திரை விமர்சனம்

பம்பர் பட விமர்சனம்

நண்பர்களுடன் கூட்டு சேர்ந்து திருடுவது, டாஸ்மாக் முடியிருக்கும் நாட்களில் பிளாக்கில் சரக்கு விற்பது என குற்றங்களை குத்தகைக்கு எடுத்து வைத்திருக்கும் தூத்துக்குடி புலிப்பாண்டிக்கு லோக்கல் போலீஸ் ஏட்டு மூலம் ஒரு கொலை செய்யும் அசைன்மென்ட் வருகிறது.
திருடன், அடிதடிக்கு அஞ்சாதவன் என்ற முறையில் சொந்த மாமன் பெண்ணின் வெறுப்பு வரை ஆளாகிற புலிப்பாண்டிக்கு பெரிய அளவில் செட்டிலாக ஆசை. அதனால் கொலை திட்டத்துக்கு ஒப்புக் கொள்கிறான். ஆனால் அந்த நேரமாகப் பார்த்து புதிதாக வருகிற போலீஸ் உயரதிகாரி புலிப்பாண்டியையும் அவனுடன் திரியும் கூட்டாளிகளையும் தேடிப்பிடித்து சுளுக்கெடுக்க முயற்சிக்க…
இதுதெரிந்த புலிப்பாண்டி தப்பிக்கும் நோக்குடன் நண்பர்களுடன் சபரிமலைக்கு மாலை போட்டு காவல்துறைக்கு அதிர்ச்சி கொடுக்கிறான். சபரிமலையில் அறிமுகமான லாட்டரி வியாபாரி இஸ்மாயிலிடம் 10 கோடி பம்பர் லாட்டரி சீட்டு ஒன்றை வாங்குகிறான். ஆனால் கவனக்குறைவாக அந்த சீட்டை அங்கேயே விட்டுவிட்டு ஊருக்கு வந்து விடுகிறான். அந்த சீட்டை எடுத்து பத்திரப்படுத்துகிறார், பெரியவர் இஸ்மாயில்.
ஆச்சரியமாய் அந்த சீட்டுக்கே பம்பர் பரிசு 10 கோடி விழ…. சீட்டு இருப்பதோ பெரியவர் இஸ்மாயில் கையில். அவர் குடும்பம் அந்த சீட்டை வைத்து கடன்களை அடைத்து நிம்மதியாக வாழலாம் என்று கணக்குப் போட, பெரியவரோ லாட்டரி சீட்டுக்குரிய புலிப்பாண்டியை தேடி அவனது ஊருக்கே வருகிறார். அவனை கண்டு பிடித்தாரா? சீட்டை ஒப்படைத்தாரா என்பது விறுவிறு சுவாரசிய திரைக்கதை.
ஒரு மனிதன் ஆயிரம் தடைகள் துன்பங்கள் வந்தாலும் வறுமைக்கோட்டில் உழன்றாலும் எந்த அளவுக்கு நேர்மையின் உச்சமாக வாழ முடியும் என்பதை நெஞ்சம் நெகிழ, சொல்லும் படம் இது. அதற்காகவே எழுதி இயக்கி இருக்கும் எம். செல்வகுமாரைக் கொண்டாடலாம்.
ஒருவன் ஏழையாக இருக்கும் போது நல்லவனா கெட்டவனா என்று பார்க்கும் உறவுகள் அவனிடம் பணம் வந்து விட்டால் மட்டும் எப்படி கண் மூடித்தனமாக கொண்டாடும் என்ற யதார்த்த அவலத்தையும் சொல்கிறது
படத்தில்
நாயகன் புலிப்பாண்டியாக வரும் வெற்றி நடிப்பால் அந்த பாத்திரத்தை பளபளப்பாக்கி இருக்கிறார். பணமில்லை என்பதற்காக உறவுகளிடம் அவமானப்படும் இடத்தில் அந்த ஆற்றாமையை அவர் பிரதிபலித்திருப்பது தனி அழகு. அத்தை மகளுடனான ஸ்கூட்டர் பயணத்தில் போலீஸ் ‘இவன் கூடவெல்லாம சேராம இரு என்ற போலீஸ் அத்தை மகளுக்கு புத்தி சொல்ல, அவமானம் சுமக்கும் அந்தஇடத்திம் அழகு. நடிப்புஅழகு.
படத்தின் பிரதான கேரக்டர் லாட்டரி சீட்டு விற்கும் இஸ்மாயில் பாய் தான். அந்த கேரக்டரை அழகுற சுமக்கிறார், ஹரிஷ்பெராடி. தன் வசம் இருக்கும் 10 கோடி ரூபாய் லாட்டரிச்சீட்டு வேறொருவருக்குரியது என்று அவர் சொன்னதும் மொத்தக் குடும்பமும் அவர்மீது வார்த்தை அம்புகளை வீசும் இடத்தில், அத்தனை வசவுகளையும் தாங்கிக்கொண்டு ஒரு இயலாமைப் பார்வை பார்க்கிறாரே, அங்கே உயர்ந்து நிற்கிறது அந்த கேரக்டரின் மேன்மை. கிளைமாக்சில்செருப்பை வாசலில் விட்டு விட்டு வீட்டுக்குள் போகும் அந்த இடம் காட்சியும் நடிப்பும் கோடி பெறும். ஐயா பெரியவரே உங்களுக்கு பம்பர்(விருதுகள்) காத்திருக்கு.

