருக்கிறது என்று அப்போது அவர் கூற…
அவரது முதல் மனைவி யார்? அவருக்கும், தற்போது ஸ்ரீகாந்த் எதிர்கொள்ளும் பிரச்சினைக்கும் என்ன தொடர்பு? என்பதே ‘எக்கோ’ படத்தின் மிச்ச மீதி திரைக்களம்..

திகில் கதையை வித்தியாசமான முறையில் சொல்ல முயற்சித்திருக்கும் இயக்குநர் நவீன் கணேஷ், பேய்க் கதையை அறிவியல் பின்னணியில் சொல்லி படத்தை ரசிக்க வைக்கிறார்.
நாயகனாக நடித்திருக்கும் ஸ்ரீகாந்த், திகில் காட்சிகளில் அந்த திகிலை நமக்கும் கடத்தி விடுகிறார். ஆசிஷ் வித்யார்த்தியிடம் அவர் உண்மையை சொல்லும் இடத்தில் அவரது பதட்டமும் உடல் மொழியும் அனுபவ நடிகருக்கான அடையாளம்.

நாயகிகளாக நடித்திருக்கும் வித்யா பிரதீப் மற்றும் பூஜா ஜாவேரி இருவரில் கிராமத்துப் பெண்ணாக வரும் வித்யா நடிப்பில் முந்துகிறார்.

ஆசிஷ் வித்யார்த்தியின் கூரிய பார்வையிலேயே நடிப்பு பொறி பறக்கிறது.

நாயகனின் நண்பர்களாக கும்கி அஷ்வின், ஸ்ரீநாத் படத்தின் கலகலப்புக்கு உதவ, நாயகனின் அம்மாவாக பிரவீனா, தாத்தாவாக டெல்லி கணேஷ், பூசாரியாக காளி வெங்கட் இயல்பு நடிப்பில் கவர்கிறார்கள்.
கோபிநாத்தின் ஒளிப்பதிவில் திகில் காட்சிகள் கிராபிக்ஸ் இல்லாமலேயே மிரட்டுகிறது.

நரேன் பாலகுமாரின் இசையில் பின்னணி இசை அந்த திகிலுக்கு வெகுவாக துணை போகிறது. தனியாக அம்மாதிரி பங்களா ஒன்றில் இருக்கிற மாதிரியான எண்ணத்தை ஏற்படுத்தி விடும் அந்த திகில் இசைக்கு கங்கிராட்ஸ்.
பேய் இல்லாத பேய்ப்படம். ஆனால் திகிலுக்கு பஞ்சமில்லாத இயக்கத்தில் தேறியிருக்கிறார், இயக்குனர் நவீன் கணேஷ்.

எக்கோ, த்ரில்.