சினி நிகழ்வுகள்

‘‘டாக்டர் படம் மாதிரி மாவீரன் படத்திலும் என்னை வேறுமாதிரி பார்ப்பீர்கள்…’’ செய்தியாளர் சந்திப்பில் நடிகர் சிவகார்த்திகேயன் உறுதி

‘மண்டேலா’வெற்றிப் படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் படம் ‘மாவீரன்’. இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்திருக்கிறார். வில்லனாக மிஷ்கின் நடிக்க, முக்கிய கேரக்டர்களில் சரிதா, யோகிபாபு, தெலுங்கு நடிகர் சுனில், மோனிஷா பிளஸி இருக்கிறார்கள்.

 

விது அய்யனா ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு பரத் சங்கர் இசையமைத்திருக்கிறார்.. பிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்ய, குமார் ஞானப்பன் மற்றும் அருண் வெஞ்சரமூடு கலை இயக்குநர்களாக பணியாற்றியிருக்கிறார்கள்.

சாந்தி டாக்கீஸ் சார்பில் அருண் விஷ்வா தயாரித்திருக்கும் இந்த படம் வரும் ஜூலை 14 ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகிறது. தமிழகத்தில் இப்படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

 

இந்தநிலையில், சென்னையில் மாவீரன் படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தார்கள்.

 

நிகழ்ச்சியில் நடிகர் சிவகார்த்திகேயன் பேசுகையில், “பொதுவாக அனைத்து படங்களின் வெளியீட்டின் போதும் சிறு டென்ஷன் இருக்கும். இந்த படத்துக்கும் அப்படித்தான், இருந்தாலும் டென்ஷனை விட எக்சைட்மென்ட் தான் அதிகமாக இருக்கிறது. படத்தை உங்களிடம் காட்டப்போகும் எக்சைட்மெண்ட் அது. ‘மண்டேலா’ படம் பார்த்து விட்டு பத்திரிகையாளர்கள் மிகப்பெரிய மரியாதை கொடுத்தார்கள். அந்த படத்தை பார்த்து விட்டு தான் இந்த பண்ணலாம் என்று யோசித்தோம்.

இயக்குநர் மடோன் தேர்வு செய்யும் கதைகள் எல்லாமே கடினமானதாக இருக்கும். ஆனால், அதை சமூக பார்வையோடும், சமூக அக்கறையோடும் சொல்வது மட்டும் இன்றி ஜனரஞ்சகமான முறையில் அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொள்ளும்படியும், ரசிக்கும்படியும் கொடுக்கிறார். மண்டேலா படத்தை வீட்டில் பார்க்கும் போது, என் குழந்தைக்கு படம் பிடித்தது. என் அம்மாவுக்கு படம் பிடித்தது, எனக்கும் ரொம்ப பிடித்தது. புதிய சினிமாவை விரும்புகிறவர்களுக்கு அந்த படம் சரியானதாக இருந்தது. பொழுதுபோக்கு அம்சம் கொண்ட படங்களை விரும்புகிறவர்களையும் அந்த படம் திருப்திப்படுத்தியது. அதேபோல், நல்ல விஷயம் இருக்கிறதா? என்று எதிர்ப்பார்க்கிறவர்களுக்கும் அது சரியான படமாக இருந்தது. இது அனைத்தையும் சேர்த்து ஒரு திரைப்படமாக கொடுப்பது மிக கடினமானது. அதை அவர் மண்டேலா படத்தில் செய்திருந்தார்.

அதேபோன்று ஒரு கதையை தான் மாவீரன் படத்திலும் கையாண்டிருக்கிறார். கதை, களம் வேறாக இருந்தாலும் அவருடைய சமூக அக்கறை இந்த படத்திலும் இருக்கிறது. ஆனால், இந்து படத்தில் கருத்து சொல்கிறது போல் எங்கேயும் காட்சியோ அல்லது வசனங்களோ இடம்பெறவில்லை. ஆனால், இந்த படம் அனைவரிடமும் சென்றடையும், அந்த விஷயத்தை இயக்குநர் மடோன் மிக அழகாக செய்திருக்கிறார்.