நாயகியாக ஷிவானி ஆரம்பத்தில் அத்தை மகனை வெறுக்கும் இடத்திலும், பின்னாளில் விரும்பும் இடத்திலும் இருவேறு உணர்வலைகளை முகத்தில் கொண்டு வருகிறார்.

நாயகனின் அம்மாவாக ஆதிரா பாண்டிச்செல்வி இன்னொரு நடிப்பு ஆச்சரியம். தனது போக்கிரி மகனுக்கு அண்ணன் வீட்டில் பெண் கேட்டு அவமானப்படும் இடத்திலும் சரி, தனது கடைக்கு காய்கறி வாங்க வந்த மருமகளிடம் பாசம் கொட்டும் இடத்திலும் சரி, நடிப்பில் தனிக்கொடி இவருடையது. இவரது மதனியாக வரும் சவுந்தர்யா மட்டும் என்ன…மருமகன் கோடீசுவரன் என தெரிய வந்தபிறகு இவரது திடீர் அன்பு தனி ரகம்.

ரவுடிகளுடன் கூட்டணி போடும் அந்த வில்ல(ங்க) ஏட்டையா கவிதாபாரதி, நடிப்பில் பின்னியிருக்கிற இன்னொருவர். எஸ்.பியாக கொஞ்ச நேரமே வந்தாலும் அருவி மதன் க்யூட்.
நாயகனின் நண்பர்களாக வரும் தங்கதுரை, திலீப், கல்கி பொருத்தமான தேர்வில் மனதில் நிலைக்கிறார்கள்.

துப்பாக்கி பாண்டியனாக அண்ணாச்சி ஜி.பி.முத்து காமெடியில் அதகளம் செய்கிறார். (சமீபத்தில் இவரை சரியாக பயன்படுத்திக் கொண்டது பம்பர் படம் தான்)

வினோத் ராமசாமியின் ஒளிப்பதிவு தூத்துக்குடிக்கும் சபரிமலைக்குமாக ஒளிவெள்ளம் பாய்ச்சி இருக்கிறது. ‘96’ படத்துக்கு பிறகு இந்த படத்தில் ‘97’ வாங்கி இருக்கிறார், இசையமைத்த கோவிந்த் வசந்தா. அந்த சபரிமலைப் பாட்டு நெஞ்சுக்குள் தேன்.

அறிமுக இயக்குனர் செல்வகுமாருக்கு இந்த படம் நிஜமாகவே ஜாக்பாட். கதை சொல்லும் நேர்த்தியிலும் தனித்து தெரிகிறார். முதல் பட இயக்குனர் என்று அவரே சொன்னாலும் நம்புவதற்கில்லை.

லாட்டரி சீட்டு ஒன்றை வைத்துக்கொண்டு சமய ஒற்றுமை, தனிமனித ஒழுக்கம், பணத்தால் மாறும் மனிதர்கள் என சுவாரசியமாய் கதைப்படுத்தி இருக்கிறார், எம்.செல்வகுமார். தூத்துக்குடியின் மண் மொழியும் சிறு சிறு கதாபாத்திரங்களுக்கு அந்த ஊர் முகங்களும் பொருத்தமாக பயன்படுத்தப்பட்ட விதமும் அழகு.

இது நல்ல சினிமாவை கொண்டாடும் ரசிகர்களுக்கான பம்பர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *