திரை விமர்சனம்

கொலை- விமர்சனம்

ஒரு நல்ல கலைப்படைப்பில் கதைக்களம் கொலையாக இருந்தால் கூட ரசிக்க முடியும் என்பதற்கு சாட்சியாக இருக்கிறது கொலை படம்

இந்தப்படத்தின் கதையை முழுமையாக விவரித்தால் ரசிகனுக்கு நல்ல திரையனுபவம் முழுமையாகாது என்பதால் சின்னதாக மட்டும் ரிவில் செய்வோம். நாயகி லைலா மிக அழகான மாடல். அவருக்கு சிங்கர் ஆகவேண்டும் என கனவு. அந்தக் கனவும் ஈடேறி வருகிறது. இச்சூழலில் அவர் கொல்லப்படுகிறார். அந்தக் கொலையைப் பற்றி விசாரிக்க வருகிறார் விஜய் ஆண்டனி. லைலா எப்படி கொலை செய்யப்பட்டார்? யாரால் கொலை செய்யப்பட்டார்? என்ற தேடலுக்கான பதில் தான் மீதிப்படம்

இந்தப்படம் விஜய் ஆண்டனி கரியரில் மிக முக்கியமான படம். வித்தியாசமான கெட்டப்பில் மற்றும் உடல்மொழியில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். லைலாவாக வரும் மீனாட்சி தன் நடிப்பின் மூலம் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளார். சிறிய கேரக்டர் என்றாலும் தனித்து தடம் பதித்துள்ளார் நடிகை ராதிகா சரத்குமார். மீனாட்சியின் நண்பர் கேரக்டரில் நடித்துள்ளவர் உளவியல் சார்ந்த பிரச்சனை உள்ளவராக நடித்துள்ளார். அது நன்றாக கதையில் வொர்க்கவுட் ஆகியுள்ளது. விஜய் ஆண்டனியின் விசாரணையில் உற்ற துணையாக. வரும் ரித்திஜா சிங் கம்பீர நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். சில இடங்களில் வந்தாலும் தனது அசால்டான உடல்மொழியால் அல்டிமேட் ஆக ஈர்க்கிறார் ஜான் விஜய்

புதியபறவை படத்தில் இடம்பெற்ற பார்த்த ஞாபகம் இல்லையோ என்ற பாடல் இப்படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. மெல்லிசை மன்னர் விஸ்வநாதன் அவர்களின் இசையில் உருவான அப்பாடல் காலம் கடந்தும் நம் காதுகளை வசீகரித்து இதயத்தை வருடுகிறது. படத்தின் பின்னணி இசையிலும் மெல்லிசை மன்னரின் ட்யூனே பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தப்படத்தின் இசை அமைப்பாளர் சிறப்பான வேலையைச் செய்துள்ளார். படத்தின் மற்றொரு ஹீரோ கேமராமேன். லைட்டிங் அமைப்பும் கேமரா கோணங்களும் படமெங்கும் அசத்துகிறது. இயக்குநர் ஆங்கிலப்பட மேக்கிங்கில் பரிச்சயம் உள்ளவர் என்பதால் அட்டகாசமான ஒளிப்பதிவை வாங்கியுள்ளார். படத்தின் பல.காட்சிகள் ஹாலிவுட் படங்களை நினைவூட்டுகின்றன. எடிட்டரின் பணியும் படத்தின் பெரும் பாசிட்டிவ் அம்சம்

ஒரு கொலையின் பின்னணியில் துவங்கும் கதை கொஞ்சம் கொஞ்சமாக வேகமெடுத்து அசுரப்பாய்ச்சலில் செல்கிறது.. இடைவேளை வரை மின்னல் என பாயும் திரைக்கதை இடைவேளைக்குப் பிறகு எமோஷ்னல் கலந்த திரில்லராக பயணிக்கிறது. நிச்சயமாக ரசிகனுக்கு வித்தியாசமான திரை அனுபவத்தை வழங்கும் இந்தக் கொலை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *