திரை விமர்சனம்

முந்திரிக்காடு பட விமர்சனம்

எழுத்தாளர் இமையத்தின் ‘பெத்தவன்’ கதை மு.களஞ்சியம் இயக்கத்தில் திரைப்படமாகி இருக்கிறது.

சாதி மறுப்பு காதல் திருமணம் செய்பவர்களை கொலை செய்கிறது, ஆதிக்க சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் குழு. இந்நிலையில், ஐ.ஏ.எஸ். ஆக வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் ஆதிக்க சமூகத்தைச் சேர்ந்த இளம்பெண் தெய்வத்திற்கும், காவல்துறை அதிகாரியாக வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த செல்லாவிற்கும் காதல் வர, இதனால் செல்லாவைக் கொலை செய்ய முடிவெடுக்கிறது இளைஞர் குழு. அதேநேரம் தெய்வத்தை ஆணவக் கொலை செய்ய அந்த ஊரே கூடி முடிவெடுக்கிறது.

இறுதியில் காதலர்கள் தப்பித்தார்களா? என்பதைப் பதைபதைக்கும் காட்சிகளில் சொல்ல முயன்றிருக்கிறார், இயக்குநர் மு.களஞ்சியம்.
நாயகனாக நடித்திருக்கும் புகழ் மகேந்திரன் முதல் பாதியில் வரும் அப்பாவித்தனமான இளைஞன் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்துகிறார். நாயகிக்கு உதவி செய்யப் போய் பல முறை சாதி வெறியர்களால் தாக்கப்பட்டும் வன்முறை பாதைக்குப் போகத் தெரியாமல் சமாளிக்கும் இடத்தில் அப்பாவி கிராமத்து இளைஞனை பிரதிபலிக்கிறார். போலீசாகிற இடத்தில் மட்டும் அந்த தெனாவெட்டு பார்வையில் ‘இவரா இவர்’ என்று கேட்க வைக்கிறார்.

காதலியாக தெய்வம் கேரக்டரில் வரும் சுபப்பிரியாவுக்கு இது முதல் படமாம். நம்பமுடியாத அளவுக்கு அந்த அழுத்தமான கேரக்டரை நடிப்பால் சுமக்கிறார். மொத்தப் படத்தையும் இவரது கேரக்டர் தான் தாங்குகிறது. அதற்கு ஈடு கொடுத்த நடிப்பு இவரது ஸ்பெஷலாகி விடுகிறது.
கண்டு கொள்ளாமல் போகும் நாயகனை விரட்டிச் சென்று பிடித்து கேள்வி கேட்கும் இடத்திலும், அத்தனை அடித்தும் தன் காதலில் உறுதியாய் இருப்பதாக அவர் சொல்லும்போதும் விருது தேடி வரும் நடிப்பு.
காவல்துறை அதிகாரி அன்பரசனாக சீமான் இயல்பான நடிப்பில் கவர்கிறார். லத்தியை தூக்காத ஒரு இன்ஸ்பெக்டராக அடிதடி கும்பலுக்கு அறிவுரை சொல்லி அனுப்பும் பொறுப்புள்ள அதிகாரியை கண்முன் நிறுத்துகிறார்.
கிளைமாக்ஸ் காட்சியில் துப்பாக்கியை வைத்து சாதி கட்சித் தலைவரை மிரட்டியனுப்பி ‘சிறப்பு’ என்று சொல்லும்போது தியேட்டரில் கை தட்டல் எழுகிறது.
ஏ.சிவசுந்தரத்தின் கேமிரா முந்திரிக் காட்டுப் பகுதிகளையும், கிராமங்களையும் தத்ரூபமாக படமாக்கியிருக்கிறது.
பாடல் வரிகள் நம் காதுகளில் விழும் அளவுக்கு மெல்லிய இசையால் நிரப்பியிருக்கிறார் இசையமைப்பாளர் ஏ.கே.பிரியனின் இசையில் பாடல்கள் இனிமை. பின்னணி இசை மிரட்டல்.
சொல்ல வந்த கருத்தை இன்னும் கொஞ்சம் அழுத்தமாக சுருங்கச் சொல்லியிருந்தால், கண்டிப்பாக முந்திரிக்காடு படம், மு.களஞ்சியத்தின் இயக்க வரிசையில் இ்ன்னொரு களஞ்சியமாகி இருக்கும்.