நான் வழக்கமாக நடிக்கும் படங்கள் போல் மாவீரன் இருக்காது. டாக்டர் படத்தில் எப்படி என்னை வேறுமாதிரியாக பார்த்தீர்களோ அதுபோல் ‘மாவீரன்’ படத்திலும் வேறுமாதிரியான சிவகார்த்திகேயனை பார்ப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அதற்கு முழு காரணம் மடோன் தான். அவருக்கு ரொம்ப நன்றி. நிறைய சொல்லிக்கொடுத்தார் அதற்கும் நன்றி. மாவீரன் ஒரு பேண்டஸி ஜானர் படம், ஆனால் இதை எதார்த்தமான பின்னணியில் மிக அழகாக இயக்குநர் மடோன் பொருத்தியிருக்கிறார்.

தயாரிப்பாளர் அருணுக்கு நன்றி, அவர் என் நண்பர். பணம் போடுவது மட்டும் தயாரிப்பாளர் வேலை என்று நினைக்காமல், ஒரு படத்தை சரியான முறையில் கொண்டு சேர்க்கும் அத்தனை வேலைகளையும் அருண் சரியாக செய்வார். இந்த நிமிடம் வரை படம் பற்றி யோசித்துக்கொண்டிருக்கும் அவர், ஒவ்வொரு விஷயங்களையும் பார்த்து பார்த்து செய்கிறார்.

 

மிஸ்கின் சாருக்கு ரொம்ப நன்றி, சினிமாவில் உங்கள் அளவுக்கு என்னிடம் யாரும் அன்பு செலுத்தியதில்லை. அவரது படத்தை முதல் நாளே பார்த்துவிடுவேன், அவரது படங்கள் அனைத்தும் எனக்கு ரொம்ப பிடிக்கும். அவருடன் பழகாதவரையில் அவர் மிக கோபக்கார ஆள் என்று நினைத்தேன். ஆனால், அவருடன் பழகியபோது தான் அவர் எவ்வளவு இனிமையானவர் என்று தெரிந்தது. அவர் மிகப்பெரிய அறிவாளி என்பது அனைவருக்கும் தெரியும், ஆனால் அதை ஒரு நாள் கூட எந்த இடத்திலும் காட்டாமல் அவர் இருந்தார், அவரது அறிவுக்கு அது தான் முதல் காரணம் என்று நினைக்கிறேன். இந்த படத்தில் நடிக்கும் போது இயக்குநர் சொல்லிய அனைத்தையும் செய்தார். இயக்குநராக இருக்கும் போது மன ரீதியாக உழைத்தால் போதுமானதாக இருக்கும், ஆனால் நடிகராக உடல் ரீதியாகவும் உழைக்க வேண்டும், அப்படி ஒரு நிலையில் மிஸ்கின் யார் எந்த இடத்திலும் முகம் சுளிக்காமல், எது சொன்னாலும் அதை செய்தார். அவருடன் பணியாற்றியது சிறப்பான அனுபவமாக இருந்தது. ஒரு நடிகராக கடினமாக உழைத்திருக்கிறார். இந்த படம் வெளியானால் இனி படம் இயக்குவதற்கு அவருக்கு நேரம் இருக்காது, என்று தான் தோன்றுகிறது.

நாயகியாக நடித்திருக்கும் அதிதி ஷங்கர், அவருடைய நிஜ கேரக்டருக்கு எதிர்மறையான ஒரு வேடத்தில் நடித்திருக்கிறார். மோனிஷாவும் சிறப்பான வேடத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். யோகி பாபு, சுனில் சார் என அனைவரையும் இயக்குநர் மடோன் சரியாக பயன்படுத்தியிருக்கிறார். படம் நிச்சயம் அனைவருக்கும் பிடிக்கும்.” என்றார்.

 

சரிதா மேடமுக்கு நன்றி. அவங்க ரோல் ரொம்ப பெஷலாக இருந்தது. அம்மா – மகன் உறவை மடோன் ரொம்ப அழகாக சொல்லியிருக்கிறார். சரிதா மேடம் எமோஷன் காட்சிகளில் நடிக்கும் போது மிக சிறப்பாக இருக்கும்’’ என்றார்.

