பொன்னியின் செல்வன்-2 பட விமர்சனம்

நந்தினியை மறக்க முடியாத ஆதித்த கரிகாலன், ஒவ்வொரு நாடுகளாய் கைப்பற்றி தனது எதிரிகளை அழித்து காதல் தந்த வலியை குறைத்துக் கொண்டிருக்கிறான். இலங்கையில் இருக்கும் அருண்மொழி வர்மனை குந்தவையின் ஆணைக்கிணங்க அழைத்து வரச் சென்றிருக்கும் வந்தியத்தேவன்… இன்னொரு பக்கம் வீரபாண்டியரை கொன்றதற்காக சோழர்களை பழி வாங்க சதி செய்து கொண்டிருக்கும் நந்தினி என கதை நகர, இதற்கிடையே பெரிய பழுவேட்டரையர் தலைமையில் சிற்றரசர்கள் ஒன்று கூடி மதுராந்தகனை தஞ்சை அரியணையில் அமர வைக்க போடும் சதித் திட்டம் வேறு ரகசியமாக நடந்து வருகிறது..
இந்த சமயத்தில், இலங்கையில் இருந்து தஞ்சைக்கு அருள்மொழி வர்மனும் வந்தியத்தேவனும் வரும் கப்பல் எதிரிகள் சதியால் கடலில் மூழ்கி விட… தன் தம்பி அருண்மொழித்தேவன் இறந்து போனதாக நம்பும் அண்ணன் ஆதித்த கரிகாலன், கடலில் மூழ்கடிக்கும் ஏற்பாட்டை செய்த செய்த நந்தினியை பழி தீர்க்க படைகளுடன் கிளம்புகிறான். இதோடு முதல் பாகம் முடிவடைகிறது.
இரண்டாம் பாகத்தில் கடலில் மூழ்கிய அருண்மொழி வர்மனும், வந்தியதேவனும் ஊமை ராணி மந்தாகினியின் உபயத்தால் உயிர் பிழைத்து வருகிறார்கள். அருண்மொழி வர்மன் உயிர்பிழைத்த சேதி தஞ்சை அரண்மனையை எட்ட, அங்கே பழி வாங்கவே காத்திருக்கும் நந்தினிக்கும் இந்த தகவல் தெரிய வருகிறது. அவள் அருண்மொழி வர்மன், ஆதித்ய கரிகாலன் மற்றும் அவர்களின் தந்தை ராஜேந்திர சோழன் ஆகிய மூவரையும் ஒரே சமயத்தில் கொலை செய்ய சதி திட்டம் தீட்டுகிறாள்.அதற்கு முதல்கடடமாக கடம்பூருக்கு தன்னை சந்திக்க ஆதித்த கரிகாலனுக்குஅழைப்பு விடுகிறார்கள். இதில் சதி இருக்கிறது என்று வந்தியத்தேவனும் அருண்மொழி வர்மனும் தடுத்தும் கேளாமல் நந்தினியை சந்திக்க பயணப்படுகிறான் ஆதித்த கரிகாலன்.
நந்தினியின் சதி திட்டத்தை முறியடித்து ஆதித்த கரிகாலனை காப்பாற்ற வந்தியத்தேவனும் ரகசியமாக கடம்பூர் போகிறான். அவனால் ஆதித்த கரிகாலனை காப்பாற்ற முடிந்ததா?
இளவரசர் அருண்மொழி வர்மனை காப்பாற்றிய ஊமை ராணி மந்தாகினி யார் என்ற கேள்விக்கு விடையும் இரண்டாம் பாகத்தில் இருக்கிறது.
முதல் பாகத்தில் அனைவரின் அறிமுகக் காட்சியையும் முழுப் படமாக விவரித்த இயக்குநர் மணிரத்னம், இரண்டாம் பாகத்தில் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் வரும்படி திரைக்கதை அமைத்து ரசிகர்களை சோழ தேசத்திற்கே அழைத்துச் சென்று விடுகிறார்.
