சத்திய சோதனை பட விமர்சனம்

ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு பகுதியில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்யும் நாயகன் பிரேம்ஜி, அங்கே ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்க்கிறார். உடனே அந்த உடலை ஒரு ஓரமாக இழுத்து வைப்பவர், அந்த உடலில் இருக்கும் வாட்ச், செல்போன், அரை சவரன் தங்க சங்கிலி ஆகியவற்றை எடுத்துக்கொண்டு காவல் நிலையத்தில் ஒப்படைக்க செல்கிறார்.
அதே சமயம், நடந்த கொலைக்காக காவல் நிலையத்தில் சரணடையும் கொலையாளிகள், கொலை செய்யப்பட்டவர் ஏகப்பட்ட தங்க நகைகளை அணிந்திருந்ததாக சொல்கிறார்கள். இதனால் பிரேம்ஜி மீது சந்தேகப்படும் காவல்துறை, ‘மற்ற நகைகள் எங்கே?’ என்று கேட்டு அவரை டார்ச்சர் செய்ய… அவரோ அடிவாங்கிக் கொண்டே தெரியாது என்று சொல்ல… அந்த தங்க நகைகள் என்ன ஆனது? அப்பாவியான பிரேம் ஜி-யை சட்டம் என்ன செய்தது? என்பதை சிரிக்க, சிரிக்க சொல்லியிருக்கிறார் இயக்குநர் சுரேஷ் சங்கையா.
பிரதீப் என்ற அப்பாவி இளைஞர் வேடத்திற்கு சரியான தேர்வாக இருக்கிறார், பிரேம்ஜி. தன் மீதான போலீஸ் வளையம் தெரியாமல் ‘கட்அண்ட் ரைட்’டாக போலீஸ் அதிகாரிகளிடம் பேசும் இடத்தில் அப்பாவி கிராமத்து இளைஞனை கண்முன் நிறுத்துகிறார்.
நாயகியாக நடித்திருக்கும் ஸ்வயம் சித்தாவுக்கு ஒரு காதல் பாடல், சில காட்சிகளில் வந்து போகிற வேலை. அதை சரியாய் செய்திருக்கிறார்.
காவலர்களாக நடித்திருக்கும் சித்தன் மோகன் மற்றும் செல்வ முருகன் இருவரும் அத்தனை சீரியஸ் காட்சியிலும் சிரிக்க வைக்கிறார்கள்.
நீதிபதியாக நடித்திருக்கும் கு.ஞானசம்பந்தம், தப்பு செய்த காவலர்களை கலாய்க்கும் இடத்தில் ரசிக்க வைக்கிறார்.
பிரேம்ஜியின் அக்காவாக ரேஷ்மா, மாமாவாக கர்ணராஜ், பெண் போலீஸாக ஹரிதா, போலீஸ் இன்பார்மராக ராஜேந்திரன், நீதிபதிக்கே உத்தரவு போடும் பாட்டி என அத்தனை கேரக்டர்களும் கதைக்குள் அழகுற இணைந்து கொள்கிறார்கள்.
ஆர்.வி.சரணின் கேமரா அந்த செம்மண் தேரி கிராமத்தை அழகுற காட்சிப்படுத்துகிறது.
எளியவருக்கு சட்டம் என்றுமே உதவாது என்பதை பதிவு செய்த விதத்தில் இயக்கிய சுரேஷ் சங்கையா, கவனம் பெறுகிறார்.