இயக்குநர் மடோன் அஸ்வின் பேசுகையில், “இந்த படம் நான் இயக்குவதற்கு தயாரிப்பாளர் அருண் தான் காரணம், அவருக்கு என் நன்றி. பெரிய ஹீரோவுடன் பணியாற்றப்போகிறோம் என்ற உடன் எனக்கு பதற்றம் ஏற்பட்டது. எப்படி இருக்குமோ என்று பயந்தேன். ஆனால், சிவகார்த்திகேயனை சந்தித்த முதல் நாளிலேயே அவர் என்னுடன் சாதாரணமாக பழகி, என்னை சகஜ நிலைக்கு கொண்டு வந்தார். அவருக்கு ரொம்ப நன்றி. இந்த படத்தை நான் நினைத்தது போல் எடுப்பதற்கும், நான் சொல்ல வந்த கதையை எந்தவித மாற்றம் இல்லாமல் சொல்லியதற்கும் சிவகார்த்திகேயன் தான் காரணம், அதற்காகவும் அவருக்கு நன்றி.

 

சரிதா மேடம் இதுவரை நான் பார்த்த பாசமிகு பெண்ணாக இருக்கிறார். மற்றவர்களிடம் இவ்வளவு அன்பு காட்டும் ஒருவரை இப்போது தான் நான் பார்க்கிறேன். இந்த கதையை நான் அவங்களிடம் சொல்லி, அவங்க நடிக்க சம்மதம் தெரிவித்த பிறகு ஒன்றை மட்டும் சொன்னார்கள். இந்த படம் முடித்த பிறகு தான் மற்ற படங்களில் நடிப்பது பற்றி யோசிப்பேன், அதனால் எத்தனை நாட்கள் தேதி, எப்போது படம் முடியும் என்றெல்லாம் யோசிக்க மாட்டேன், நீங்களும் அதை யோசிக்காம படத்தை எடுக்க என்று சொன்னார். சொன்னது போலவே எப்போதும் கூப்பிட்டாலும் மறுக்காமல் வந்து பணியாற்றி கொடுப்பார். இயக்குநர் மிஷ்கின் சாருடன் பணியாற்றியது நல்ல அனுபவமாக இருந்தது. அவர் எனக்கு பிலிம் மேக்கிங் பற்றி பல விஷயங்களை சொல்லிக்கொடுத்தார், நான் இப்போது எந்த நிலையில் இருக்கிறேன், எதிர்காலத்தில் எப்படி இருப்பேன் என்பதையும் அவர் எனக்கு புரிய வைத்தார். அதிதி ஷங்கர் அவருடைய ரியல் லைப் கேரக்டருக்கு எதிமறையான ஒரு வேடத்தில் நடித்திருக்கிறார். .படம் நிச்சயம் ரசிகர்களுக்கு பிடிக்கும் விதத்தில் இருக்கும் என்று நம்புகிறேன், உங்கள் ஆதரவும் முக்கியம், நன்றி.” என்றார்.

 

நாயகி அதிதி ஷங்கர் பேசுகையில், “இந்த படத்தில் நான் பத்திரிகை நிருபராக நடித்திருக்கிறேன். நான் ஜாலியாக இருக்கக் கூடிய பெண், ஆனால் மாவீரன் படத்தில் அப்படி இருக்க மாட்டேன், வித்தியாசமாக இருக்கும். சிவகார்த்திகேயனின்அடுத்த படத்திற்கான அழைப்புக்காக நான் காத்துக்கொண்டிருக்கிறேன். படத்தில் சிவகார்த்திகேயன் அடிக்கடி மேலே பார்க்கிறார், அதற்கான காரணத்தை ஜூலை 14 ஆம் தேதி தெரிந்துக்கொள்ளுங்கள்.” என்றார்.

 

இயக்குநர் மிஷ்கின் பேசுகையில், “நான் பார்த்த ஒழுக்கமான நடிகர்களில் சிவகார்த்திகேயன் மிக முக்கியமானவராக இருக்கிறார். மிக இனிமையானவர், கடினமாக உழைக்கக் கூடியவர் அவர் தொடர்ந்து வெற்றி பெறுவார். இயக்குநர் மடோன் அஸ்வின் மிக திறமையான இயக்குநர் அவர் இன்னும் நாற்பது ஆண்டுகள் சினிமாவில் பல வெற்றிகளை தொடுவார், அவருக்கு என் வாழ்த்துகள். படம் நிச்சயம் வெற்றி பெறும்.” என்றார்.