ஆதித்த கரிகாலனாக விக்ரம் அட்டகாசம். தம்பி தங்கையிடம் பாசமிகு அண்ணனாகவும், நந்தினியிடம் நெகிழும் காதலனாகவும் தன்னுடைய நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி பார்ப்பவர்களை கவர்ந்திருக்கிறார். குறிப்பாக இவரும் நந்தினியும் சந்தித்துக் கொள்ளும் காட்சி எந்தக் கோணத்துக்குள்ளும் அடங்காத உணர்ச்சிக் குவியல் அங்கே காதல் கொட்டுகிறது. கண்ணீர் சொட்டுகிறது. மரணம் எட்டத்தில் இருந்தும் காதல் அந்த வலியை மறக்க வைக்கிறது. ஆதித்த கரிகாலனும் நந்தினியும் உணர்ச்சிப் பிழம்பாகவே மாறி நமக்குள் பரபரப்பையும் பரிதவிப்பையும் கடத்தி விடுகிற அந்த இடம் நடிப்பின் உச்சம். உன்னதம்…
பொன்னியின் செல்வன் அருண்மொழி வர்மன் (ஜெயம் ரவி) ஒரு அரசன் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருக்கிறார். அரசனுக்கே உண்டான அழகும், தெளிவும், மிடுக்கான தோற்றமும், நடையும் அழகு…அழகு. அத்தனை அழகு. பாசமிகு மக்கள் ஒரு பக்கம்…கொல்லத் தயாராக மாறுவேடத்தில் இருக்கும் எதிரிகள் ஒரு பக்கம். இரண்டுக்கும் நடுவே நடுநாயகமாய் யானை மீது ஏறுகிற இடத்தில் எதையும் எதிர்கொள்ளும் அந்த ராஜ கம்பீரம் சிலிர்க்க வைக்கிறது.
கண் கட்டப்பட்ட நிலையில் வந்தியத் தேவன் கார்்த்தியிடம், குந்தவை திரிஷா விசாரணை நடத்தும் அந்த ஒரு காட்சி போதும், இருவருக்கும். காதல் மெலிதாய் கட்டவிழும் அந்த இடம், பார்த்த கண்களில் பரவசம் நிச்சயம்.
தனக்கான நேரத்திற்காக காத்திருந்து ஒவ்வொரு காயாக நகர்த்தி சோழ தேசத்தை பழிவாங்கும் நந்தினி ஐஸ்வர்யாராய், தன் தாய் பற்றிய ரகசியம் தெரியவரும்இடத்தில் நடிக்கிறாரா, அந்த கேரக்டரில் வாழ்ந்தாரா…பட்டிமன்ற விவாதமே நடத்தலாம்.
முக்கிய கதாபாத்திரத்தில் வரும் ஆழ்வார்க்கடியான் நம்பி ஜெயராம், கார்த்தியை போல் படம் முழுவதும் வருகிறார். கிடைக்கிற இடைவெளியில் கூட சிரிக்க வைக்கிறார். பெரிய பழுவேட்டரையராக சரத்குமார், சின்ன பழுவேட்டரையராக பார்த்திபன், மதுராந்தகன் ரகுமான், செம்பியன் மாதேவி ஜெயசித்ரா, சுந்தர சோழர் பிரகாஷ்ராஜ், பார்ப்பேந்திர பல்லவன் விக்ரம் பிரபு, பெரிய வேளாளர் பிரபு, பாண்டிய நாட்டின் ரவி தாசன் கிஷோர், பூக்கார சேர்ந்தன் அமுதன் , பாண்டிய ஒற்றன் கிஷோர் என சரித்திரப் பாத்திரங்களில் சரித்திரம் பேச வைக்கிறார்கள்.
ரவிவர்மனின் இதயம் ஊடுருவும் ஒளிப்பதிவும் ஏ.ஆர்.ரகுமானின் இசைப்பிரவாகமும் வேறு லெவல். கலை இயக்கம் மூலம் நம்மை சோழர் காலத்துக்கே கடத்திப் போய் விடுகிறார், தோட்டா தரணி.
அமரர் கல்கியின் நாவலை எடுத்துக் கொண்டு அதற்கு திரை வண்ணம் கொடுத்த விதத்தில் மணி ரத்னத்தின் பங்கு அளப்பரியது.மணிரத்ன திரைவரலாற்றில் இது மைல்கல்.
