அநீதி பட விமர்சனம்
சென்னையில் ‘மீல் மங்கி’ எனும் நிறுவனத்தில் உணவு டெலிவரி செய்யும் ஊழியராக பணிபுரிந்து வருகிறார் திருமேனி (அர்ஜுன் தாஸ்). அந்தப் பணியில் தினசரியாக அவர் சந்திக்கும் அவமானங்கள் மனதளவில் அவரை தொந்தரவு செய்கின்றன. இதன் விளைவாக யார் அவரை கோபப்படுத்தினாலும் அவர்களைக் கொல்ல வேண்டும் என்ற விபரீத எண்ணம் அவருக்குத் தோன்றுகிறது. இதற்காகச் சிகிச்சைக்குச் செல்லும் அவருக்கு உளவியல் சிக்கல் இருப்பது தெரிய வருகிறது.
ஒரு பணக்கார வீட்டில் தனியாக இருக்கும் பாட்டிக்கு உதவி செய்யும் பணிப்பெண்ணாக இருக்கிறார் சுப்பு (துஷாரா விஜயன்). உணவு டெலிவரி பண்ணப்போன இடத்தில் அர்ஜூன்தாசுக்கும் துஷாராவுக்கும் இடையே காதல் உதயம். ஒருவர் பிரச்சினைக்கு அடுத்தவர் ஆறுதலாக இருக்கும் இவர்கள் காதல் வாழ்வில் எதிர்பாராத விதமாக நிகழும் ஒரு மரணம் அவர்கள் வாழ்க்கையை எப்படியெல்லாம் புரட்டிப்போடுகிறது என்பதை நீதிக்கு நெருக்கமாக நின்ற சொல்லியிருப்பதே இந்த ‘அநீதி.’
நிஜ வாழ்க்கையில் மன அழுத்தத்தினால் அவதியுறும் அர்ஜூன்தாஸ் ஒருபக்கம். கற்பனை உலகினில் கோபப்பட்டு எதிர்வினையாற்றும் அர்ஜுன் தாஸ் இன்னொரு பக்கம். இருவேறு பரிமாணங்களிலும் நடிப்பில் சிக்சராக விளாசுகிறார். போலீசில் தனது உயிர்க் காதலிக்காக கொலையை ஒப்புக் கொண்டு அடி வாங்கும் இடத்தில்
நாயகனின் மனநல பிரச்னைகளைப் புரிந்து கொள்ளும் இடங்களிலும், வேலை செய்யும் இடத்தில் வீட்டு உரிமையாளர்களுக்கு பயந்து அச்ச உணர்வினை வெளிப்படுத்தும் காட்சிகளிலும் தனக்குக் கொடுக்கப்பட்ட பாத்திரத்துக்கு நடிப்புச் சிறப்பு செய்திருக்கிறார், துஷாரா விஜயன். தன் மேல் கொலைக்குற்ற நிழல் படியும் போலீஸ் நிலைய காட்சியில் காதலனை ஆவேசமாய் அடித்து வெளுக்கிற இடம் நடிப்பின் உச்சம்.
பணக்காரத் திமிர் கொண்ட பாட்டியாக வரும் சாந்தா தனஞ்செயன் அந்த கேரக்டரில் பதிந்து போகிறார். திருநெல்வேலி வட்டார வழக்கில் வெள்ளந்தி மனிதராக வரும் காளி வெங்கட் நெகிழ வைக்கிறார். உடல்மொழி, வசன உச்சரிப்பு என நடிப்பில் புது அவதாரம் எடுத்திருக்கிறார். அவரது மகனாக வரும் குழந்தை நட்சத்திரம் ரெனிஷ் தந்தைப் பாசத்தில் மனதை கலங்கடிக்கிறான். வனிதா விஜயகுமார், சுரேஷ் சக்ரவர்த்தி, அர்ஜுன் சிதம்பரம் நடிப்பில் தேர்ந்த வில்லத்தனம். நாயகன் நண்பர்களாக பரணி, அப்துல் லீ இயல்பான நடிப்பில் இதயம் நிறைகிறார்கள். போலீஸ் அதிகாரியாக ஜே.எஸ்.கே.சதீஷ் அமர்க்களம்.
உழைக்கும் வர்க்கத்திற்கு முதலாளிகளால் இழைக்கப்படும் அநீதிக்கு என்ன தீர்வு? என்பதை ஒருபக்கம் பேசும் படம், அப்படியே ஒரு ஆழமான காதலுக்கு குறுக்கே நிற்கும் அதிகாரத் திமிரையும் அழுத்தமாக பேசி விடுகிறது. அர்ஜுன் தாஸ் பிளாஷ்பேக் இனி சாக்லெட் கசக்கிற அளவுக்கு உருக்கம்.
எளியவர்களுக்கு இந்த சமூகத்தில் நீதி கிடைப்பதில்லை என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கும் இயக்குநர் வசந்தபாலன், அவர்கள் கோபமடைந்தால் என்னவாகும் என்பதை சொல்லிய விதம் வன்முறையாகவே இருந்தாலும், அவர்களின் வலி அதைவிட பெரியது என்பதை நமக்கு கடத்தி விடுகிறார்.
இந்த ‘அநீதி’க்கு தாராளமாக துணை போகலாம்.
