திரை விமர்சனம்

ராயர் பரம்பரை பட விமர்சனம்

காதலர்களுக்கு எதிரான சங்கத்தில் உறுப்பினராக இருக்கிறார், நாயகன் கிருஷ்ணா. இந்த சங்கத்திற்கு தலைவர் மொட்டை ராஜேந்திரன் காதலிப்பவர்களை கண்டால் பிரித்து விடுவதே இவர்கள் வேலை. இதே ஊரில் தாதாவாக இருக்கிறார் ஆனந்த்ராஜ். தன் தங்கை கஸ்தூரி காதல் திருமணம் செய்து பிரிந்து விட்டதால், தன் மகள் சரண்யா காதலில் விழுந்து விடாமல் கண் கொத்திப் பாம்பாக கண்காணிக்கிறார்.

ஆனால், ஜோசியக்காரர் மனோபாலாவோ, இவர் எண்ணத்தில் அதிர்வேட்டு வைக்கிறார். உங்க பொண்ணுக்கு நிச்சயம் காதல் திருமணம் தான் நடக்கும் என்று அடித்துக் கூற, அதனால் இன்னும் அதிக எச்சரிக்கையாகி மகள் கண்காணிப்பு படலத்தை தொடர்கிறார்.

இந்நிலையில் கிருஷ்ணாவுக்கும் சரண்யாவுக்கும் மோதலில் தொடங்கி காதல் வர, அப்படியே ரகசிய திருமணமும் செய்து கொள்கிறார்கள். இந்த விஷயம் காதலர்களுக்கு எதிரான சங்கம் நடத்தும் தலைவர் மொட்டை ராஜேந்திரனுக்கு தெரிய வர, அதன்பிறகு சங்கம் காதல் ஜோடிகளுக்கு கிடுக்கிப்பிடி போட, அதேநேரம் சரண்யாவின் அப்பா ஆனந்தராஜின் காதுக்கும் இந்த விஷயம் போக… இனி என்ன நடந்திருக்கும்? அதே அதே தான்….முடிவு கலகலகல கிளைமாக்ஸ்.
நாயகனாக கிருஷ்ணா. ஆக்‌ஷன், டான்ஸ் என கலக்குபவர், காதல், காமெடி, சீரியஸ் காட்சிகளிலும் ஈர்க்கிறார். நாயகி சரண்யா காதலனுடனான செல்லச் சண்டைக் காட்சிகளில் ரசிக்க வைக்கிறார்.

காமெடி வில்லனாக ஆனந்த்ராஜ் சிரிக்க வைக்கிறார். சொல்லப் போனால் படத்தின் மிகப்பெரிய ரிலாக்சும் இவர் தான்.

கே.ஆர்.விஜயா, சேசு, ஆர்.என்.ஆர்.மனோகர், தங்கதுரை, கஸ்தூரி, ‘பவர்ஸ்டார்’ சீனிவாசன் என ஒரு பட்டாளமே படத்தில் இருக்கிறார்கள்.

காமெடியை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் ராம்நாத். பல இடங்களில் சிரிப்பு. சில இடங்களில் புன்னகை மட்டும். கணேஷ் ராகவேந்திரா இசையில் பாடல்கள் ரசிக்கலாம். விக்னேஷ் வாசுவின் ஒளிப்பதிவு பலம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *