கஸ்டடி: வெங்கட்பிரபுவின் முதல் தெலுங்குப் படம்…நாக சைதன்யாவின் முதல் தமிழ்ப் படம்…

ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன், ஸ்ரீனிவாசா சித்தூரி புரொடக்ஷன்ஸ், பவன்குமார் வழங்கும் ’வெங்கட்பிரபுவின் ஹண்ட்’ என்ற டேக் லைனோடு நடிகர் நாக சைதன்யா, கீர்த்தி ஷெட்டி நடிப்பில் ‘கஸ்டடி’ டிரெய்லர் வெளியீட்டு விழா மற்றும் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
இந்த சந்திப்பில் படத்தின் நாயகன் நாக சைதன்யா, நாயகி கீர்த்தி ஷெட்டி, தயாரிப்பாளர் சீனிவாசா, நடிகர் பிரேம்ஜி ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவில் இயக்குநர் வெங்கட்பிரபு பேசியதாவது. ‘‘இது என்னுடைய முதல் தெலுங்கு படம். நாக சைதன்யாவின் முதல் தமிழ் படம். படத்தை தயாரித்த தயாரிப்பாளர்களுக்கு நன்றி. அதிக செலவில் எடுக்கப்பட்ட என்னுடைய முதல் படம் இது. அந்த அளவு இந்த கதை மேல் நம்பிக்கை வைத்த தயாரிப்பாளர்களுக்கு நன்றி. நாகசைதன்யாவிடம் முதலில் கதை சொன்னதும் அவருக்கு பிடித்துப் போனது. என்னுடைய முதல் தேர்வும் அவராகத்தான் இருந்தார். பிறகுதான் தயாரிப்பாளரிடம் கதை சொன்னேன். படம் முழுவதும் ஆக்ஷன் மோடிலேயே இருக்கும். வெங்கட்பிரபு படம் என்றாலே ஜாலியாகத்தான் இருக்கும் என்று நினைப்பவர்களுக்கு இந்தப் படம் புது அனுபவமாக இருக்கும். தீவிரமான கதைக்களம் கொண்டதாக இருக்கும்.
நாக சைதன்யாவுடன் சேர்ந்து முக்கியமான கதாபாத்திரம் செய்திருப்பவர் அரவிந்த்சாமி சார். அவரிடம் கதை சொல்லி கன்வின்ஸ் செய்வது கஷ்டம். கதை பிடித்து போய் ஒத்துக் கொண்டார். சரத்குமார், பிரியாமணி எல்லாருக்கும் நன்றி. கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடித்துள்ளார். எனக்கு தெலுங்கு புரியும். சைதன்யாவுக்கு தமிழ் தெரியும். மற்றவர்களும் தமிழ் நடிகர்கள் என்பதால் வேலை செய்ய எளிதாக இருந்தது. ராஜா சாரின் பெயர் என் படத்தில் வர வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை. அது இதில் நிறைவேறியுள்ளது. யுவனும் அருமையாக இசையமைத்துள்ளார். தமிழில் பிரேம் கதாபாத்திரத்தை தெலுங்கில் வெண்ணெல்லா நடித்துள்ளார். இது ஆக்ஷன் படம். மே 12 அன்று வெளியாகிறது, பார்த்து விட்டு சொல்லுங்கள்.’’
நடிகர் பிரேம்ஜி பேசியதாவது, ‘‘இந்தப் படத்தில் நான் சண்டை போட்டு சான்ஸ் வாங்கினேன். கெஸ்ட் ரோல் என்றால் கூட ஓகே என்று அண்ணனிடம் சண்டை போட்டு வாய்ப்பு வாங்கினேன். ஷூட்டிங் ஜாலியாக சென்றது. படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்.’’
படத்தின் நாயகி கீர்த்தி ஷெட்டி பேசியதாவது. ‘‘வெங்கட்பிரபு சாருடைய வழக்கமான படம் இது இல்லை என்று மீம்ஸ் பார்த்தேன். படம் வேறு விதமான எண்டர்டெயின்மெண்ட்டாக இருக்கும். அவர் படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி. இளையராஜா- யுவனுடன் படம் செய்ய வேண்டும் என்பது எல்லாருக்கும் கனவு. அது நிறைவேறி இருக்கிறது. நாக சைதன்யாவுடன் இது எனக்கு இரண்டாவது படம். சில்வர் ஸ்கிரீன் ஸ்ரீனிவாசா சார் தயாரிப்பிலும் இது இரண்டாவது படம் என்பது மகிழ்ச்சி. டிரெய்லர் உங்கள் அனைவருக்கும் பிடித்திருக்கும் என நினைக்கிறேன். அரவிந்தசாமி சார், சரத்குமார் சாருடன் வேலை பார்த்ததும் எனக்கு மகிழ்ச்சி. படம் சீரியஸாக இருந்தாலும் நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும்”.
நடிகர் நாக சைதன்யா பேசியதாவது. ‘‘கஸ்டடி படம் பற்றி பேசுவதற்கு முன்பு மனோபாலா சாரின் மறைவுக்கு வருத்தம் தெரிவிக்கிறேன். சென்னை சிட்டி என் வாழ்க்கையில் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. இங்கு ‘கஸ்டடி’ பட டிரெய்லர் வெளியிடுவதில் மகிழ்ச்சி. இரண்டு வருடங்களுக்கு முன்னால் வெங்கட்பிரபு சார் என்னிடம் இந்தப் படத்தின் கதை சொன்னபோது எக்சைட்மெண்ட்டாக இருந்தது. அதே நம்பிக்கை இப்போது பட வெளியீடு வரை இருக்கிறது. அரவிந்த்சாமி சாரை சின்ன வயதில் இருந்து பார்த்து வருகிறேன். அவருடன் இணைந்து நடித்தது எனக்கு பெருமை. கீர்த்தியுடன் இரண்டாவது படம் எனக்கு. ப்ளாக் பஸ்டர் மொமண்ட் என்றால் அது இளையராஜா சார் இசை தான். வெங்கட்பிரபு சார் என்றால் யுவன் இசை தான். இப்பொழுது இளையராஜா சாரும் கூட இருக்கிறார் என்பது பெருமை. தொழில்நுட்பக்குழு அனைவரும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது போல டிரெய்லரும் உங்களுக்கு பிடிக்கும். வெங்கட்பிரபு சாரின் வழக்கமான ஸ்டைல் இதில் மிஸ் ஆகாது. படம் பார்த்து விட்டு சொல்லுங்கள்’’ என்றார்.
