சினிமா செய்திகள்

1947 ஆகஸ்ட் 16 பட விமர்சனம்

சுதந்திரத்திற்கு முன்பு நடக்கும் கதை. திருநெல்வேலி மாவட்டத்தில் மலைகளால் சூழப்பட்ட செங்காடு எனும் சிறு கிராமம் பருத்தி விளைச்சலுக்குப் பெயர் பெற்றது. இந்தப் பருத்தியை வைத்து கொள்ளை லாபம் பார்க்க ஆசைப்படும் பிரிட்டிஷ் அரசு, ராபர்ட் க்ளைவ் எனும் கொடூரமான ஆங்கிலேய அதிகாரியை வைத்து அப்பாவி கிராமத்தினரைக் கொத்தடிமைகளாக்கி வேலை வாங்குகிறது. அதுவும் எப்படி? வேலை நேரத்தில் பேசுவதோ, சாப்பிடுவதா, நீர் அருந்துவதோ, இயற்கை உபாதைகளோ எதையும் செய்ய விடாமல் உச்சபட்ச கொடுமை.
தந்தையின் கொடூரம் இப்படி இருக்க, அவரது மகன் ஜஸ்டினோ (ஜேசன்) அந்த கிராமத்துப் பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்துகிறார். அதை எதிர்த்து கேள்வி கேட்பவர்களை கழு மரத்தில் ஏற்றி, அதை ஊர் மக்களை பார்க்கச் செய்து மக்கள் வாயை மூடி விடுகிறார்.

இந்நிலையில் அந்த ஊர் ஜமீன் மகளை பார்க்கும் அதிகாரி மகன் அவளை அடைய அத்து மீற, அவளை மனதார விரும்பிய அந்த ஊர் இளைஞன் பரமன் அவனை கொன்று விடுகிறான்.
இந்த சமயத்தில் 1947 ஆகஸ்ட் 15 அன்று இந்தியாவிற்குச் சுதந்திரம் கொடுக்க முடிவெடுக்கிறது பிரிட்டிஷ் அரசு. இந்தச் செய்தியை அம்மக்களிடம் இருந்து மறைத்து, தன் மகனின் இறப்பிற்குப் பழிவாங்க அதற்கு அடுத்த நாளான 1947 ஆகஸ்ட் 16-ம் தேதி ஆங்கிலேயப் படைகளுடன் செல்கிறான் ராபர்ட் க்ளைவ். ராபர்ட்டின் தேடுதல் வேட்டையில் பரமன் தப்பினானா? ராபர்ட் க்ளைவிடம் இருந்து அம்மக்கள் தப்பினார்களா, சுதந்திரத்தை அனுபவிக்கத் தொடங்கினார்களா என்பது திரைக்கதை.
மிக சுவாரஸ்யமான ஒரு கதைக்களம் இந்தப் படத்தின் முதல் பலம். அறிமுக இயக்குநர் பொன்குமார் தனது முதல் கதையையே வித்தியாசமாக கொடுக்க முயற்சித்திருக்கிறார்.
பரமனாக கௌதம் கார்த்தி வசீகரிக்கிறார். ஜமீன் மகளிடம் காதலை மறைக்கும் இடங்களில் நடிப்பில் காதல் கொடி கட்டுகிறார். ஆரம்பத்்தில் ஊர் மக்கள்ளிடம் அவர் ஒட்டாததற்கு சொல்லப் படும் காரணம் பொருத்தமாக இல்லை. கிளைமாக்ஸில் மக்களிடம் பேசும் இடத்தில் நடிப்பில் கவனிக்க வைக்கிறார்.

நடிகர் புகழுக்கு வெறும் காமெடி அல்லாத ஒரு முக்கியமான பாத்திரம். பேசமுடியாத அந்த கிளைமாக்சில் மனிதர் நெகிழ வைத்து விடுகிறார்.

நாயகி ரேவதி அழகாக இருக்கிறார். நடிக்கவும் வருகிறது.

நெகட்டிவ் ரோலில் வரும் ரிச்சர்ட், ஜேசன், ஜமீன்தார் மது சூதனனராவ் கேரக்டர்களில் அதிரடி காட்டுகிறார்கள்.

ஒளிப்பதிவாளர் செல்வகுமாரும் இசையமைப்பாளர் ஷான் ரோல்டனும் இந்த சரித்திர கற்பனைக்கு முடிந்தவரை உயிர் கொடுத்திருக்கிறார்கள்.
படத்தின் முதல் பாதியில் இருக்கும் ஒரளவு சுவாரஸ்யம் இரண்டாம் பாதி வரும்போது காணாமல் போகிறது. கதையினூடே வரும் கிளைக் கதைகள் காட்சிகளை காப்பாற்றுகிறது.

20 வருடங்களாக பேசிக்கொள்ளாத கணவன் மனைவி, 10 வருடங்களாக தன் மகளை வீட்டுக்குள்ளேயே பூட்டி வைத்துவிட்டு, அவள் இறந்து விட்டதாக ஊருக்கு சொல்லும் தந்தை, தங்கள் மகள்களை காப்பாற்ற அந்த ஊரில் இருக்கும் தாய்மார்கள் செய்யும் விஷயம் என பின்னப்பட்ட காட்சிகளில் கதையை வலுப்படுத்தும் காட்சிகள் இல்லை.வசனங்கள் மூலமாக மட்டுமே சொன்னதில் காட்சிகளின் வீரியம் குறைந்து போகிறது. வித்தியாசமான கதைக்களத்தை எடுத்த இயக்குனர் பொன்குமாரை அந்த முயற்சிக்காக பாராட்டலாம். கிளைமாக்ஸில் கௌதம் மக்களிடம் பேசி அவர்கள் மனதை மாற்றுகிறார் என்பதெல்லாம் டூ மச்.